சென்னை: போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை அகதி திடீரென உயிர் இழந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்தபோது உயிர் பிழைப்பதற்காக ஏராளமான இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அதேபோல் தஞ்சம் அடைந்தவர்களில் ஒருவர் இலங்கை தமிழர் மோகன் (45). இவர், ேசலையூர் வேங்கைவாசல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவருக்கும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ கமல் தலைமையிலான போலீசார் மோகனை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

பின்னர், அவரிடம் போலி பாஸ்போர்ட் கும்பல் தலைவன் சங்கர்லால், கூட்டாளி இலங்கையை சேர்ந்த பைஸ்மீ ஆகியோர் பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவரிடம் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் “போலீஸ் சித்திரவதை” கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில், நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த விசாரணையின் போது மோகன் திடீரென சரிந்து விழுந்தார். மயக்கம் அடைந்த அவரை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மோகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மோகன் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், போலீசார் தாக்குதலில்தான் மோகன் இறந்ததாக அவரது மனைவியும் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “மோகன் நீரிழிவு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

அங்கு சிகி ச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார் என்று தெரிவித்தனர். இலங்கை அகதி மரணம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காற்றில் பறக்கும் கமிஷனர் உத்தரவு

சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருவதால் விசாரணை கைதிகள், குற்றவாளிகளை இரவு நேரத்தில் காவல் நிலையங்களில் வைத்து விசாரிக்க வேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அனைத்து இன்ஸ்பெக்டர்களுக்கும் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். ஆனால், இதை பல இன்ஸ்பெக்டர்கள் காதில் வாங்கிக் கொள்வது இல்லையாம்.

நகை, பணம் மாயம்?

மோகனிடம் இருந்த 4 சவரன் நகை, 2 லேப்டாப், ஒரு பேக்கில் பணம் மற்றும் ₹25 ஆயிரம் இருந்துள்ளது. இது மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என மோகனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், மோகனிடம் இருந்த 3 போலி பாஸ்போர்ட்டுகள், 20 போலி விசா, 2 லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சாலை மறியல்

மோகன் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மோகன் சடலம் வைக்கப்பட்டு இருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மே 17 இயக்கத்தினர் உள்ளிட்டவர்கள் திரண்டனர்.

திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ராயப்பேட்டையில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Share.
Leave A Reply