மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் தந்தை 8 வயது மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதுடன் தானும் தூக்கிட்டு
தற்கொலை செய்துள்ளார். இந்த விபரீதத்தைக் கண்ட தாயார் தனது நான்கு மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றபோதிலும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வவுணதீவு கன்னங்குடா பருத்திச்சேனை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
தாமோதரம் மகேந்திரன் (வயது 30) எனும் தந்தை தனது எட்டு வயதான ரி.வினோத் எனும் மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து மகேந்திரனின் மனைவியான வினோத்தின் தாயாரான குணலட்சுமி தனது நான்கு மாதக்குழந்தையான தனுவுடன் தனது வீட்டிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதன் போது அயலவர்கள் தாயையும் குழந்தையையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த நான்கு மாதக் குழந்தை ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள தந்தை மகன் ஆகிய இருவரின் சடலங்களும் நேற்றுமாலை வீட்டில் வைக்கப்பட்டிருந்ததுடன் பொலிசாரின் விசாரணை இடம் பெற்றுவந்தது.