சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியுள்ளதுடன் அந்தமக்களை பலநாடுகளிலும் அலைந்துலையும் அவலநிலைக்கு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் அகதிகளாக ஐரோப்பியநாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

சிரியாவின் அயல்நாடான துருக்கி வழியாக அந்த மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி பல ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆபத்து மிகுந்த குளிரான ஆழ்கடல் வழியான அவர்களது பயணம் மேற்குலக நாடுகளுக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

அகதிகளை ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஐ. நா.உடன்படிக்கைக்கு அமைய அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனினும் தற்போதைய ஐரோப்பிய நாடுகளின் நிலைமையில் மேலதிகமாக குடியேறிகளை ஏற்பதற்கு பல ஐரோப்பிய நாடுகளும் தயக்கம் காட்டிவருகின்றன.

சில நாட்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு 2 படகுகளில் 23 அகதிகள் பயணித்த நிலையில் அந்த படகுகள் துருக்கியின் பொத்ரம் நகருக்கு அருகே கவிழ்ந்து மூழ்கியதில் 9 பேர் மட்டுமே உயிர்தப்பியுள்ளனர். ஏனையவர்கள் அனைவரும் கடலோடு மாண்டு போயினர். அவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவர்.

இவ்வாறு கடலில் மாண்டுபோன ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரற்ற உடல், கரை ஒதுங்கிக்கிடந்த கோரக்காட்சியை துருக்கி செய்தி நிறுவனம் ஒன்று, ‘கரைக்கு அடித்துச்செல்லப்பட்ட மனிதாபிமானம்’ என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டது.

இன்றைக்கு இந்தப் படம், உலகம் முழுவதும் மனச் சாட்சியுள்ள மனிதர்களின் நெஞ்சை பிழிவதாக அமைந்துள்ளது. அவர்கள் அத்தனைபேரின் கண்களும் பனித்துப் போயுள்ளன. அவ்வாறு உயிரிழந்த அந்த ஆண்குழந்தையின் பெயர் அய்லான்.

குர்திஷ் இனத்தினைச் சேர்ந்த மூன்றே வயதுடைய அந்த பிஞ்சுக்குழந்தைக்கு இந்த உலகில் வாழ இடம்கிடைக்கவில்லை. அகதியாக சென்றபோது கடல் அந்த சின்னஞ் சிறு குழந்தையின் வாழ்வை காவுகொண்டு விட்டது.

இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘டெய்லி மெயில்’ பத்திரிகையில் ‘ஒரு மனித பேரழிவில் காவுகொள்ளப்பட்ட சிற்றுயிர்’ செய்தி தலைப்பிடப்பட்டுள்ளது.

3 வயதுடைய அய்லான், மற்றும் 5 வயதுடைய சகோதரன் காலிப், தாயார் ரேஹன் ஆகியோரும் அந்தப் படகு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் தந்தை அப்துல்லா குர்தி மட்டுமே உயிர்பிழைத்துள்ளார்.

ஒரே நாளில் தன் அன்புக்குழந்தைகளையும் மனைவியையும் இழந்து நிர்கதியாகியுள்ள அப்துல்லாவின் கதறல் உலகின் மனச்சாட்சிய உலுக்கியுள்ளது.

தான் சிரியாவின் கொபானிக்கு திரும்பிச்செல்ல வேண்டும் என்றும் இறந்துபோன மனைவி பிள்ளைகளுடன் தன்னையும் சேர்த்து புதைத்து விடுங்கள் என்று கதறுகின்றார்.

தந்தை அப்துல்லாவின் கதறல் ஐரோப்பிய நாடுகளின் மனச்சாட்சி கதவைத் திறக்குமா என்பதே உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

அப்துல்லாவின் குடும்பம் கிரீஸ்க்கு பயணிப்பதற்கு முன்னர் கனடாவில் அடைக்கலம் கேட்டதாகவும் அவர்களது விண்ணப்பம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்தே அந்தக் குடும்பம் கிரீஸ் நாட்டு படகு மூலம் பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply