பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர­ண­மா­னது சுய நினை­வி­ழந்­தமை, உடல் உறுப்­புக்­களின் தொழிற்­பா­டுகள் செயலிழந்தமை மற்றும் நெருப்பால் ஏற்­பட்ட காபன் மொனக்சைட் வாயுவை சுவா­சித்­ததன் விளை­வாக ஏற்­பட்­டது என முன்னாள் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி, விஷேட வைத்­திய நிபுணர் கலாநிதி ஆனந்த சமர சேகர நேற்று நீதிமன்­றுக்கு அறி­வித்தார்.

வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே தனது இறுதி அறிக்­கையை மன்றில் சமர்ப்பித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்­கா­னது ஏற்­க­னவே ஒத்­தி­வைக்­கப்­பட்ட திகதிப் படி நேற்­றைய தினம் காலை 9.30 மணி­ய­ளவில் நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன் போது குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்ட வாதி டிலான் ரத்­நா­யக்க மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இந் நிலையில் நேற்­றைய தினம் ஏற்­க­னவே எதிர்ப்­பார்க்­கப்­ப­டது போன்று கொழும்பு முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி, விஷேட வைத்­திய நிபுணர் கலா நிதி ஆனந்த சமர சேக­ரவின் இறுதி சட்ட வைத்­திய அறிக்கை நீதிமன்­றுக்கு சமர்­பிக்­கப்­பட்­டது.

நீதி­வா­னுக்கு சமர்­பிக்­கப்­பட்ட அவ்­வ­றிக்­கையில் தாஜு­தீனின் காரில் தீ பரவல் ஏற்­படும் போதும் அவர் உயிருடனேயே இருந்­த­தா­கவும், எனினும் அப்­போதும் அவர் சுய நினை­வி­ழந்து, இறுதி மூச்­சினை விட்டுக்கொண்டு மர­ணத்தின் விளிம்பில் இருந்­துள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் வஸீமின் இரத்­ததில் எத்­தனோல் அதி­க­மாக கலந்­தி­ருந்­த­தா­கவும், சம்­பவம் இடம்­பெற சுமார் இரு மணி நேரத்­துக்கு முன்னர் அவர் மது அருந்­தி­யி­ருக்கக் கூடிய வாய்ப்­புக்கள் அதிகம் உள்­ள­தா­கவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதனை விட தாஜு­தீனின் தலையில் தட்­டை­யான ஆயுதம் ஒன்­றினால் தாக்­கப்­பட்ட காயம் உள்­ளது. இந்த காயம் காருக்கு உள்ளே வைத்தோ அல்­லது வெளியில் வைத்தோ ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம்.

அத்­துடன் தாஜுதீன் காருக்குள் இருக்கும் போது யாரோ ஒரு­வரால் அவர் வெளியே இழுத்து வீசப்­பட்­டி­ருக்­கலாம். அல்­லது அவர் கீழே விழுந்­தி­ருக்­கலாம்.

அவர் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்த தாக்­கு­தல்­களில் அவ­ரது அவ­ய­வங்கள் வெடிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

அவ­ரது மார்புப் பகு­தியில் வட்ட வடி­வ­மான காயம் ஒன்று உள்­ளது. வட்ட வடி­வான முனையைக் கொண்ட ஆயுதம் ஒன்­றினால் குத்­தி­யதில் இந்த காயம் ஏற்­பட்­டி­ருக்­கலாம்.

அந்த காயம் விபத்தால் ஏற்­பட்­ட­தல்ல. மர­ணத்­துக்­கான பிர­தான காரணம் காபன் மொனக்சைட் வாயுவை சுவாசித்­ததன் பல­னாக அந்த வாயு உட­லெங்கும் பர­வி­ய­மை­யாகும் என அந்த அறிக்­கையில் விரி­வாக சுட்டிக்காட்­டப்­பட்­டுள்­ளது.

கலாநிதி ஆனந்த சம­ரசேகர சமர்­ப்பித்த அறிக்­கையின் பின்னர் அரசின் சிரேஷ்ட சட்ட வாதி குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் கருத்­துக்­களை முன் வைத்தார்.

இதன் போது தாஜு­தீனின் உற­வினர் ஒரு­வரைத் தேடி அடை­யாளம் தெரி­யாத நபர் ஒருவர் வெள்­ள­வத்­தையில் உள்ள அவ­ரது வீட்­டுக்கு சென்று விசா­ரணை செய்­துள்­ள­தா­கவும், தாஜு­தீனின் மரண விசா­ரணை தொடர்­பி­லான வழக்கின் பிர­தான சாட்சி­யா­ள­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சிரேஷ்ட சட்ட வாதி டிலான் ரத்நாயக்க நீதி­வானின் கவ­னத்­திற்கு கொண்டு வந்தார்.

அத்­துடன் தாஜுதீன் பயன்­ப­டுத்­திய கைய­டக்கத் தொலை­பே­சியை புல­னாய்வுப் பிரி­வினர் நுவ­ரெ­லியா, அக்கரபத்­தனை பிர­தே­சத்தில் இருந்து மீட்­ட­தா­கவும் அதில் தக­வல்கள் உள்­ள­தாக தாம் நம்­பு­வ­தா­கவும் அதனை ஆய்­வுக்கு உட்­ப­டுத்த உத்­த­ரவு பிறப்­பிக்க வேண்டும் எனவும் சட்ட வாதி டிலான் கோரிக்கை விடுத்தார்.

அத்­துடன் முன்னாள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­கா­ரி­யான ஆனந்த சம­ரசேகர தற்­போ­தைய சட்ட வைத்­திய அதி­காரி தனது சோத­னை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்தும் வண்ணம் மரண அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ள­தாக ஊடகங்க­ளுக்கு விடுத்­துள்ள கருத்­துக்கள் இந்த விசா­ர­ணையை பாதிக்கக் கூடி­யவை எனவும் அதனை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தா­கவும் சட்ட வாதி தனது வாதத்தில் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் தாஜுதீன் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கின் புத்­தகம் மற்றும் ஆவ­ணத்தை பாது­காப்­பாக பெட்­டகம் ஒன்றில் வைக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இந் நிலையில் அரசின் பிர­தான சட்­ட­வா­தியின் வாதத்­துக்கு பின்னர் திறந்த மன்றை அழைத்த நீதிவான் நிஸாந்த பீரிஸ், சட்­ட­வா­தியின் சில கோரிக்­கை­களை நிரா­க­ரித்தார்.

தகவல் அறியும் உரிமை ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உள்ள நிலையில் வழக்கின் புத்­தகம் மற்றும் ஆவணங்­களை பெட்­ட­கத்தில் வைத்து பூட்­டு­வது முறை­யல்ல என சுட்­டிக்­காட்­டிய நீதிவான் சட்­ட­வா­தியின் கோரிக்­கையை நிரா­க­ரித்­த­துடன் இவ்­வி­வ­காரம் தொடர்பில் செய்தி சேக­ரிக்கும் போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது ஒழுக்க விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு செயற்­ப­டு­வார்கள் என நம்­பு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

அத்­துடன் முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சேகரவின் கருத்­துக்கள் விசா­ர­ணை­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தி இருப்பின் அது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் ஊடாக நீதிமன்றின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரு­மாறு நீதிவான் தெரி­வித்தார்.

அதனை விட பிர­தான சாட்­சி­யா­ள­ருக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் குறித்து புல­னாய்வுப் பிரிவு தனி­யான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள நிலையில் அச்­சு­றுத்தல் விடுத்­தோரை உடன் கைது செய்­யு­மாறு நீதிவான் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­த­ார்.

அத்துடன் மீட்­கப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சியை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கணணி மற்றும் விஞ்ஞான பிரிவில் ஒப்­ப­டைந்து பூரண அறிக்கை ஒன்­றினை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 22 ஆம் திகதி மன்றில் சமர்­பிக்­கு­மாறும் உத்­த­ர­விட்டார்.

இதனை விட வஸீம் தாஜு­தீனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் இரண்டாம் பிரேத பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டு வரும் தற்போதைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் உள்ளிட்ட குழுவுக்கு அதன் அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி கட்டாயமாக நீதிமன்றில் சமர்பிக்க வேண்டும் என நீதிவான் நிஸாந்த பீரிஸ் அறிவித்தல் விடுத்ததுடன் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Share.
Leave A Reply