பெற்ற மகளை கொன்ற தாய் இந்திராணி போலீசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து காரில் வைத்து கொண்டுசென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி (வயது 43). இவர் தனது முன்னாள் கணவர் சித்தார்த் தாஸ் மூலம் தனக்கு பிறந்த 24 வயது மகள் ஷீனா போராவை கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்தார்.
இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். 3 ஆண்டுகள் கழித்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திராணி, சஞ்சீவ் கன்னா மற்றும் டிரைவர் ஷாம் ராய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஷீனா போரா கொலையில் நாள்தோறும் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஷீனா போராவை கொலை செய்த பிறகு, அவருக்கு இந்திராணி லிப்ஸ்டிக்கும், பர்ப்யூமும் போட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஷீனா போராவை கொலை செய்த பிறகு, அவரது உடலை காரில் எடுத்துச் செல்லும் போது போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, உயிரற்றுக் கிடந்த ஷீனாவின் பிணத்துக்கு தலைவாரி அலங்காரம் செய்த இந்திராணி, காரின் பின் இருக்கையில் அமர்ந்து, துவண்டு, தொங்கிக் கொண்டிருந்த ஷீனாவின் தலையை தனது தோளின் மீது சாத்திக் கொண்டு சென்றுள்ளார்.
வழியில் காரை மடக்கி, போலீசார் சோதனை செய்தாலும், உடல்நலம் சரியில்லாமல் ஷீனா போரா தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுவதாக அவர் திட்டமிட்டிருந்தார்.
அதன்பிறகுதான், ஷீனா போராவின் உடல் பெட்ரோல் ஊற்றி, எரிக்கப்பட்டு, தனிமையான காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ளது.
இதனை மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்