சென்னை: இலங்கை ராணுவத்துடனான இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி என்பதை அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி இலங்கை அரசுடன் கை கோர்த்த அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் கருணா விவரித்துள்ளார்.புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரீட்சை நிகழ்ச்சிக்கு கருணா அளித்த பேட்டி விவரம்
மதிக்கும் தலைவர்...
பிரபாகரன் நான் உண்மையிலேயே மதிக்கிற ஒரு தலைவர். ஏனெனில் அவருடைய ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாட்டை எவராலும் மறுக்க இயலாது. விடுதலைப் புலிகள் மீது ஒழுக்கக்கேடான குற்றச்சாட்டை இலங்கை ராணுவமே கூறினாலும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அப்படி சொல்வது, அவர்களது இயலாமைதான்.
ராணுவம் சுட்டது என்பது களங்கம்
அவ்வாறான ஒரு தலைவன் மடிந்தது என்பது உண்மையானதுதான். இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை கொச்சைப்படுத்தும் விதத்தில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார்; பின்னர் மகிந்த ராஜபக்சேவிடம் கொண்டுவரப்பட்டார், சித்ரவதை செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து இலங்கை ராணுவம் சுட்டது என்றெல்லாம் கூறுவது என்பது அவரது தியாகத்தைக் களங்கப்படுத்துவது என்பதாகும்.எதிரியிடம் பிடிபடாமல் இருக்க சயனைட் குப்பிகளை அணிபவர்கள் விடுதலைப் புலிகள். அப்படியான ஒரு வழக்கத்தை ஏற்படுத்திய பிரபாகரன் ராணுவத்திடம் சரணடைந்திருப்பாரா? நடக்கவே நடந்திராது. இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எவருக்கும் தெரியாத ஒரு அடையாளம் எவருக்கும் தெரியாத பிரபாகரனின் அடையாளம் ஒன்று எனக்கு தெரியும். முன்னர் பயிற்சியின் போது பிரபாகரனின் வலது தொடையில் ஷெல் பாய்ந்தது. போர்க்களத்தில் இருந்த பிரபாகரனின் உடலில் அந்த அடையாளம் இருந்தது.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பிரபாகரன் கைது செய்யப்பட்டு சுடப்பட்டிருக்கலாம் என்பதைவிட எனக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களைப் பற்றி நன்றாகவே தெரியும். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடைய நெற்றியில் சுட்டிருக்கலாம்.
அவருடைய பின்மண்டை பிளந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.. உண்மையில் என்ன நடந்தது எனில் இரவு 12 மணியளவில் பதுங்கித் தாக்க ராணுவம் ரெடியாக இருக்கிறது. அப்போது தப்பிப் போகும் போராளிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அவ்வளவுதான் இரவு தெரியும்.. அதிகாலை 4 மணியளவில் அங்கே ராணுவம் தேடுதலை நடத்தியபோதுதான் பிரபாகரன் உடல் கிடைத்திருக்கிறது.
பிரபாகரன் கோழையல்ல…
ஆகையால் பிரபாகரன் பிடிபட்டு உயிரிழந்திருப்பார் என்பதை ஆணித்தரமாக நான் ஏற்கமாட்டேன். நான் அவரால் வளர்க்கப்பட்ட போராளி. அவருடைய தியாகமெல்லாம் எனக்குத் தெரியும். கோழைத்தனமாக பிடிபட்டு மடிகிற அளவுக்கு அவர் இருந்திருக்க மாட்டார். அதனால் அவரை கொச்சைப்படுத்தாமல் ஒரு சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் போல போற்றலாம்.
இப்படித்தான் செய்திருக்க வேண்டும்
பிரபாகரனின் நெற்றியின் வலப்பக்கத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு மண்டையை பிளந்திருக்கிறது. பிரபாகரன் வலக்கை பழக்கம் கொண்டவர்.இடதுபக்கம்தான் பிஸ்டலை வைத்திருப்பார். இடதுபக்கத்தில் இருக்கிற பிஸ்டலை வலது கையால் எடுக்கிற ஒருநபர் நெற்றிக்கு நடுவிலோ அல்லது இடதுபக்கத்திலோ சுட இயலாது. அப்படி எடுக்கும் போது வலப்பக்க நெற்றியில்தான் சுட்டிருக்க முடியும்.அதுதான் உலகம் பார்க்கிற படங்களில் இருக்கிறது. மிக அருகில் வைத்து சுட்டுக் கொண்டதால்தான் மண்டை பிளவுபட்டிருக்கிறது; சற்று தொலைவில் இருந்து சுட்டிருந்தால் குண்டு ஊடுருவித் தான் சென்றிருக்கும். இவ்வாறு கருணா கூறியுள்ளார்.