தாலிபன் இயக்கத்தின் முன்னாள் தலைவர் முல்லா ஓமர் உயிரிழந்த செய்தியை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்துவைத்திருந்ததை ஆப்கானிய தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
முல்லா ஓமருக்கு அடுத்த இடத்தில் இருந்த, தற்போதைய தலைவர் முல்லா அக்தர் மொன்சூரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பிலேயே, இந்த தகவல் மிகவும் நுட்பமான முறையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் திகதி முல்லா ஓமர் உயிரிழந்ததாக, ஆப்கானிய உளவுத்துறை முதலில் அறிவித்திருந்த செய்தியை, முதல்தடவையாக தாலிபன்கள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாலிபன்கள், கடந்த ஜூலை வரைகூட தங்களின் அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளை முல்லா ஓமரின் பெயரிலேயே வெளியிட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒமார் – வெளிவராத உண்மைகள்
தாலிபான் தலைவர் முல்லா ஒமார் காலமாகி விட்டார். ஆனால், அவரது மரணச் செய்தி, அவர் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர், தற்போது தான் அறிவிக்கப் பட்டுள்ளது. ஏன் இந்த கால தாமதம்?
வெளியில் இருப்போர் நினைத்ததற்கு மாறாக, கடந்த தசாப்த காலமாக தாலிபான் முல்லா ஒமார் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை.
இருப்பினும் அவரை சுற்றிப் பின்னப்பட்ட தலைமை வழிபாடு தொடர்ந்தும் இருந்தது. அதுவே முரண்பாடுகள் கொண்ட தளபதிகளையும், அனைத்துப் போராளிகளையும் ஒன்று சேர்க்கும் சக்தியாக இருந்தது.
கடந்த ஆறாண்டுகளாக, பிரபாகரன் மரணத்தில் மர்மம் இருப்பதாக புலி ஆதரவாளர்கள் சொல்லி வந்தது போன்று தான், தாலிபான் தலைவர்களும் கூறிக் கொண்டிருந்தார்கள்.
முல்லா ஒமார் மரணமடைந்தது தெரிந்தால், இயக்கத்திற்குள் பிளவு ஏற்படும் என்று ஆவர்கள் அஞ்சி இருக்கலாம்.
முல்லா ஒமார் யார்? அவரது அரசியல் பின்னணி என்ன? ஒரு மேற்கத்திய எழுத்தாளர், முல்லா ஒமார் பற்றிய சுயசரிதை எழுதுவதற்காக, ஒமாரின் மெய்க்காப்பாளர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள் என்று பலரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது தான், அங்குள்ள உண்மை நிலவரம் மேற்குலக பிரச்சாரத்திற்கு மாறாக இருப்பதை கண்டுகொண்டார்.
மேற்குலகில் செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு மாறாக, முல்லா ஒமார் என்றைக்குமே அமெரிக்க எதிர்ப்பாளராக இருக்கவில்லை!
உண்மையில் அவர் தனது அரசுக்கு அமெரிக்க ஆதரவை எதிர்பார்த்தார்! அப்போது தாலிபான் இயக்கம், ஆப்கானிஸ்தானின் 95 வீத பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
ஆனால், ஐ.நா. மன்றம் முல்லா ஒமாரை ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. தாலிபான் அரசாங்கத்தையும் அங்கீகரிக்கவில்லை.
மேற்குலகில், “பின்லாடனின் அல்கைதாவும், தாலிபானும் ஒன்று” என தவறான தகவல்கள் பரப்பப் பட்டன.
உண்மையில், இரண்டுமே வெவ்வேறு குறிக்கோள்களை கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தனது ஆட்சியை நிலைநிறுத்தி, தான் நம்பிய மதக் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசு அமைப்பது மட்டுமே முல்லா ஒமாரின் நோக்கமாக இருந்தது.
அதற்கு அமெரிக்கா உதவும் என்று நம்பியுள்ளார். அமெரிக்க பெற்றோலிய நிறுவனம் ஒன்று, ஆப்கானிஸ்தான் ஊடாக எண்ணைக் குழாய் அமைக்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
அதன் மூலம், அமெரிக்காவுக்கும், தாலிபான் அரசுக்கும் பொருளாதார நன்மை உண்டாகும் என்று நம்பினார்.
இருப்பினும், முல்லா ஒமார் எதிர்பார்த்ததற்கு மாறாக சர்வதேச நிலைமைகள் மாறிக் கொண்டிருந்தன.
அமெரிக்காவும், தாலிபான் அரசும் சிறிது காலம் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும், பின்னர் தொடர்புகள் துண்டிக்கப் பட்டன.
உண்மையில், அமெரிக்கா தான் தொடர்பை முதலில் துண்டித்துக் கொண்டது. அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் முல்லா ஒமாருக்கு ஏமாற்றமளிப்பதாக அமைந்திருந்தன.
9/11 தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
அந்தத் தாக்குதலில் பின்லாடனுக்கு பங்கிருந்ததோ இல்லையோ, முல்லா ஒமாருக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் பின்லாடனும், அல்கைதாவும் தனித்துவமாக இயங்கின.
இருப்பினும், அமெரிக்கா தொடர்ந்தும் 9/11 தாக்குதலில் தாலிபானை சம்பந்தப் படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.
அநேகமாக, கீழைத்தேய பண்பாடு, பழக்க வழக்கங்கள், மேற்குலகில் தவறான புரிதலை கொடுத்துள்ளன.
முல்லா ஒமார் பின்லாடனை ஒப்படைத்த மறுத்ததற்கு பின்னால் கொள்கை, கோட்பாடு எதுவும் காரணமாக இருக்கவில்லை.
வீட்டுக்கு வந்த விருந்தாளியை எதிரியிடம் பிடித்துக் கொடுக்கக் கூடாது என்ற பண்பாடு காரணமாக இருந்தது.
இருந்தாலும், முல்லா ஒமார் பல தடவைகள் பின்லாடனை ஒப்படைக்க முன்வந்தார்.
9/11 தாக்குதலுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால், பொதுவானதொரு சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தி விசாரிப்பதற்கு உதவும் வகையில், பின்லாடனை ஒப்படைக்க விரும்பினார்.
ஆனால், அந்த நிபந்தனைக்கு அமெரிக்க தரப்பில் மௌனம் நிலவியது. தாலிபானுடன் எந்தவித தொடர்பையும் ஏற்படுத்தாத அமெரிக்கா, “தாலிபானும், அல்கைதாவும் ஒன்று” என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே, முல்லா ஒமாரை விட புத்திசாலியான, வெளியுலகம் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த பின்லாடன் எச்சரிக்கையாக நடந்து கொண்டார்.
தாலிபானுடன் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளுமாறு தனது போராளிகளை எச்சரித்தார்.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் நிலைமை தலை கீழாக மாறியது.
அமெரிக்கப் படைகள் நியமித்த ஹாமிட் கார்சாய் பொம்மை ஆட்சியாளராக இருந்தார்.
அப்போது தாலிபான் சரணடைவதற்கு முன்வந்தது. தம்மை புதிய அரசில் சேர்த்துக் கொண்டால், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதாகவும், பின்லாடனை கையளிப்பதாகவும் முல்லா ஒமார் கார்சாயுக்கு தூது அனுப்பினார்.
கார்சாயும் அதனை ஏற்றுக் கொண்டார். இருப்பினும் அமெரிக்க படைகள் தடைக்கல்லாக இருந்தன.
டொனால்ட் ரம்ஸ்பெல்ட்
அமெரிக்கர்களினால் ஆக்கிரமிக்கப் பட்ட ஆப்கானிஸ்தானின் உண்மையான அதிகாரம், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டிடம் இருந்தது.
அவர் தாலிபான்கள் சரணடைவதை விரும்பவில்லை. ஏன்? தாலிபான் சரணடைந்து விட்டால், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” உடனடியாக முடிவுக்கு வந்து விடும்.
அதனால் அமெரிக்காவின் நோக்கங்கள் நிறைவேறாமல் போகலாம். போர் தொடர வேண்டுமானால் எதிரி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும்.
பெரும்பாலான தாலிபான் போராளிகள், ஆயுதங்கள் எதுவுமின்றி தத்தம் வீடுகளில் இருந்தனர்.
அவர்கள் யாரும் யுத்ததிற்கு தயாராக இருக்கவில்லை. இருப்பினும், “தாலிபானை தேடியழிப்பது” என்ற பெயரில், முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குள் அமெரிக்க இராணுவம் புகுந்தது.
தாலிபான் உறுப்பினர்களை தேடி, அவர்களது உறவினர்கள் துன்புறுத்தப் பட்டனர்.
அந்த அடக்குமுறை காரணமாக, தாலிபான் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தலைமறைவாக வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இவ்வாறு தான் அமெரிக்கப் படைகள் “புதிய எதிரி” ஒன்றை உருவாக்கின.
ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் பல பிரதேசங்களில், உள்ளூர் யுத்த பிரபுக்களின் வன்முறை தான் அதிகமாக இருந்தது.
பலர் அதிகாரப் போட்டி காரணமாகவும் குழப்பம் விளைவித்தனர். எதிராளிக்கு நிதி செல்வதை தடுப்பதற்காக பாடசாலையை புல்டோசர் கொண்டு இடித்த யுத்த பிரபுக்களுமுண்டு.
உள்ளூர் யுத்தபிரபுக்களின், தனிப்பட்ட சுயநலம் காரணமாக நடந்த வன்முறைகள் யாவும், மேற்குலக ஊடகங்களில் “தாலிபான் தாக்குதல்களாக” சித்தரிக்கப் பட்டன.
ஒரு கட்டத்தில், இந்த “தவறான தகவல்கள்” தாலிபானின் வளர்ச்சிக்கு உதவின.
நீண்ட காலமாக, புதிய தாலிபான் இயக்கத்திற்கு முல்லா ஒமார் தலைமை தாங்குவதாக தவறாக கருதப் பட்டது.
உண்மையில் புதிய தலைமுறை தாலிபான் தளபதிகள் எல்லோரும் முல்லா ஒமாருக்கு விசுவாசமாக இருக்கவில்லை.
“முல்லா ஒமார் பின்லாடன் என்ற அரேபியரை கொடுக்காமல் வைத்துக் கொண்டிருந்த படியால் தான், அமெரிக்கப் படைகள் வந்திறங்கி நாட்டை நாசமாக்கி விட்டார்கள்…” என்று அதிருப்தி தெரிவித்தவர்களும் உண்டு.
இருப்பினும், முல்லா ஒமார் அனைவராலும் மதிக்கப் பட்ட தலைவராக இருந்தார். இனக் குழுத் தலைவர்கள் யாரும் கடைசி வரையிலும் அவரைக் காட்டிக் கொடுக்கவில்லை.
(De Groene Amsterdammer சஞ்சிகையில் வெளியான கட்டுரையை தழுவி எழுதப் பட்டது.)
மூலக் கட்டுரையை வாசிப்பதற்கு: Mullah Omar 1950-1962 – 23 april 2013 http://www.groene.nl/artikel/het-einde–11
-கலையரசன்-