இலங்கையில் 1990-ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களில் 158 பேர் இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல்போன சம்பவத்தின் 25-ம் ஆண்டு நிறைவை அவர்களின் உறவினர்கள் இன்று சனிக்கிழமை நினைவுகூர்ந்துள்ளனர்.

1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அகதிமுகாமில் சுமார் 45 ஆயிரம் தமிழர்கள் தஞ்சமடைந்திருந்ததாக முகாமை நிர்வகித்த பல்கலைக்கழக சமூகம் கூறுகின்றது.

அவ்வேளை இராணுவத்தினரால் பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இவர்களுக்கு நடந்தது என்ன என்று 25 ஆண்டுகளாகியும் இதுவரை தங்களால் கண்டறிய முடியாதிருப்பதாக உறவினர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

150905114900_sri_lanka_abduction_eastern_university_abductions_640x360_bbc_nocreditபல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று கூடிய உறவினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடத்தியிருந்தனர்

1989ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில் அக்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அந்தப் போர்நிறுத்தம் 1990ம் ஆண்டு நடுப்பகுதியில் முறிவடைந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் தனித்தும் கூட்டம் கூட்டமாகவும் கைது செய்யப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் காணாமல்போயுள்ளதாக மனித உரிமை அமைப்புகளினால் அவ்வேளையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

அவ்வேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக பொது இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.

புதிய ஆட்சிமாற்றம் உண்மையை வெளிக்கொணர வேண்டும்’

150905115237_eastern_university_512x288_bbc_nocredit25-ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் உறவினர்கள்

1990ம் ஆண்டு செப்டெம்பர் ஐந்தாம் திகதி, அதிகாலை முகாமிற்கு வந்த இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் பெண்களை வேறிடத்திலும் ஆண்களை மைதானத்திலும் கூடுமாறு அழைப்பு விடுத்ததாக கொம்மாதுறையை சேர்ந்த 43 வயதான வெள்ளைச்சாமி கோவிந்தராஜ் கூறுகின்றார்.

இராணுவத்தினால் கூட்டி வரப்பட்ட முகமூடி அணிந்த நபர்களின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட தனது மூத்த சகோதரன் உள்ளிட்ட பலரை இராணுவம் பஸ்களில் அழைத்துச் சென்றிருந்தாகவும் அவர் கூறுகின்றார்.

கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்தவர்களை இராணுவம் விசாரணைக்காக சென்றிருந்த காலத்தில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சின் செயலாளரான பதவியேற்றிருந்த, ஏ. டப்ளியூ பெர்ணான்டோ, 32 பேர் மட்டுமே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு 24 மணிநேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்தார்.

ஆனால் 158 பேரில் ஒருவர் கூட விடுவிக்கப்படவில்லை என்று அகதி முகாமை நிர்வகித்து வந்த கிழக்கு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளரான டாக்டர் த. ஜெயசிங்கம் கூறுகின்றார்.

1995ம் ஆண்டு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு. பாலகிட்ணர் தலைமையிலான ஆணைக்குழு முன்னிலையில் சகல ஆவணங்களையும் முன்வைத்து இது தொடர்பாக சாட்சியமளித்த போதிலும் அது அறிக்கையில் இடம் பெற்றதே தவிர உண்மை நிலை கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போனவர்கள் உயிருடன் இன்னும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை உறவினர்கள் தற்போது பெரும்பாலும் இழந்திருந்தாலும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திலாவது உண்மை நிலை வெளிவர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share.
Leave A Reply