எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதற்காக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைத்து விட்டதாக யாரும் அர்த்தம் கொள்ளக்கூடாது.
மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் நாம் ஏற்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்றுள்ள இரா.சம்பந்தனை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
மக்களின் விருப்பத்துக்கு மாறாக நாம் எப்பொழுதும் நடந்துகொள்ளமாட் டோம். எமது இலக்கை நோக்கி நாம் முடியும் வரை தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்போம்.
எமது இலக்குக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி யென்பது எப்பொழுதும் தடையாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
எனக்குத் தரப்பட்ட எதிர்க்கட்சித் தலைமை பதவியானது எனக்குரியதல்ல, அது எமது மக்களுக்குரியதாகும், அத்துடன், அந்த பதவி எமது கட்சிக்குரியதாகும். எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்னைப் பாராளுமன்றக் குழுத்தலைவராக நியமித்ததன் காரணமாக இப்பதவி கிடைத்துள்ளது.
இப்பதவியை நான் பணிவுடனும் அடக்கத்துடனும் ஏற்றிருக்கின்றேன். அதற்காக எமது மக்களுக்கும் எம்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கின்றேன்.
பாராளுமன்ற சம்பிரதாயத்தின்படி இப்பதவி எமது கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளது. எமது கட்சிக்கு பிரதம கொரடா பதவியொன்று உண்டு.
அப்பதவியை இன்னுமொரு எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கு கொடுக்கத் தீர்மானித்தோம். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இதனை செய்தோம்.
இந்த முடிவுக்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது பூரணமான சம்மதத்தைத் தெரிவித்திருந்தார்கள்.
இதன் நிமிர்த்தந்தான் எதிர்க்கட்சி கொரடாப்பதவி மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி பாரிய அரசியல் மாற்றமொன்று நாட்டில் ஏற்பட்டது.
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஊடாக தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் இடையில் ஒரு அரசாங்கம் ஆட்சிபுரிந்து வந்தது.
அது ஒரு அது பெரும்பான்மைப் பலமற்ற அரசாங்கமாகும். ஆகையால் அந்த அரசாங்கத்தால் முக்கியமான விடயங்களைச் செய்ய முடியவில்லை.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் எதிர்பார்த்தது போல ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன.
விஷேடமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து 19ஆவது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள். இதன் மூலம் இந்த அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் ஆளும் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்புண்டு.
ஏதாவதொரு விடயத்துக்கு நாம் அவர்களுடன் சேர்ந்து வாக்களித்தால் பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மை வரக்கூடும்.
இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டதன் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவேண்டும் என்பதே ஆகும்.
அத்துடன் ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். மனித உரிமை மதிக்கப்பட வேண்டும். சட்ட ஆட்சி இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் சட்டம் மதிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தின் கௌரவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவாகும். இவையெல்லாம் நல்லாட்சியின் சிறந்த அம்சங்களாகும்.
கடந்த 9 ஆண்டுகளில் மேற்படி பண்புகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. நாடு நல்லாட்சியிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றிருந்தது. இந்த குறைபாடு ஏற்பட அடிப்படைக்காரணங்கள் பல இருந்தன.
சமத்துவம் இருக்கவில்லை. இதனால் நிரந்தரமான சமாதானம் ஏற்படவில்லை. சமத்துவத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்விகண்டன.
இதனால் யுத்தமொன்று கூட மூண்டது. 30 வருடங்கள் அந்த யுத்தம் நீடித்தது. தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்தையும் அரசபடைகளையும் எதிர்த்து 30 வருடங்கள் போராடினார்கள். இது ஒரு சாதாரண விடயமல்ல, பெரிய சாதனை. இதையாரும் மறுக்க முடியாது.
இன்று தமிழ் மக்களுடைய பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது.பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பொறுப்புக் கூறவேண்டும் உண்மை அறியப்பட வேண்டும். நீதிவழங்கப்பட வேண்டும்.
பாதித்தவர்களுக்கு பரிகாரம் தேடப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் கூறுகின்றது . இவ்விதமான அழிவுகள் இந்த நாட்டில் மீண்டும் ஏற்படாமல் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாகச் சொல்லப்போனால் இன்று காணப்படும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இதுதான் நமது குறிக்கோளாகும்.
எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் எமது கட்சி இவ்விரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்தும்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் நாமும் மும்முரமாக ஈடுபடுவோம். அக்கடமையிலிருந்து விலகிச் செல்லமாட்டோம்.
ஏனைய விடயங்களில் நாட்டில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமாயின் தேசிய இனப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வு காணப்பட வேண்டும்.
என்ன விதமான தீர்வு தரப்பட வேண்டுமென்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருப்பது புரட்சிகரமான விடயமல்ல. நியாயமான நீதியான கோரிக்கையாகும்.
உலகில் பலநாடுகளில் பல்வேறு இனம், மதம், மொழி சார்ந்த மக்களுக்கு அரச சாசன ரீதியாக, சிறந்த ஒழுங்குகள் செய்யப்பட்டதன் நிமித்தம் ஆட்சி பகிர்ந்தளிக்கப்பட்டு, இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு, அந்த மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கக்கூடிய வகையில் ஆட்சி ஒழுங்குகள் உண்டு.
நாட்டைப் பிரிக்கும்படியாக நாங்கள் கோரவில்லை. பிளவுபடுத்தக் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களும் சமபிரஜைகளாக வாழக்கூடிய விதத்தில் போதிய சுயாட்சியைப்பெற்று வாழவேண்டு மென்று விரும்புகின்றோம். சமாதானத் தீர்வொன்றே நல்லாட்சிக்கான அத்திவாரமாக இருக்கமுடியும்.
அந்த அத்திவாரமில்லாமல் இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியாது. எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சிப்பதவியை ஏற்றிருக்கும் இவ்வேளையில் என்னமாதிரி நாம் செயற்படவேண்டும், திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மாற்றங்கள் நாம் எதிர்பாராத மாற்றங்களாகும்.
மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.
இது ஒரு துணிச்சலான செயலாகும். ரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. பெரும்பான்மைபலம் இல்லாத ஒரு எதிர்க்கட்சித் தலைவரை பிரதமராக நியமித்தமை பாரிய சாதனையாகும்.
அவ்வாறு அவர் செய்தமைக்குரிய காரணம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது மக்களுக்கு ஒரு வாக்குறுதி வழங்கியிருந்தார். நான் வெற்றிபெற்றால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவே என்று கூறியிருந்தார்.
தேர்தலின் பின்னர் மக்கள் ஆணையின் அடிப்படையில் ரணிலை பிரதமராக்கினார். மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் மஹிந்தவை நான் பிரதமராக நியமிக்க மாட்டேன் என தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
பகிரங்கமாகக் கூறினார். மக்கள் தனக்குத் தந்த ஆணையைத் தொடரவே விரும்புகின்றேன் என அடித்துக் கூறினார். இதனால் தான் கடும் முயற்சி செய்தும் மஹிந்தவினால் 100 ஆசனங்களைக் கூட இத்தேர்தலில் பெறமுடியவில்லை.
இம்மாற்றங்களை நாம் அவதானிக்க வேண்டும். இம்மாற்றங்களை சாதாரணமாக எடைபோடமுடியாது. சாதாரணமாக நடைபெறக் கூடியதுமல்ல.
இது எமக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஆகும். இம்மாற்றங்கள் நடந்ததன் காரணமாகவே நாம் நியாயத்தின் அடிப்படையில் நீதியின் பிரகாரம், சத்தியத்தின் பின்னணியில் தீர்வைப் பெறலாமென்று நம்புகின்றோம்.
மஹிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் எதிர்பார்க்கும் எந்தவிடயமும் நடைபெறமுடியாது. ஆகையினால் இதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது நமது கடமையாகும்.
எனவேதான் நாம் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டியகாலக்கட்டத்திலிருக்கின்றோம். பக்குவமாக செயற்படவேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் ஆதரவை தக்கவைக்க வேண்டிய அவசியம் எமக்குண்டு. எங்களைப் பொறுத்தவரை நியாயமாக நடப்போம். எமது இலக்கில் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்.
நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டுக்குள் சமபிரஜைகளாக வாழ விரும்புகின்றோம் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்தச் செய்தியை சர்வதேச சமூகத்துக்கு தொடர்ந்து சொல்ல விரும்புகின்றோம். இதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டைச் சேர்ந்த பல தரப்பு சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென்று இப்பொழுது விரும்புகின்றார்கள். அவர்களின் ஆதரவை நாம் பெறவேண்டும்.
வடகிழக்கைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும்.
நாங்கள் எத்தகைய பிரச்சினைகளை அனுபவிக்கின்றோமோ அதே பிரச்சினைகளை அவர்களும் அனுபவிக்கின்றார்கள் எதிர்நோக்குகின்றார்கள் ஆகையால் அவர்களையும் நாம் அரவணைத்துச்செல்ல வேண்டும். ஒழிவு மறைவின்றி நாம் செயற்படவேண்டியுள்ளது.
எம்மை நம்பியிருக்கும் மக்களை நாம் கைவிடமுடியாது. மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
பொருத்தமற்ற எந்தத் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. தீர்வு சம்பந்தமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுமாக இருந்தால் தீர்வு பற்றிய முடிவை எடுப்பதற்குமுன் மக்களுடன் ஆதரவாளர்களுடன் புத்திஜீவிகளுடன் பேசி தீர்மானத்துக்கு வருவோம்.
அதைவிடுத்து தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை. எனவே எந்த முடிவாக இருந்தாலும் ஜனநாயகரீதியாகவே முடிவுகள் மேற்கொள்ளப்படும். எவ்வாறு இருந்தாலும் இன்றைய சூழலில் யதார்த்தமாகச் செயற்படவேண்டியது அவசியமாகிறது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கு கிடைத்ததால் எல்லாம் முடிந்து விடவுமில்லை தீர்ந்து விடவுமில்லை. அண்ணன் அமிர்தலிங்கம் 1977 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அப்பொழுது எமக்கு பாராளுமன்றத்தில் 18 ஆசனங்கள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எட்டு ஆசனங்கள் மாத்திரமேயிருந்தன.
நாம் இரண்டாம் பெரும்பான்மைக் கட்சியாக இருந்தோம். அப்பொழுது நான் பாராளுமன்றத்துக்கு முதல்முறையாகச் சென்றிருந்தேன் அண்ணன் அமிர்தலிங்கத்துக்குப்பின்னால் எனது ஆசனம் அமைந்திருந்தது.
நாங்கள் அவருக்கு பூரணமான ஆதரவை நல்கினோம் ஒற்றுமையாக இருந்தோம். இன்று நாம் பாதுகாக்கவேண்டிய விடயம் எமது ஒற்றுமையாகும்.
எவ்வாறு இருந்த போதிலும் இன்று நாம் பலமாக இருக்கின்றோம். ஏன் நாம் பலமாக இருக்கின்றோம் எமது மக்கள் எம்மை அதிகப்படியாக ஆதரித்து 16 உறுப்பினர்களை வெற்றிபெற வைத்ததன் நிமித்தம் மக்களின் ஒற்றுமையான ஆணையின் அடிப்படையில் நாம் பலம் பெற்று நிற்கின்றோம்.
நாம் இன்னும் அதிகப்படியான ஆசனங்களை வென்றிருக்க முடியும். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கேட்டதன் காரணமாக இரு ஆசனங்களை எம்மால் பெறமுடியாமல் போய்விட்டது.
இன்னுமொரு ஆசனம் கிடைத்திருக்கலாம். எவ்வாறு இருந்த போதிலும் இதுவொரு நல்ல வெற்றியாகும். எல்லோரும் எமது வெற்றியை மதிக்கின்றார்கள். நாட்டின் ஆட்சியாளர்கள் மதிக்கின்றார்கள்.
சிங்கள மக்கள் மதிக்கின்றார்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது தமிழ் மக்களின் விசுவாசமான கட்சியென ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களும் புத்திஜீவிகளும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.
சர்வதேச சமூகம் ஏற்றுகொள்கிறது. இது இன்னும் பலமடையும் எதிர்க்கட்சியின் தலைமைப்பதவி கிடைத்திருப்பது எமக்கு இன்னும் பலம்சேர்க்கும்.
எனவே நாம் தெளிவாக சிந்தித்து பிரிவு பட்டு நிற்காமல் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். திருகோணமலை தமிழரசுக் கட்சிக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பாராட்டு வைபவத்திற்கு கோ.சத்திய சீவராஜா தலைமை தாங்கினார்.
சம்பந்தனுக்கு மரியாதை அழிப்பது உங்கள் கடமை: மாவை
அறுபது வருடங்களாக இந்த நாட்டில் பலதையும் இழந்த சிறுபான்மை சமூகம் தந்தை செல்வா அவர்களின் பாசறையில் பொறுமையுடன் போராடி இன்று ஓரளவு தலைநிமிர்ந்து நிற்கும் சிறிய ஒளிக்கீற்றாக இந்த மண்ணின் மைந்தன் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இன்று பரிணமிக்கின்றார்.
இலங்கை சிறுபான்மை சமூகத்தின் குரலாக வாழும் அவருக்கு நீங்கள் மரியாதை அழிப்பது மிகவும் பெருமைக்குரியது.
அது உங்களின் கடமையும் கூட ஏனன்றால் அவர் உங்கள் மண்ணின் சொந்தக்காரன் என மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.
திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தெரிவான கௌரவ இரா.சம்பந்தனுக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
எங்கள் இனம் அளிக்கப்பட்டிருக்கின்றது. இழப்புக்களை அதிகம் கொண்டிருக்கின்றது. இவர்களின் விடிவுக்காக அகிம்சைப் போராட்டம் பின் ஆயுதப் போராட்டம் பின்னர் அரசியல் ரீதியான இராஜதந்திரப்போராட்டம் என இன்று நாம் களத்தில் நிற்கிறோம்.
இன்று எமக்கு கிடைத்த தலைவர் அவர்களைப் பற்றி இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிடும்போது இலங்கையின் மூத்த அரசியல்வாதி மட்டுமல்ல ஆசியாவின் மூத்த அரசியல்வாதி என்று பெருமையாக குறிப்பிட்டார்.
அந்தளவுக்கு தகுதியும் தரமும் கொண்ட தலைவரை நாம் பெற்றுள்ளோம். இந்த எதிர்கட்சி தலைமை என்பது இந்தநாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ அள்ளிக்கொடுத்த ஒன்றல்ல.
இந்த நாட்டின் ஜனநாயாக மரபின் படி கிடைத்த ஒன்று. மேலும் எமது போராட்டத்தின் ஒரு அங்கீகாரமே இந்தப்பதவி என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு திருகோணமலையில் நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தின் போது எடுத்த படம். இரா. சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தி கிரீடம் அணிவித்து கெளரவிக்கப்படுவதையும் அருகில், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா எம்.பி ஆகியோரையும் காணலாம்.