விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மஹிந்த ராஜபக்ஷ அரசின்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்கள் பல தளங்களில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் – குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

நேர்காணலை பார்த்த ஓவ்வொருவரும் – அதன் உள்ளடக்கங்களை ஒவ்வொன்றாக உருவி எடுத்து – தமக்கு தமக்கு தேவையான விடயங்களை பொதுவெளியில் செய்தியாக முன்வைக்கும்போது எது சுவாரஸ்யம்மிக்கது என்ற அடிப்படையிலும்  எது ஜனரஞ்சகசுவை  மிக்கது என்ற கோதாவிலும் எடைபோட்டு அவற்றை மட்டும் தனி அலைவரிசையில் தாங்கி சென்று அவற்றுக்கு வியாக்கியானம் கொடுப்பதில் குறியாக இருக்கின்றனர்.

இந்த நேர்காணலில் உள்நாட்டு அரசியல் பேசப்பட்டிருக்கிறது. இலங்கையை மையமாகக் கொண்ட பூகோள அரசியல் பேசப்பட்டிருக்கிறது.

போர்க் குற்றங்கள் பேசப்பட்டியிருக்கின்றன. அதற்கான பொறுப்புக்கூறல் பற்றி பேசப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி பேசப்பட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகள் பற்றி பேசப்பட்டியிருக்கிறது. அவர்கள் தொடர்பாகவும் இலங்கையினதும் ஒட்டுமொத்த இராணுவ விவகாரங்கள் தொடர்பாகவும் ஆழமாகப் பேசப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா பற்றி பேசப்பட்டிருக்கிறது. இந்தியா தொடர்பான விடயத்தில் கருணா கூறிய பல கருத்துக்கள் மேலே குறிப்பிட்ட எல்லா தலைப்புக்களுக்கும் ஒரே பதிலாகவும் அமைந்திருக்கிறது.

அதாவது, முதல் தடவையாக இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த கருணா, நடந்து முடிந்த போரில் இந்தியாவின் நேரடி பங்களிப்பு குறித்து தனது ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியிருக்கிறார்.

‘இறுதிக்கட்ட போரின்போது வன்னியில் தளமமைத்திருந்த இந்தியப் படையினர், இலங்கை இராணுவத்தினருக்கு ஆட்லறி மற்று செய்மதி படங்களின் ஊடாக தாக்குதல் நடத்தும் பிரதான இராணுவ மூலோபாய உத்திகளுக்கு களத்தில் பக்கபலமாக நின்று யுத்தம் நடத்தினார்கள்’ என்று கூறியுள்ள கருணா, விடுதலைப்புலிகளை அழிப்பதில் ஒரே குறியாக செயற்பட்ட இந்தியா தனது காரியத்தை வெற்றிகரமாக சாதித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயங்கள் யாவும் முன்னர் ஊடகங்களில் அவ்வப்போது ஹேஸ்யங்களாகவும் மூன்றாம்நிலை அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிவந்திருந்தபோதும், போரை நடத்திய மஹிந்த அரசு தரப்பின் மிகமுக்கியமான ஒருவரின் ஊடாக – அதாவது, அந்த அரசில் பிரதிஅமைச்சு பதவியையும் கட்சியின் பிரதித் தலைவர் என்ற பதவியையும் வகித்தவரின் ஊடாக சொல்லப்பட்டிருப்பது ஆழமாக இன்றைய நிலையில் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மஹிந்த அரசுக்கு இராணுவ ரீதியாக உதவியளிக்கக் கூடாது என்று இந்தியாவின் நடுவண் அரசை நோக்கி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் தமிழகத்திலிருந்து அழுத்தங்கள் வழங்கப்பட்டபோதும் –

பொதுமக்களுக்கு எதிரான இலங்கையின் போருக்கு இந்தியா ஆதரவளிக்காது என்றும் அப்படியே இராணுவ உதவிகளை வழங்கினாலும் கனரக ஆயுதங்களை இலங்கைக்கு வழங்காது என்றும் அதிலும் குறிப்பாக பாரிய அளவில் பங்கம் விளைவிக்கும் போர் உபகரணங்களை இலங்கைக்கு வழங்காது என்றும் டெல்லி தரப்பு தன்னிடம் கோரிக்கை விடுத்த எல்லோரிடமும் அடித்துக்கூறியது.

ஆனால், கருணா தற்போது தெரிவிக்கும் விடயங்கள், போரின்போது இந்தியா மேற்கொண்ட ‘இரகசியமான கைங்கரியங்கள்’ அனைத்தையும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கின்றன.

இவ்வாறான ஒரு பின்னணியில், தற்போது அனைத்து தரப்பினரும் அசைபோடும் போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தினை இலங்கைக்கு எதிராக கொண்டுவருவதற்கு இந்தியா அனுமதியளிக்குமா?

அவ்வாறான ஒரு விசாரணை இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும்போது அந்த விசாரணை போரில் நேரடியாக பங்குகொண்ட இந்திய படையினரையும் இந்த விசாரணையின் உள்ளே இழுத்து சென்று துவம்சம் செய்யாதா?

இந்தக் கேள்விகளுக்கு மஹிந்த காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் காத்திரமான பதிலாக அமையும்.

Sri Lanka's President Rajapaksa attends the Executive Session III at the Commonwealth Heads of Government Meeting in Perth
அதாவது, மஹிந்த ஆட்சிக்காலத்தில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்பு துறைமுக கடற்பரப்புக்கு வந்தது தொடர்பாக சீற்றமடைந்த இந்தியா, பாதுகாப்பு செயலர் கோட்டாபயவை தொடர்புகொண்டு ‘சீனாவுடன் நீங்கள் காட்டும் ஒட்டுறவென்பது எல்லைமீறி போகிறது போலத்தெரிகிறது.

இந்த நிலைமை தொடருமானால், இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டிவரும்’ என்று பொரிந்து தள்ளியபோது –

அதற்கு மிகவும் நிதானமாக பதிலளித்த கோட்டாபய ‘அவ்வாறு நீங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்வீர்களேயானால், இறுதிக்கட்ட போரின்போது இந்திய தரப்பினர் எங்களோடு பேசிய விடயங்கள் குறித்த பதிவு செய்த உரையாடல்கள் மற்றும் போருக்கான இந்தியாவின் உதவிகள் என்பவை குறித்து நாங்களும் விரிவாக எல்லோருக்கும் தெரியும்படி வெளியிடவேண்டியிருக்கும்’ என்று கூறியதுடன் இந்தியா மௌனமாகியது.

மஹிந்த ஆட்சியிலிருக்கும்வரை சீனாவின் ஊடாகவும் அதன் அரவணைப்பில் திளைத்துக்கொண்டிருந்த மஹிந்தவின் ஊடாகவும் இரட்டை தலைவலியில்‘திருடனுக்கு தேள்கொட்டியது போல’ வலியோடு வளைந்து கொடுத்துக்கொண்டிருந்த இந்தியா, தற்போது மைத்திரியின் ஆட்சி மாற்றத்தோடு சற்று பெருமூச்சுவிட ஆரம்பித்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்த பின்புலத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தில் தனது பொருளாதார சகோதரமான அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா மேற்கொண்டிருக்கும் ‘உள்நாட்டு விசாரணை பொறிமுறை‘ என்ற காய்நகர்த்தலை –

தேர்தல் முடிவுற்ற கையோடு இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தெளிவாக கூறி சென்றிருக்கிறார்.

இந்த களநிலை யதார்த்தங்களை எடுத்து நோக்கினால், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் எதிர்காலம் என்ன?

ஐ.நா. சபையில் எதிர்வரும் செப்டெம்பரில் நடக்கப்போவது என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும்தான் பதில் சொல்லவேண்டும் என்றில்லை. சாதாரண பொதுமகனுக்கே புரியக்கூடிய வெளிப்படை உண்மைதான் இது.

சரி. கருணாவின் நேர்காணலில் கூறப்பட்டுள்ள இன்னொரு முக்கியமான விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றியதாகும்.

இவ்வளவுகாலமும் தென்னிலங்கையின் செல்லப்பிள்ளையாக பேரினவாத கட்சிகள் கொஞ்சிக்குலாவிய தீடீர் ஜனநாயகப் போராளியாக போற்றப்பட்ட கருணா, தற்போது கனவுகண்டு இடையில் எழும்பி புலம்புபவர்போல, தான் பிரதித் தலைவராக அங்கம் வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இனவாத கட்சி என்றும் துவேச கட்சி என்றும் இந்தக் கட்சியை தூக்கியெறிந்துவிட்டு வருவதற்கு தான் தயார் என்றும் கூறி விடுதலைப்புலிகளின் தலைவரை துதிபாட ஆரம்பித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கையில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்று அங்கு கூடிய பெரும்திரளான தமிழ்மக்கள் மத்தியில் பேசும்போது ‘தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்’ என்று அடித்துக்கூறிவிட்டு –

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியின் சுகானுபவங்களை சுகித்துக்கொண்டிருக்கும்போது ‘தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்தான் இந்த நாட்டுமக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும்’ என்று தான் முன்னர் பேசிய வசனத்தில் பெயரை மட்டும் மாற்றிவிட்டு, தனது விசுவாசத்தின் வடிவத்தை மாற்றிய கருணா –

இன்று மீண்டும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தியாகி என்றும் போற்றுதற்குரிய தலைவர் என்றும் சித்தத்தெளிவேற்பட்டவராக அருள்வாக்கு கூற ஆரம்பித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கவல்ல சரியான அரசியல் சக்தி என்று கூறியிருக்கிறார்.

177539900Sampanthan-800x450இன்னும் இரெண்டொரு நாட்களில் ‘சம்பந்தன் தலைமையில்தான் தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும்’ என்று அவர் அறிக்கை விட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

2004ஆம் பொதுத்தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண வேட்பாளர்களை தனக்கேற்றவாறு செயற்படுத்துவதற்காக கடத்திச் சென்று பின்னர் விடுவித்தது மட்டுமல்லாமல், அக்காலப்பகுதியில் கிழக்கில் இடம்பெற்ற கூட்டமைப்பின் முக்கயஸ்தர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்கள் உட்பட பலரின் படுகொலைகள் தொடர்பாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்ட கருணாவுக்கு –

தற்போது கூட்டமைப்பின் மீது ஏற்பட்டுள்ள திடீர் ஞானோதயத்தின் பின்னணி என்ன?

இந்த இடத்தில், கொள்கை மாறாத துரோகமே உருவான ஒரு நபரது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்றவகையில் தமிழ்க் கூட்டமைப்பு காணப்படுகிறதா அல்லது கூட்டமைப்புக்கு வலைவீசும் மர்மமான திட்டத்துடன் கருணா களமிறக்கப்படுகிறாரா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

ஆனால், கருணாவின் இந்த புதிய நிலைப்பாடானது அரசியல் ரீதியானதோ இராஜதந்திர ரீதியானதோ அல்ல. இது முழுக்க முழுக்க புலனாய்வு ரீதியானது என்பதை குறிப்பிட்ட அவரது செவ்வியினது பல பாகங்கள் அவரையும் அறியாமல் பல இடங்களில் வெளிக்காட்டி நிற்கிறது.

புலனாய்வுத் திட்டங்கள் எனப்படுபவை அவை தன்முனைப்பு பெறுவதற்கு முன்னர் தான் சார்ந்த செயற்பாட்டு தளத்தினை மறுதலிப்பதன் ஊடாகவே தன்னை முன்னிறுத்துவது வழக்கம்.

அவ்வாறான மறுதலிப்பு நகர்வின்போது அந்த திட்டங்கள் ஒருபோதும் அதன் உண்மையான பின்னணிகளை சந்தேகத்துக்கு உட்படுத்துவதில்லை.

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவுக்கு எதிரான பொதுவெளியில் ஏற்கெனவே ஓரளவுக்கு அறியப்பட்ட போர்க்குற்றச் சாட்டுக்களுடன் களமிறங்கும் கருணா, எந்தப் பாதையில் பயணிக்கிறார் என்பதும் அவர் யாரால் செயற்படுத்தப்படுகிறார் என்பதும் புரிந்துகொள்ளமுடியாத புதிர் அல்ல.

சிங்களத்தின் குகைக்குள்ளிருந்து கர்ஜித்த எத்தனையோ சிங்கங்களுக்கு கடந்த காலங்களில் துப்பாக்கிகளால் விடைகொடுத்து சிலை வைத்த வரலாறுதான் கொழும்பு அரசியல்.

அவ்வாறான ஒரு பின்னணியில், இவ்வளவு துணிச்சலுடன் இன்னமும் பேரினவாத கட்சியொன்றில் இருந்துகொண்டு, அந்தக் கட்சியையும் வல்லரசுகளையும் ஒருவர் வம்புக்கு இழுக்கிறார் என்றால், அவர் தமிழ் மக்களுக்கு ஏதோ ‘பெரிதாக’ செய்ய விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்.

இலங்கையில் தற்போது ஏற்படுவதற்கு ஆரம்பித்துள்ள அரசியல் ஸ்திரத்தன்மை என்பது இந்தியாவின் பாரம்பரிய அரசியல் – இராஜதந்திர நிகழ்ச்சி நிரலுக்கு ஒவ்வாத சமன்பாடாகும்.

தமிழர் அரசியலிலேயே அதற்கான வரலாற்றுக்காரணிகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆயுதக்குழுக்களின் உருவாக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழ்த் தேசிய அரசியலில் இந்தியா மேற்கொண்ட பிரித்தாளும் தந்திரமும் – ஜே.வி.பியின் முக்கியஸ்தர் சோமவன்ஸ அமரசிங்கவை கிளர்ச்சிக்காலத்தில் பாதுகாத்து வெளியேற்றி பின்னர் நவஅரசியல் யுகத்தின்போது மீண்டும் அவரை களத்தில் இறக்கிவிட்டு குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க தலைப்பட்டது போன்ற சம்பவங்கள் முதல் ஆட்சிமாற்றங்களுக்காக ஆட்களை வாங்கும் இன்றைய அரசியல்வரை தென்னிலங்கையிலும் –

இந்தியா மேற்கொள்ளும் காய்நகர்த்தல்கள் யாவும் தனது நலனை முன்னிலைப்படுத்தியதே ஆகும். அந்த வகையில், விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உதவியுடன் பிரிக்கப்பட்டு மஹிந்தவால் வளர்க்கப்பட்டு தற்போது எந்த பின்னணியும் இல்லாத தளத்திலுள்ள கருணாவை இந்தியா தத்தெடுத்திருக்கிறது.

அமெரிக்க – இந்திய புலனாய்வு இயந்திரம் மஹிந்தவின் அணியிலிருந்த பொன்சேகாவை பிரிந்தெடுத்து அவரால் தாம் விரும்பிய மாற்றத்தைக் கொண்டுவரமுடியாமல் போனபோதுகூட சளைக்காமல் மீண்டும் முயற்சி செய்து மைத்திரி விடயத்தில் வெற்றிகண்டது.

ஆனால், தற்போதைய இராஜதந்திர – புலனாய்வு பந்தயத்தில் கருணா எனப்படுபவர் ஏற்கெனவே பணம் கட்டி வெற்றிபெற்ற பந்தயக் குதிரை. அதனால்தான் இரட்டிப்பு நம்பிக்கையுடன் மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்மக்களின் அரசியல் இருப்புக்கும் எதிர்காலவிடிவுக்கும் கருணா துரோகியா அல்லது கருணா மட்டும்தான் துரோகியா என்பதற்கு இறந்தகாலம் பல பதில்களை சொல்லிவிட்டது.

அதே பதில்களைத்தான் வருங்காலமும் கூறப்போகின்றதா என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் சொல்லவேண்டும்

-ப.தெய்வீகன்

 

பிரபாகரன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்’ – கருணா பரபரப்பு தகவல்? கருணா விவரிப்பு- (வீடியோ)

“புலிகள் ஓர் ஓழுக்கமான இயக்கம், பிரபாகரன் மடியும்வரை, அவர் என்னைப்பற்றி ஏதும் பேசவில்லை” -கருணாஅம்மானின் சுவாராசியமான செவ்வி.. (வீடியோ)

Share.
Leave A Reply