விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் பகிரங்கமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், இறுதிக்கட்டப் போர் பற்றிய பல தகவல்கள் இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இறுதிக்கட்டப் போர் – வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில், மூடப்பட்ட அரங்கில் நடந்த ஒரு பெருஞ் சமர்.

அதில் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன. உண்மைகள் ஒளிந்து கிடக்கின்றன. இன்னமும் விடை தெரியாத பல கேள்விகளும் இருக்கின்றன.

சென்னையில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து, அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கருணா எனப்படும் முரளிதரன், அண்மையில் ஒரு நீண்ட பேட்டியை வழங்கியிருந்தார்.

அதில், அவர் பல விடயங்களைப் பற்றி கூறியிருந்தார். புலிகளிடம் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதற்கான, தனது பக்க நிலைப்பாடுகள் நியாயங்களை எடுத்துரைத்திருந்தார்.

அவை சரியா, – தவறா என்ற விவாதக் களத்துக்குள் நுழைவது இப்பத்தியின் நோக்கமன்று. அது தனியாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம்.

இந்தப் பேட்டியில் கருணா குறிப்பிட்ட- விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய விவகாரம் ஊடக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

2009 மே 19ஆம் திகதி நந்திக்கடலில், இராணுவத்தின் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியவர் தான் கருணா.

பிரபாகரனுடன் நீண்டகாலம் நெருக்கமாக இருந்தவர் என்ற அடிப்படையில், அவரை அடையாளம் காண்பதற்காக அழைத்துச் சென்றிருந்தது அரசாங்கம்.

tblfpnnews_72895449400பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும்? என்ற கேள்விக்கு, விடையளித்துள்ள கருணா, “அவர் தனது கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு மரணமாகியிருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

வலது கையால் துப்பாக்கியை எடுத்து. நெற்றிக்கு மேலாக சுட்டிருக்கலாம். என்றும், துப்பாக்கியை தலைமீது அழுத்தி வைத்துச் சுட்டதால், அது பின் தலைப்பகுதியை ஆழமாக பிளந்து கொண்டு சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தனது இராணுவ அனுபவங்களைக் கொண்டு பதிலளித்திருந்தார் கருணா.

தொலைவில் இருந்து சுட்டிருந்தால், தலையில் ரவை துளையிட்டுச் சென்றிருக்கும் என்றும், அருகில் வைத்து சுட்டதால் அந்த ரவை தலையைப் பிளந்து சென்றதாகவும் கருணாவின் விளக்கம் அமைந்திருந்தது.

கருணா தன்னை ஒரு மிகச் சிறந்த இராணுவ விற்பன்னர் என்பதை அந்த பேட்டியில் அடிக்கடி குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தனது போர் அனுபவத்தின் அடிப்படையில் தான், அவ்வாறு கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், போருக்குத் தலைமை தாங்கிய, இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கருணாவின் இந்தக் கருத்தை நிராகரித்திருக்கிறார்.

இது இந்த விவகாரத்தை இன்னமும் சூடுபிடிக்கச் செய்திருக்கிறது. புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருக்கவில்லை என்றும், அவர் இராணுவத்தினரின் மோட்டார் குண்டுத் தாக்குதல் அல்லது ஷெல் சிதறல் ஒன்று தாக்கியதாலேயே மரணித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

துப்பாக்கி ரவை மண்டையோட்டைத் துளைத்துச் சென்றிருக்குமே தவிர, பிளந்து சென்றிருக்காது என்றும், மோட்டார் குண்டுச் சிதறல் தான் அவ்வாறு காயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்குக் குறிப்பிட்டிருந்தார்.

சரத் பொன்சேகா, கருணா, மற்றும் ரணில் விஜேயபால என்ற கொழும்பு ஊடகவியலாளர் என எல்லோருமே, பிரபாகரனின் உடலில் வேறு காயங்கள் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

சரத் பொன்சேகா ஒரு திறமைவாய்ந்த இராணுவத் தளபதி. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

இந்தநிலையில், போரில் நீண்டகால அனுபவம் பெற்ற- தளபதியாக இருந்து போரை வழிநடத்தியவர்கள் இரண்டு பேர் மத்தியில், ஒரு காயம் தொடர்பாக ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பது முக்கியமான விடயம்.

இதனால், அவர்கள் தமது தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப உண்மையை வெளிப்படுத்த மறுக்கின்றனரா அல்லது, இரண்டு பேரினது போர் அனுபவங்களில் யாரேனும் ஒருவரது அனுபவத்தை குறைத்து மதிப்பிடத்தக்கதாக உள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதேவேளை, சனல் 4 வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தில் பிரபாகரன், தொலைவில் இருந்து கனரகத் துப்பாக்கியால் சுடப்பட்டதால் ஏற்பட்டதால் மரணித்திருக்கலாம் என்று வெளிநாட்டுத் தடயவியல் நிபுணர் ஒருவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டப் போரானது, சாட்சிகள் யாரும் இல்லாத நிலையில்- சாட்சியமின்றியே முடித்து வைக்கப்பட்ட நிலையில், மறைந்து கிடக்கும் உண்மைகள் என்ன என்ற குழப்பம் நீடிக்கவே போகிறது.

ஆனாலும், போர்க்களத்தின் உண்மை என்பது முற்றுமுழுதாக உறங்கி விடும் என்று கருத முடியாது. ஏனென்றால், பல போர்களின் இரகசியங்கள், பல தசாப்தங்கள் கழித்துக் கூட வெளியாகியிருக்கின்றன.

இப்போது. இரகசியங்களைப் பெறுமதிமிக்கதாகக் காவிக் கொண்டிருப்போர் ஒருகாலத்தில் அதற்கு அவசியமில்லை எனக் கருதலாம். அல்லது, திடீர் ஞானம் அவர்களுக்குள் பிறக்கலாம்.

அத்தகைய வேளைகளில் போர் பற்றிய இரகசியங்கள் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரக் கூடும். ஆனாலும் அத்தகைய உண்மைகள் வெளிவரும் போது அது சரியா- தவறா என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலை நீடிக்கவே செய்யும்.

இந்தச் சூழலில், இப்போது ஒரு உண்மை, முன்னைய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் வாயால் வெளிவந்திருக்கிறது.

அதாவது, புலிகளின் தலைவர் பிரபாகரன், மோட்டார் குண்டுத் தாக்குதலில், அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

அவ்வாறாயின், இறுதிக்கட்டப் போரில் மோட்டார் குண்டுகளும், ஷெல்களும் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார் என்று தான் அர்த்தம்.

இதற்கு முன்னர் சரத் பொன்சேகாவும் சரி அரசாங்கமும் சரி, தாம், கனரக ஆயுதங்களையே இறுதிப்போரில் பயன்படுத்தவில்லை என்று தான் கூறி வந்தனர்.

மோட்டார்களையோ, பீரங்கிகளையோ தாம் பயன்படுத்தவில்லை என்றும், அவ்வாறு பயன்படுத்தக் கூடிய களச் சூழல் இருக்கவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் போரின் இறுதிநாள் வரை- முள்ளிவாய்க்காலுக்குள் அகப்பட்டிருந்த பொதுமக்கள், தாம் தங்கியிருந்த பகுதிகளில் மோட்டார் குண்டுகளும், பீரங்கிக் குண்டுகளும் ஆயிரக்கணக்கில் வீழ்ந்து வெடித்ததாக கூறியிருந்தனர்.

இந்தியாவின் அழுத்தங்களினால் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்று அரசாங்கம் கூறியது.

ஆனால், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமான போது, மோட்டார் குண்டுகள், வீசப்பட்டிருந்தால் தானே அதன் சிதறல்கள் அவரது தலையில் தாக்கியிருக்க முடியும்.

பிரபாகரனின் தலையில் காயத்தை ஏற்படுத்தியது மோட்டார் குண்டின் சிதறல் தான் என்பது உண்மையானால், இராணுவத்தினர் இறுதிக்கட்டப் போரில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்பதும் உண்மையாகவே இருக்கும்.

ஐ.நா. அறிக்கையில், போரின் இறுதிக்கட்டத்தில், கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டது பற்றிய ஆதாரங்கள் இடம்பெறலாம். இல்லாமலும் போகலாம்.

ஆனால், காலம் நேரம் வரும் போது, இதுபோன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

சுபத்ரா

Share.
Leave A Reply