”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களை மக்களால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குவதில்லை என்ற புதிய கொள்கை ஒன்றை வரைந்து கொள்வது நல்லது.
அது கட்சிக்கும் நல்ல பெயரைக் கொடுக்கும், தோல்வியுற்ற வேட்பாளர்களின் நெருக்கடிகளில் இருந்தும் பாதுகாப்புக் கொடுக்கும்”
பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான நியமனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு- தோல்வியுற்ற துரைரட்ணசிங்கத்துக்கும், மற்றொன்று வன்னி மாவட்டத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு பேருமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள்.
இதனால், இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி தமதாக்கிக் கொண்டு, ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு அநீதி இழைத்து விட்டதான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
குறிப்பாக தமிழரசுக் கட்சியின் மீது வெளிப்படையாக இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். தான்.
அதற்குப் பிரதான காரணம், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
அவர் தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ள நிலையில் தான், தமிழரசுக் கட்சி மீது அவர் காட்டமான கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.
தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்பும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு பல தெரிவுகள் இருந்தன.
அதேவேளை, கடுமையான அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேரிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே 9 பேர் கொண்ட தேசியப் பட்டியலை தேர்தல்கள் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தது.
அதில், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், நாச்சியார் செல்வநாயகம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்.
இதுவரையில் தேர்தல் வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படாதவர் என்ற வகையில், அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது.
ஆனால், தேர்தலில் இரண்டு ஆசனங்களை பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அந்த தேசியப் பட்டியலையே மறந்து போனது.
தம்மால் முன்மொழியப்பட்ட 9 பேரையும் கைவிட்டு விட்டு, தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகாத இருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடிவு செய்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 14 பேரில், 8 பேர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
திருகோணமலையில் இரா.சம்பந்தன், மட்டக்களப்பில் ஸ்ரீநேசன், யோகேஸ்வரன், வன்னியில் சாள்ஸ் நிர்மலநாதன், யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா, ஸ்ரீதரன், சுமந்திரன், சரவணபவன் ஆகியோரே அவர்கள்.
அதேவேளை, புளொட் சார்பில் யாழ்ப்பாணத்தில் தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பில் அமல் மாஸ்டர், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில், வன்னியில் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிவமோகன், ரெலோ சார்பில், வன்னியில் செல்வம் அடைக்கலநாதன், அம்பாறையில் கோடீஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த 2 தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தமிழரசுக் கட்சி வைத்துக் கொள்ளலாம் என்றும், மற்றையதை தமக்கு வழங்குமாறும் பங்காளிக் கட்சிகள் கேட்டுக் கொண்டன.
அதற்கிடையில், தமிழரசுக் கட்சிக்குள்ளேயும், தேசியப் பட்டியல் ஆசனத்துக்குப் போட்டி எழுந்தது.
ஆக, கூட்டமைப்பின் கையில் இரண்டு அப்பங்கள் தான் இருந்தன.
அவற்றை இரண்டு மாகாணங்களுக்கு என்ற அடிப்படையில் பகிருவதா, ஐந்து தேர்தல் மாவட்டங்கள் என்று பகிருவதா, நான்கு பங்காளிக் கட்சிகள் என்று பகிருவதா என்ற குழப்பமான ஒரு நிலை ஏற்பட்டது.
அதைவிட யாழ்ப்பாண மாவட்டத்தில், போட்டியிட்டு சிலநூறு விருப்பு வாக்குகளால் தோல்வியடைந்த தென்மராட்சியைச் சேர்ந்த அருந்தவபாலனுக்கு ஒரு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று அந்தப் பகுதியில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மற்றொரு பக்கத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கோரியது.
மற்றொரு பக்கத்தில் பெண் ஒருவருக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஒரு பகுதி பெண்கள் அமைப்புகள் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட மதினி நெல்சனுக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி அமைப்புகள் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தன.
மட்டக்களப்பில், இருந்து பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த எவரும் இம்முறை பாராளுமன்றம் செல்லவில்லை என்றும், எனவே அந்த தொகுதியைச் சேர்ந்த பொன்.செல்வராசா அல்லது அரியநேத்திரனை தெரிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து கல்முனைக்கு ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தேவை என்று கோரப்பட்டது.
ரெலோ தமது சார்பில், தோல்வியுற்ற நான்கு வேட்பாளர்களில் ஒருவரை நியமிக்குமாறு கேட்டது.
ஆக, மொத்தத்தில், பலமுனைகளில் அழுத்தங்களும் தெரிவுகளும் இருந்தன.
இந்தக் கட்டத்தில் வடக்கு, கிழக்கு என்ற ஆசனங்கள் பகிரப்பட வேண்டும் என்றும், ஒரு ஆசனம் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தது கூட்டமைப்பு தலைமை.
கிழக்கில் ஒருவரைத் தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்ட போது, அம்பாறையிலும், திருகோணமலையிலும். மட்டும் தான் கூட்டமைப்புக்கு தனியொரு ஆசனம் கிடைத்திருந்தது.
மட்டக்களப்புக்கு 3 ஆசனங்கள் கிடைத்ததால், போட்டிக்களத்தில் இருந்து அகற்றப்பட்டது.
அம்பாறையில் ஒரு உறுப்பினர் இருந்தாலும், அவர் முழுநேரமாக அங்கு பணியாற்றும் வாய்ப்பு இருந்தது.
அதேவேளை, திருகோணமலையில் இருந்து முழுநேரமாக பணியாற்ற முடியாத நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருந்தார்.
அவர் கூட்டமைப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடும் போது மாவட்டத்தின் நலன் கருதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கத்தை தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்த படியான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தவர். சம்பந்தனுக்கு மிகவும் நம்பிக்கையானவரும் கூட.
ஒரு வகையில் இரா.சம்பந்தன், தான் விரும்பியபடி, துரைரட்ணசிங்கத்தை தேசியப்பட்டியலுக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இதற்காக இரா.சம்பந்தன் முன்வைத்த நியாயங்கள் சரியானதா – தமது வசதிக்கேற்ப சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டாரா என்ற விமர்சனங்களும் உள்ளன.
இப்போது, வடக்கில் இருந்த ஒரு ஆசனத்தை எப்படியும் பெண் வேட்பாளருக்கே கொடுக்க வேண்டிய நிலை.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே தமிழரசுக் கட்சிக்கு 5 உறுப்பினர்கள் இருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட மதினி நெல்சனுக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் குறைவு.
ஆனால், வன்னியில் போட்டியிட்ட சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சிவமோகனிடம் தோல்வியுற்றவர். இதனால் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதுதொடர்பாக முன்வைத்த நியாயப்பாடுகளை ஏற்க ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தயாராக இல்லை. அவர் அந்தப் பதவியை எதிர்பார்த்திருந்தார்.
பாராளுமன்ற ஆசனத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் இழந்துள்ளதால், கூட்டமைப்புக்குள் அவர் முக்கியத்துவமிழக்கும் நிலை ஒன்று ஏற்படக் கூடும் என்ற கருத்தும் உள்ளது.
ஏனென்றால், கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் அவர் எல்லா சந்திப்புகள், பேச்சுகளிலும் கலந்து கொண்டார். வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லாத சூழலில் அவரால் அப்படி தொடரமுடியுமா என்ற கேள்வி இருக்கிறது.
ஏற்கனவே கடந்தவாரம், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடனான சந்திப்புக்கு அவர் அழைக்கப்படவில்லை.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னரே புளொட் கூட்டமைப்புக்குள் வந்தாலும், அந்தக் கட்சியின் தலைவர் சித்தார்த்தனை கூட்டமைப்பின் சந்திப்புகள் பேச்சுக்களில் காண முடிவதில்லை.
அதற்கு முக்கிய காரணம் அவர் பங்காளிக் கட்சித் தலைவராக இருந்தாலும், பாராளுமன்ற உறப்பினர் என்ற அந்தஸ்து அவருக்கு இருக்கவில்லை.
இப்போது அது அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் இருந்து அது பறிபோயிருக்கிறது.
இதனால், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஓரம்கட்டப்படும் நிலை ஒன்று ஏற்படக் கூடும்.
அதைவிட ஏற்கனவே கூட்டமைப்புக்குள் நிலவும் பிரச்சினைகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியில் போட்டுடைத்து பூதாகாரப்படுத்திய விவகாரத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மத்தியில் அதிருப்திகள் இருந்ததையும் மறுக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் இரா.சம்பந்தன், சுமந்திரனின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் பின்புலத்தில் இருந்ததாக கூறப்பட்டாலும் அதனை அவர் உடனடியாகவே நிராகரித்திருந்தார்.
இந்தச் சூழலில், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்குச் சாதகமான ஒரு நிலை இருக்கவில்லை.
அவர், யாழ்ப்பாணத்தில் விருப்பு வாக்குகளில் ஏழாவது இடத்தில் இருந்தார்.
இதனால், ஆறாவது இடத்தில் இருந்த அருந்தவபாலனைக் கடந்து அவருக்கு வாய்ப்பு வழங்க முடியாது என்றார் இரா.சம்பந்தன்.
எனினும், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில், தேசியப் பட்டியல் ஆசனத்தை கூட்டமைப்புத் தலைமை வழங்கியிருக்கலாம்.
ஆனால், அவ்வாறு வழங்கினால், இதேபிரச்சினை வடக்கு மாகாணசபைத் தேர்தலில், வந்த போது, கூட்டமைப்புத் தலைமை எடுத்த முடிவை அது கேள்விக்குள்ளாக்குவதாக அமையும்.
அப்போதும் இரு போனஸ் ஆசனங்கள் கிடைத்தன. அதில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதிக்கு ஒதுக்கப்பட்டது. மற்ற இடத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டது.
அந்த தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு படுதோல்வி கண்டிருந்தார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி.
அவருக்கு பங்காளிக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அந்த ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை நிராகரித்த கூட்டமைப்புத் தலைமை, சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்தது.
இப்போது சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கட்சியின் தலைவர் என்ற வகையில் ஆசனத்தை ஒதுக்கினால், அது ஆனந்தசங்கரி விடயத்தில் கூட்டமைப்பு தலைமையின் முடிவு தவறு என்றாகி விடும்.
எவ்வாறாயினும், தேசியப் பட்டியல் ஆசனத்தை சுழற்சிமுறையில் பகிர்ந்து கொள்ளும் யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை கூட்டமைப்பு தலைமை நிராகரித்திருக்கிறது.
எவ்வாறாயினும், தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்று பங்காளிக் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து வலுவாகவே உள்ளது. இந்த விடயத்தில் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சியின் மீது அதிருப்தி உள்ளதை மறுக்க முடியாது.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் மேலாதிக்க மனோபாவத்தில் செயற்படுவதான ஒரு கருத்து கூட்டமைப்புக்குள் உள்ளது. தேர்தல் வெற்றி அவர்களுக்கு இன்னும் கூடுதல் தலைக்கனத்தைக் கொடுத்திருக்கலாம்.
ஆனால், கூட்டமைப்பு என்ற வகையில் தான், இந்த தேர்தல் எதிர்கொள்ளப்பட்டது.
எனவே பங்காளிக் கட்சிகளுடன் உறவுகளை சீரான முறையில் கொண்டு செல்ல வேண்டியது முக்கியமான விடயம்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேசியப் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருந்தவர்களைத் தெரிவு செய்தால் இந்தளவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது. ஆனால் அதனை ஒரு டம்மியாக வைத்துக் கொண்டு தோல்வியுற்றவர்களை பாராளுமன்றம் அனுப்ப முற்பட்டது தான் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதில்லை என்ற புதிய கொள்கை ஒன்றை வரைந்து கொள்வது நல்லது.
அது கட்சிக்கும் நல்ல பெயரைக் கொடுக்கும், தோல்வியுற்ற வேட்பாளர் களின் நெருக்கடிகளில் இருந்தும் பாது காப்புக் கொடுக்கும்.
விடுதலை புலிகளுக்கு அமெரிக்காவில் ஏவுகணை வாங்க, FBIயின் வலையில் விழுந்த கதை