சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்கள் இத்தாலிக்கு விமானத்தில் தப்பிச் செல்வதற்கு, முன்னைய அரசாங்கத்தில் இருந்த அரசியல்வாதிக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர் ஒருவரே, உதவி புரிந்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
வசீம் தாஜுதீன் விபத்தில் இறக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி, இதுபற்றிய விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதையடுத்தே, கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தாஜுதீன் குடும்பத்துக்கு நெருக்கமான சட்டவாளர் ஒருவர், இத்தாலிக்குச் சென்று, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் எங்கு தங்கியுள்ளனர், எங்கு வேலை செய்கின்றனர் என்பன போன்ற தகவல்களைத் திரட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசீம் தாஜுதீன், மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் தூண்டுதலின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா
28-08-2015
இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை, சிறிலங்கா கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது இந்தியா. இது தொடர்பான நிகழ்வு நேற்று கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இந்தக் கப்பலை நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்கவிடம் கையளித்துள்ளார்.
இந்தியக் கடலோரக் காவல்படையினர் வரஹா என்ற பெயரில் இயங்கிய இந்த ரோந்துக் கப்பல், 2006ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உதவுவதற்காக சிறிலங்கா கடற்படைக்கு இந்தியாவினால் வழங்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு தொடக்கம், சிறிலங்கா கடற்படையினால் கட்டணம் பெறாத குத்தகை அடிப்படையில், சாகர என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலே, நேற்றுமுறைப்படி இந்தியாவினால் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போர்க்கப்பல், 75 மீற்றர் நீளத்தையும், 11 மீற்றர் அகலத்தையும் கொண்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிப்பதற்கான நடவடிக்கையில் இந்தப் போர்க்கப்பல் முக்கிய பங்காற்றியது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், ஆழ்கடல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.