விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தேவையான எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று இலங்கையின் சட்டமா அதிபர் (அட்டார்னி ஜெனரல்) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி மக்கள் விடுதலை முன்னணி கடந்த ஜனவரியில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் குமரன் பத்மநாதனுக்கு எதிராக 190க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இன்று விசாரணைக்காக வழக்கு அழைக்கப்பட்டிருந்த போது, கே.பி.க்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் நடந்துவருவதாக அரசதரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், மேலதிக விசாரணைக்காக காலஅவகாசம் வழங்குமாறும் அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இதன்படி வழக்கு விசாரணையை ஏதிர்வரும் அக்டோபர் 28 ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம், அன்றைய தினம் குமரன் பத்மநாதனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யமுடியுமா என்பது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சட்டமா அதிபரின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகளின் தலைவராக செயற்பட்டு, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பெரும் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அண்மைய காலத்தில் அரசாங்கம் தெரிவித்து வந்ததாகக் கூறிய வழக்கறிஞர் சுனில் வட்டகல, அவ்வாறான ஒரு நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவதற்கு ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் கூறும் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply