ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் மூவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கைது செய்யப்படுவரென சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
இதேவேளை, லண்டனில் வசித்து வரும் இலங்கை பிரஜை ஒருவரும் தாஜுதீனின் கொலை விவகாரம் குறித்து தகவல் அறிந்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. “சந்தேக நபர்கள் இத்தாலிக்கு பறந்துவிட்டதாக கூறும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.
நிச்சயமாக லண்டனில் வசிக்கும் நபர் குறித்தே இவ்வாறுகூறப்படுகிறது. அவர் ஒரு சிவிலியன் மாத்திரமேயாகும். ஆனாலும் அவரிடமிருந்து பல தகவல்களை அறியலாம் என நம்பு கின்றோம். என்ற போதும் முக்கிய மான சந்தேக நபர்கள் இலங்கை யிலேயே உள்ளனர்.
அவர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். எச்சந்தர்ப்பத்திலும் அவர்களால் நாட்டை விட்டுச் செல்ல முடியாது” என விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார். “எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முன்பதாக சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்” என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
லண்டனில் வசித்து வரும் மேற்படி நபர், சர்ச்சைக்குரிய இலங்கை இராஜதந்திரி ஒருவரின் உதவிக்கூடாகவே நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தற்போது குறித்த இராஜதந்திரியின் மீதும் வெவ்வேறு குற்றச்செயல்களுக்காக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார்.
தாஜுதீனின் கொலைக்கு முன்பாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தங்குமிடத்தில் முக்கிய இரகசிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருப்பதாக இம்மாத ஆரம்பத்தில் சி.ஐ.டி.யினருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் கடந்த ஆட்சியாளர்களுடன் மிகவும் நெருக்கமான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
ரகர் விளையாட்டு வீரரின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மோட்டார் வாகன விபத்து இடம்பெறவில்லை என எற்கனவே சி.ஐ.டி. உறுதியாக கூறியிருந்தது.
மேலும் தாஜுதீனின் சடலம் வாகனத்தின் சாரதிக்குரிய ஆசனத்தில் இருக்கவில்லை. அதற்கு அருகிலுள்ள முன் ஆசனத்திலேயே இருந்ததாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் சம்பவத்தைத் தொடர்ந்து ஒருசில செக்கன்களில் வாகனம் தீப்பற்றி எரிந்த போதும் எரிபொருள் தாங்கி அரைவாசிக்கு நிரம்பியிருந்ததாகவும் அவ்வதிகாரி கூறினார்.
தாங்கியின் அரைவாசிக்கு எரிபொருள் உள்ள நிலையில் வாகனமொன்று தீப்பற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வாகனத்தை சோதனையிட்ட போது அதில் விபத்து இடம்பெற்றதற்கான எந்தவொரு தடயமும் இருக்கவில்லை. கொலையை மறைப்பதற்காக விபத்து சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து நாரஹேன்பிட்டி பொலிஸாரே அதனை விபத்து என கூறியிருந்தனர். இதனால் பொலிஸார் அறிக்கைகளில் ஏதும் மாற்றங்களை செய்திருக்கலாமோ என்றும் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த தாஜுதீனின் கொலை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவரது சடலம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது. இச்சோதனை தொடர்பிலான விரிவான அறிக்கை செப்டெம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
மேலும் தாஜுதீனை கடத்த பயன் படுத்திய வாகனம் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர். குறித்த வாகனம் முன்னாள் முதற் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையில் நடத்தப்பட்ட சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கு கையளிக் கப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.