மீண்டும் ஜெனிவாவை நோக்கிய சந்திப்புக்கள் பயணங்கள் என இலங்கையின் யுத்தக் குற்ற விசாரணையை மையப்படுத்திய நகர்வுகள் முனைப்புப்பெறத் தொடங்கியுள்ளன.

ministers-oath-01புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ள முன்னரே அவசர அவசரமாக வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீரவும், நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்சவும், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக சுவாமிநாதனும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கத்தையும் அமைத்தனர்.

அதிலும் குறிப்பாக அவர்களுக்கிடையே இலங்கைக்கெதிரான யுத்தக் குற்ற விசாரணை மற்றும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்களில் பொதுக்கொள்கை ஒன்றின் அடிப்டையில் இணைந்து ஆகக்குறைந்தது 2 வருடங்களுக்கேனும் செயற்படுதல் எனும் உடன்படிக்கை ஒன்றையும் கைச்சாத்திட்டனர்.

Ranil-PM11

இவற்றுக்கிடையே மங்கள சமரவீரவின் தென் ஆபிரிக்காவுக்கான பயணமும் சந்திப்புக்களும், அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்க உப ஜனாதிபதியும் சிறிலங்காவுக்கான விசேட தூதுவருமாகிய சிறில் ராம்போசா தனது ஜப்பான் நோக்கிய பயணத்தின் போது கட்டுநாயக்காவில் தரித்து நின்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் சந்தித்தமை,

Ranil_meet_s_001அதன் பின்னர் சீனாவிலிருந்து திரும்பும் வழியில் தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜெக்கப் சுமா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கட்டுநாயக்காவில் சந்தித்து உரையாடியமை போன்ற நிகழ்வுகளும் நடந்துமுடிந்துள்ளன.

அதுமட்டுமன்றி ஜெனிவா மனிதவுரிமை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் காலத்தில் ரணிலின் இந்தியப் பயணம் நடைபெறவிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரி இந்தியா பயணம் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தில் உத்தியோகப்பற்றற்ற ஒரு செயற்பாட்டளராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கொழும்பில் தேசிய அரசாங்கம் அமைத்தல் மற்றும் அமைச்சர்கள் நியமனம் போன்ற விடயங்களில் இழுபறிநிலை இருந்தபோதிலும் டில்லி சென்று இந்து- பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு சில நாட்கள் தங்கி நின்று பிரதமர் மோடி , வெளிநாட்டமைச்சர் சுஷ்மா உட்பட பல இந்திய தலைவர்களை சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வுகள் அணைந்தும் வெளிவரவுள்ள ஐ.நா.மனிதவுரிமை சபையின் யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை தொடர்பில் சிங்களதேசம் எவ்வளவு தூரம் சிரத்தையெடுத்து செயற்படுகிறது என்பதையே காட்டுகிறன.

tkn-09-08-nt-01-ndkஇந்த யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரான செயற்பாடுகளை முறியடிக்கும் விதத்திலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் அவரின் முழுநேர வேலையாக சிறிலங்காவை பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் இந்த சாணக்கியமான காய் நகர்த்தல்களின் விளைவாகவே மாவை சேனாதிராசா, சுமந்திரன் போன்றவர்கள் வெளிப்படையாக சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக கதை அளக்கத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் சிறிலங்காவின் உள்ளக விசாரணைக்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ranil-pm-400-seithy-300x199பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னரான தனது காய் நகர்த்தல் மூலம்  தான் ஒரு மிகச் சிறந்த இராஜதந்திரியென்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

எப்படி வீழ்த்தப்பட முடியாது என்று கணிப்பிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தையெனும் இரத்தம் சிந்தா பொறியினூடாக தந்திரமாக பலவீனப்படுத்தி, கருணா மூலம் பல ஆயிரம் போராளிகளை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்தெடுத்து அவர்கள் மூலம் கணிசமான ஆயுதங்களையும் புலிகளிடம் இருந்து அகற்றி பின்னர் அவர்களை உலகின் முன் தனிமைப்படுத்தப்பட்டு ஈற்றில் எவ்வாறு முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு வித்திட்டாரோ

அதையொத்த அணுகுமுறையையே மீண்டும் கடந்த ஜனவரியில் பிரதமராக பொறுப்பேற்றவுடன் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளார். அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தலைவர்களை குறிவைத்து சில எலும்புத் துண்டுகளை முதலில் வீசினார். வீசப்பட்ட எலும்புத்துண்டுகளுக்காக அவர் எதிர்பார்த்தபடியே தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சில தலைவர்கள் வாலை ஆட்டினர்.

ஆனால்,அவரின் இந்த தந்திரம் வட மாகாணசபை முதல் அமைச்சர் விக்னேஸ்வரனிடத்தில் பலிக்கவில்லை.

அவர் ஒரு நீதியரசராக இருந்ததால் பெற்ற பண்புகளும் பதவி மற்றும் பண மோகம் அற்ற அவரது பண்புகளுமே அவரை ரணிலின் தந்திரங்களில் இருந்து கவசம்போல பாதுகாத்தன.

தமிழ் மக்களிடத்தில் தேர்தலின்போது கொடுத்த வாக்கை இறுதிவரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு பற்றுறுதியுடன் அவர் செயற்படுவதுபோல தெரிகிறது.

CVVஇதன் காரணமாக அவரை தனிமைப்படுத்துவதனுடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஒரு பிளவை ரணில் தந்திரமாக ஏற்படுத்த முனைந்துள்ளார்.

அதன் ஒரு வெளிப்பாடே வடமாகாண சபையின் இனவழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் ரணில் தான் ஒரு போதும் முதல் அமைச்சர் விக்கினேஸ்வரனை சந்திக்கப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டமையாகும் .

மீண்டும் ரணில் பிரதமர் பதவியை பெற்று ஆட்சி அமைத்தவுடன் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கியதுடன் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை வழங்கினார்.

சம்பந்தன் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் மாவை சேனாதிராசா எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த மூன்று சிரேஷ்ட தலைவர்களும் ஒன்று சேர்ந்து வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதையோ சந்திப்புக்களில் கலந்து கொள்வதையோ செய்யமுடியாது.

எப்படி அன்று கதிர்காமர் என்ற தமிழனை வைத்து விடுதலைப் போராட்டத்தை உலகளவில் ஒரு பயங்கரவாதப் போராட்டமாக முத்திரை குத்தினார்களோ, அது போன்றே இன்று சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ள தமிழர் பிரச்சினையை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பதவிகளை வழங்கி சிறிலங்காவின் உள்ளகப் பிரச்சனையாக மாற்ற ரணில் முனைந்துள்ளார்.

எப்படி துரியோதனன் கேட்டவன் என்று அறிந்தும் தர்மத்துக்காக அன்றி அதர்மத்துக்காக செஞ்சோற்றுக் கடனை தீர்க்கும் பொருட்டு கர்ணன் இறுதிவரை செயற்பட்டானோ அதுபோலத்தான் ரணில் போட்டுள்ள எலும்புத் துண்டுகளுக்காக இறுதிவரை வரை ஆடும் நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.

selvam-150x1502015ல் தமிழருக்கான தீர்வு வைக்காவிடின் தாம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த அதே செல்வம் அடைக்கலநாதன், தன் இனத்தை விற்றுப் பிழைத்த EPDPயின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் வகித்த பதவியை இன்று பொறுப்பேற்றுள்ளார்.

அன்று சந்திரகுமார் இந்த பதவியை வகித்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அது துரோகத்தனமாக தெரிந்தது. ஆனால் இன்று தாங்கள் அந்த பதவியை வகிக்கும்போது தமிழ் மக்களின் போராட்டத்தை பலப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அது தெரிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கிடைத்ததனால் தமிழ் தேசியப் பிரச்சினையை இனி வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் எடுத்துச் செல்ல முடியும் என்றும் அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் செயற்பட்டதைப் போன்று செயற்படமுடியுமெனவும் கதை அளக்கப்படுகிறது.

அன்று அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகியதும் இன்று சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியதும் இரு வேறு புற அகச் சூழ்நிலைகளைக் கொண்டவை.

 Black_july-10

அன்று 1977 முதல் 1983 வரை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகிய போது மொத்தமுள்ள 168 பாராளுமன்ற ஆசனங்களில் ஐக்கிய தேசியக்கட்சி 140 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களையும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி 8 ஆசனங்களையும் கைப்பற்றி இருந்தன.

அதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கப்படுவது தவிர்க்கப்படமுடியாத ஒன்று ஆனது. இன்று ஏற்பட்ட நிலை இது அல்ல.

இன்று ஏற்ப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தை ஒத்த நிலை கடந்த ஜனவரி ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் ஏற்ப்பட்டது. இம்முறை கேட்டதுபோலவே தமக்குத் தான் எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்று கூட்டமைப்பு அன்றும் கேட்டிருந்தது. ஆனால் அப்பதவி சம்பந்தனுக்கு வழங்கப்படவில்லை.

எதிர்க்கட்சி வரிசையிலிருந்த நிமால் சிறிபாலடி சில்வாவுக்கே அது வழங்கப்பட்டது. அதே வழக்கத்தை இம் முறையும் சிங்களம் செயற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாது சம்பந்தனுக்கு அப்பதவியை வழங்குவதில் சிங்கள இனவாத கட்சிகளின் தலைவர்கள் முதல் ஐக்கிய தேசிய கட்சி வரை ஒத்துழைத்து செயற்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்க்கட்சி தலைவர் ஆக்கும்படி 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கையளித்த கடிதம் இறுதிவரை சபாநாயகருக்கு கையளிக்கப்படவில்லை.

சம்பந்தனுக்கு இப்பதவியை கொடுக்கக்கூடாது என்று சிங்கள தலைவர்கள் நினைந்திருந்தால், இலகுவாக குமார வெல்கமவை எதிர்க்கட்சி தலைவர் ஆக்கி இருக்கலாம்.

ஏன் குமார வெல்கமவை எதிர்க்கட்சி தலைவர் ஆக்கவில்லை என்று விமல் வீரவன்ச பராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பிரதமரும் சபாநாயகரும் அளித்த பதில் உங்கள் கடிதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாகவே இருந்தது.

மாறாக, விதி முறைகளின் படி கூட்டமைப்புக்கு தான் இந்த பதவி போக வேண்டும் என்றோ சட்டப்படி வேறு எவரும் உரிமை கொண்டாட முடியாது என்றோ அவர்கள் பதில் அளிக்கவில்லை.

ஆகவே, எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய பதவி அல்ல. மாறாக, கேட்டு வாங்கப்பட்டதும் சிங்கள தலைவர்களால் விரும்பிக் கொடுக்கப்பட்டதுமே ஆகும்.

கூட்டமைப்பு தலைவர்கள் இன்று என்னதான் சொன்னாலும், இன்றுள்ள யதார்த்தம் என்னவென்றால், தமிழரை பாதுகாக்கும் அதேசமயம் அந்த தமிழ் மக்களை அழித்தொழித்த சிங்கள தேசத்தையும் பாதுகாக்கும் தார்மீக கடமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமந்து நிற்கிறது.

amir21அன்று அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதுதான் 1977 மற்றும் 1983 தமிழருக்கெதிரான இனக்கலவரங்கள் இடம்பெற்றதுடன் 1981ம் ஆண்டு உலக புகழ் பெற்ற யாழ் நூல்நிலையமும் எரிக்கபட்டது

அத்துடன் சிறிலங்காவின் அரசியலமைப்பு மறுசீரமைக்கப்பட்டு நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை 1978ல் ஏற்படுத்தப்பட்டது.

அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தினூடாக தனித் தமிழீழத்துக்கு ஆணை கேட்டுவிட்டுத்தான் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்று மாவட்ட சபை பற்றி கதைத்தார்கள்.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் மூலம் தமிழருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. மாறாக இருந்ததையும் இழந்ததுவே மிச்சம்.

அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதுதான் 1983ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி சிறிலங்காவின் பாராளுமன்றத்தினூடாக சிறிலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக யாரும் கோரிக்கை வைக்கமுடியாது என்று 6வது திருத்தச் சட்டமும் கொண்டுவரப்பட்டது.

எப்போது பதவிகள் சலுகைகளை ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனத்தின் கட்சி ஒன்று பெற்று செயற்படத் தொடங்குகின்றதோ அன்றே அக்கட்சியின் இனம் சார்ந்த விடுதலைப் பயணம் முடிவுறுகின்றது.

இது தனியே விடுதலை வேண்டி நிற்கும் கட்சிகளுக்கு மட்டும் அல்ல பொதுவான அரசியல் கட்சிகளுக்குமே பொருந்தும்.

எவ்வாறு பதவிகள் மற்றும் சலுகைகளை பெற்று மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் விடுதலைக்கான செயற்பாடுகளை இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை கைவிட்டன என்பதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

 k-117a-12_05_09_hosp_attack_01

அளப்பெரும் தியாகங்கள் மூலம் இன்று ஏற்பட்டுள தமிழர் பிரச்சினைக்கான சர்வதேச அங்கீகாரத்தை அற்ப பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காவும் விற்க முனைகின்றனர்.

ஐ. நா செயலாளர் பான் கி மூன் இனால் அமைக்கப்பட்ட தாருஸ்மான் குழுவினால் மேற்கொள்பப்பட்ட விசாரணையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயன்முறையின் ஒரு இடைக்கட்டமே ஐ. நா மனித உரிமைகள் சபையினால் வெளியிடப்பட இருக்கும் அறிக்கை ஆகும்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மட்டும் குற்றவாளிகளுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்படப்போவதில்லை. மேலும் விசாரணைகள் தொடரப்பட்டே முடிவுகள் மேற்கொள்ளபப்டும்.

ஆனால், சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று ஆணித்தரமாக எமது சட்டப்புலமையுள்ள அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு விசாரணை முடிவுற்றதாக கூறுவதானது நகைப்புக்கிடமாகவுள்ளது.

இவ்விசாரணை அறிக்கையை அடுத்த கட்டடத்துக்கு நகர்த்திச் செல்வதாக இருந்தால் ஒன்றில் அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட வேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்தப்படவேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) நேரடியாக கொண்டு செல்லமுடியாது. ஏனென்றால், சிறிலங்கா ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

இதைத்தான் ரணில் விக்கிரமசிங்க தான் 2001ம் ஆண்டு பிரதமராக இருக்கும்போது ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை தவிர்த்த காரணத்தினாலேயே மகிந்த ராஜபக்ச இன்று தப்பியுள்ளார் என்று அடிக்கடி கூறிவருகின்றார்.

 k-117a-12_05_09_hosp_attack_01

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு இவ்விசாரணை அறிக்கை செல்லவேண்டுமானால் ஐ.நா.மனிதவுரிமை அனையாளரினால் நேரடியாகவோ அல்லது ஐ.நா.செயலாளர் நாயகத்தினூடாகவோ மேற்கொள்ள முடியும்.

இவ்வறிக்கை ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு செல்லும் பட்சத்தில் அது சர்வதேச ரீதியில் கிடைக்கப்பெற்ற அதிகூடிய அங்கீகாரமாகவும், எக்காலகட்டத்திலும் அவ்விசாரணையை நடத்தக்கூடிய வாய்ப்பு மனிதவுரிமைகளில் ஆர்வமுள்ள நாடுகளால், ஆர்வலர்களால் முன்னெடுக்கபப்ட முடியும்.

அத்துடன் அது பாதுகாப்புச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்குமாயின் அது மீண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கோ (ICC) அல்லது ஐ.நாவினால் சுயாதீனமாக ஏற்படுத்தப்படும் ஒரு விசாரணை மன்றுக்கோ (யூகஸ்லாவியா போன்று) பாரப்படுத்துவதன் மூலம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முடியும்.

 4A1F5961-A3A1-47B1-A372-019CDC152A7F_cx12_cy13_cw72_mw1024_s_n_r1

சில தமிழ் தலைவர்கள் பாதுகாப்புச் சபைக்கு இவ்விசாரணை அறிக்கை சென்றாலும் அங்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து விடும் என எதிர்மறையான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி தமது சிங்கள விசுவாசத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்கின்றனர்.

உண்மையில் பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்தப்பட்ட எந்தவொரு இனவழிப்பு சம்பந்தமான விசாரணைக்கும் இவ்விரு நாடுகளும் இதுவரை தங்களது வீட்டோ அதிகாரத்தை பாவித்ததில்லை.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு நாடாக விளங்கிய யுகோஸ்லாவியாவிற்கெதிராக ஐ.நா.வினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணையை ரஷ்யா தனது வீட்டோவை பாவித்து தடுத்திருந்திருக்கவில்லை.

அப்படியே தான் தமிழின அழிப்புக்காண விசாரணை பாதுகாப்புச் சபையில் தடுக்கப்பட்டாலும் கூட பூகோள ஒழுங்கமைப்புக்கள் மாறுகின்ற போது மீண்டும் எமக்கான வாய்ப்புக்கள் உருவாகும் சந்தர்ப்பம் இருக்கிறது.

Hamsanan-1

இந்த நிலையில், சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிற தலைவர்கள் கட்டுப்படாமல் சுயாதீனமான ஓரு குழுவாக செயற்பட்டு வட மாகாணசபையை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி சர்வதேச விசாரணை செயன்முறையினூடாக நீதியைப் பெற செயற்படவேண்டும்.

மேலும் மக்களை வடகிழக்கில் அணிதிரட்டி மக்கள் போராட்டங்களுக்குடாக சர்வதேச சமூகத்துக்கு எமக்கான நீதி விசாரணை சர்வதேசத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

இதற்கு மக்கள் அபிமானம் மிக்க தலைவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் முன்வரவேண்டும். இப்படியான போராட்டங்கள் மூலமே சர்வதேசத்தின் காதுகளுக்கு எமது பக்க நியாயத்தை எடுத்தியம்ப முடியும்.

இப்போராட்டங்களை முடக்க சிறிலங்கா எத்தனிக்குமாயின் அதன்மூலம் அவர்களது உண்மைமுகம் மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டப்பட முடியும்.

ஒருவேளை சிறிலங்காவின் உள்ளக விசாரணைக்கு அங்கீகாரம் கிடைக்குமாயின் இப்போராட்டங்கள் அதில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை உண்டுபண்ணி இயன்றளவு சுயாதீனத் தன்மையுள்ளதாகவும் ஐ.நாவினால் நேரடி கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டதாகவும் அமைவதற்கு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்க உதவும்.

leaders-of-the-tamil-national-alliance-tna-for-215404

தமிழ் தேசியக் கூட்டமைப்போ மீண்டும் முதலைக் கண்ணீர் வடிக்கும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் ஒரு கருவியாகவே செயற்படுகிறது. இதற்கு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின்றி அவர்கள் செயற்பட்டமையே காரணமாகும்.

இதனால் இந்தியா காட்டும் குருட்டுத்தனமான பாதையின் ஊடாகவே அவர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தமிழ் மக்கள் மிகவும் சிரமப்பட்டு கட்டியெழுப்பிய மேற்கு நாடுகளின் தமிழர் சார்பு நிலையை சிங்கள தேசம் தமக்கான சார்பு நிலையாக மாற்ற உதவியுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை அதன் செயற்பாடானது இலங்கைத்தீவில் நீடித்த நிலையான அமைதியை தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்துவதே ஆகும்.

நாம் தான் எமக்கான தீர்வு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடன் பற்றுறுதியுடன் செயற்படவேண்டும்.

இந்தியத் தரப்பால் உத்தரவாதப்படுத்தப்பட்ட 13ம் திருத்தச்சட்டத்துக்காகவே சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றோர் தமிழருக்கான தீர்வாக இன்று ஏற்றுக்கொண்டு செயற்ப்படுகின்றனர்.

ஆனால் போலியாக தமிழ் மக்கள் முன்பாக சமஷ்டி, பகிரப்பட்ட இறையாண்மை, சுயநிர்ணய உரிமை போன்ற கோஷங்களை முன்வைத்துள்ளனர்.

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகிய பின்னர் ஆற்றிய உரையில் வெளிப்படையாகவே இந்திய மாநிலங்களையொத்த அதிகார பகிர்வை இலங்கையிலும் செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்திய மாநில ஆட்சிக்கட்டமைப்பானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பிரசாரத்தில் கூறிய எந்தவொரு அதிகாரத்தையும் உரிமையையும் கொண்ட ஆட்சிக்கட்டமைப்பல்ல.

00111987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தம் காரணமான கசப்பான அனுபவத்தின் காரணமாக, இலங்கை விடயத்தில் அவதானமாக செயற்ப்பட்டு வந்த இந்தியா இபொழுதும் கூட அவதானத்துடனேயே செயற்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, தென்னாபிரிக்கா மூலம் காய்களை நகர்த்தி வருகிறது. தென் ஆபிரிக்காவின் உண்மைக்கும் மீள்நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவையொத்த ஒரு ஆணைக் குழுவை நிறுவி அதன் மூலம் சிறிலங்காவை தண்டனையிலிருந்து பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

இந்த சவால்களை தாயகத் தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமே முறியடிக்கமுடியும்.

-லோ. விஜயநாதன்-

Share.
Leave A Reply