தாஜுதீனின் தொலைபேசி ‘மெமரி’யில் உள்ள படங்கள், ஓடியோ, வீடியோக்கள் குறுந் செய்திகள் தொலைபேசி எண்கள் ஒரே சீடியில் டொயாடோ லங்கா நிறுவனம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை

வஸீம் தாஜுதீன். மூன்று வரு­டங்­களின் பின்னர் நாளுக்கு நாள் முன்­னேற்­ற­க­ர­மான விசா­ரணை பாதை ஒன்றில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய, எதிர்­பார்ப்பு மிக்க ஒரு மர்­மத்தின் சுருக்­கமே அது.

சென். தோமஸ் கல்­லூ­ரியில் தனது கல்­வியை ஆரம்­பித்த வஸீம் தாய் தந்­தை­யுடன் ஒரு சகோ­தரர் ஒரு சகோதரி என சிறிய அழ­கிய குடும்­பத்தின் கடைக் குட்டி.

ஆரம்ப கல்­வியின் பின்னர் கல்­கிஸை சென். தோமஸ் கல்­லூ­ரியில் கல்­வியை தொடர்ந்த வஸீம் சென்.தோமஸ் கல்­லூ­ரியின் றக்பி அணியின் உப தலை­வ­ராக 2003 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் விளையாடியவர்.

அத்­துடன் 19 வய­துக்கு கீழ்ப்பட்­டோ­ருக்­கான பாட­சாலை அணியில் அதே ஆண்டு விளை­யா­டி­யவர். இவற்­றுடன் அவர் இலங்கை தேசிய அணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி விளை­யா­டி­யவர்.

அத்­துடன் 2008 ஆம் ஆண்டு ஹொங்கொங் செவன் றக்பி அணிக்­கா­கவும் விளை­யா­டி­யவர். இந் நிலை­யி­லேயே அவர் 2008 ஆம் ஆண்டில் ‘ஜன­ரஞ்­ச­க­மான றக்பி வீரர்’ என்ற விரு­தை வெற்­றி­கொண்­டி­ருந்தார்.

இந் நிலையில் ஹெவலொக் கழக அணியின் தலை­வ­ராக 2009 ஆம் ஆண்டு தெரி­வானார். அதன் பின்னர் தாஜுதீன் காயத்­துக்கு உள்­ளா­கினார்.

இதனால் அவரின் காலில் சத்­திர சிகிச்சை ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. அதனால் அவர் மீண்டும் 2012 ஆம் ஆண்டே றக்பி களத்­துக்கு வந்தார்.

இந் நிலை­யில்தான் கடந்த 2012, ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி நார­ஹேன்­பிட்டி பார்க் வீதியில் சாலிகா மைதா­னத்தின் மதிலில் மோதுண்ட நிலையில் எரிந்­து­கொண்­டி­ருந்த காரில் இருந்து வஸீம் சட­ல­மாக மீட்கப்பட்டார். இது தான் வஸீமின் வாழ்க்கைச் சுருக்கம்.

இந் நிலையில் வஸீமின் மர­ணத்தின் மர்மம் குறித்து பேசு­வது இன்று நேற்று ஆரம்­பித்த விட­ய­மல்ல. மாற்றமாக வஸீமின் சடலம் எரிந்த நிலையில் மீட்­கப்­பட்ட 2012 மே மாதம், 17 ஆம் திக­தியின் பின்னர் கிருலப்பனையின் ரொபர்ட் குண­வர்­தன மாவத்­தையில் இருந்து வஸீமின் பணப் பை நபர் ஒரு­வரால் கண்டெடுக்­கப்­பட்டு பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

நார­ஹேன்­பிட்­டியில் சட­ல­மாக இருந்­த­வரின் பணப்பை மட்டும் கிரு­லப்­ப­னைக்கு எப்­படி சென்­றது என ஆரம்பித்த சம்­பவம் பல்­வேறு கேள்­வி­களை தொடுத்த வண்ணம் தீர்க்­கப்­ப­டாது தொடர்ந்­தது.

இந்நிலை­யில் தான் கடந்த ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தீர்வு காணப்­ப­டாத அல்­லது சரி­யாக விசாரணைக்குட்படுத்­தாத பல்­வேறு சம்­ப­வங்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­திய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன், இந்த விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்யும் பொறுப்பை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­விடம் ஒப்­ப­டைத்தார்.

அதன்­படி விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான  விசா­ரணைக் குழு­வி­னரால் விசாரணைக்குட்­ப­டுத்­தப்­பட்­டது.

முதலில் நார­ஹேன்­பிட்டி பொலிஸார் இந்த விவ­காரம் தொடர்பில் செய்த விசா­ர­ணை­களின் அறிக்­கையை படித்த புல­னாய்வுக் குழு, அதன் பின்னர் சுமார் 6 மாதங்க­ளுக்குள் தனது விசா­ர­ணையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்­டுள்­ளது எனலாம்.

எந்த தட­ய­முமே இல்­லாமல் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த விசா­ர­ணை­களில், விபத்து என நம்­பப்­பட்ட வஸீம் தாஜுதீனின் மர்ம மரணம் ஒரு கொலை­யாக இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் உள்­ளன என நிறுவும் அளவுக்கு புல­னாய்வுப் பிரி­வி­னரால் கார­ணங்­களை அடுக்க முடிந்­துள்­ளது.

இது­வரை புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், தாஜு­தீ­னுக்கு குறித்த தினம், அதா­வது 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி நள்­ளி­ரவு வேளையில் கிரு­லப்­பனை பொலிஸ் பிரிவின் ரொபர்ட் குண­வர்­தன மாவத்­தையில் ஏதோ ஒரு அசம்­பா­வி­தத்­துக்கு அல்­லது தாக்­கு­த­லுக்கு அல்­லது கடத்­த­லுக்கு முகம்­கொ­டுத்­துள்ளார் என ஊகிக்க கூடிய சான்­றுகள் உள்­ளன.

குறிப்­பாக பணப்­பை­யுடன் சேர்த்து காணாமல் போன வஸீமின் விலை மதிப்பு மிக்க கைய­டக்கத் தொலைபேசிக்கு என்ன நடந்­தது என பலரும் கேள்­வி­யெ­ழுப்ப, தனியார் தொலை­பேசி சேவை நிறு­வனம் ஒன்றும் இந்த விட­யத்தில் கை விரிக்க தற்­போது புல­னாய்­வுப்­பி­ரிவு அதற்­கான பதிலை வழங்­கி­யி­ருக்­கின்­றது.

வஸீமின் சிம் அட்டை இல்­லை­யென்றால் என்ன, தொலை­பே­சியின் எமி இலக்­கத்தை வைத்து விசாரணைகளை ஆரம்­பித்த புல­னாய்வுப் பிரிவு, தொலைத் தொடர்­புகள் ஆணைக் குழு­விடம் இருந்து பெற்றுக்கொண்ட விஷேட தக­வல்­களின் பிர­காரம் தாஜு­தீனின் தொலை­பே­சியை கடந்த 3 வாரங்­க­ளுக்கு முன்னர் மீட்­டது.

நுவ­ரெ­லியா, அக்­க­ரப்­பத்­தனை, க்ளாஸ்கோ தோட்­டத்தில் ஒருவரிடம் இருந்த நிலை­யி­லேயே இந்த தொலைபேசி மீட்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் குறித்த நபரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை செய்து வாக்கு மூலம்பதிவுசெய்துள்ள நிலையில், அவ­ருக்கு மற்றும் ஒருவரே இந்த தொலை­பே­சியைக் கொடுத்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

உண்­மையில் இந்த தொலை­பேசி கண்­டு­பி­டிப்­பா­னது இந்த சம்­ப­வத்தைப் பொறுத்­த­வரை புதிய திருப்­ப­மா­கவே கரு­தப்­பட வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில் பல கேள்­வி­க­ளுக்கு, பல ஊகங்­க­ளுக்கு, பல வாய்­மொழிக் கதை­க­ளுக்கு இந்த தொலை­பே­சியில் உள்ள பல தக­வல்கள் பதில் கூறத்­தக்­கது.

அதனால் தான் குறித்த கைய­டக்கத் தொலை­பே­சியை கொழும்பு பல்­க­லைக்­க­ழகத்தின் கணினி மற்றும் விஞ்ஞான ஆய்வுப் பிரி­வுக்கு அனுப்பி, அந்த தொலை­பேசி நினைவுக் களஞ்­சி­யத்தில் (போன் மெமரி) உள்ள புகைப்­ப­டங்கள், ஓடியோ, வீடி­யோக்கள், குறுஞ்­செய்­திகள் மற்றும் தொலை­பேசி எண்கள் ஆகி­ய­வற்றை மீளப் பெற ஆய்­வுக்கு உட்­ப­டுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

புல­னாய்வுப் பிரி­வி­னரின் தக­வல்­களின் படி அந்த தக­வல்­களை மிக விரை­வாக மீளப் பெற்­றுக்­கொள்ள முடியுமாக இருக்கும் என நம்­பலாம்.

இத­னூ­டாக வஸீமின் நண்­பர்கள் எதி­ரிகள், அவ­ருக்கு இருந்த அச்­சு­றுத்­தல்கள் என பல விட­யங்­களை வெளிப்படுத்தி அத­னூ­டாக வெற்­றி­க­ர­மான விசா­ர­ணை­யொன்றை மேற்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.

இந்த கைய­டக்கத் தொலை­பேசி விவ­காரம் எப்­படி வஸீமின் மர்ம மரணம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு மிக முக்கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றதோ அதனை ஒத்த மேலும் பல முக்­கிய தக­வல்­களை, வஸீமின் சடலம் தொடர்பில் ஆரம்­பத்­தி­லேயே சட்ட வைத்­திய நடவ­டிக்­கை­களை மேற்­கொண்ட கொழும்பு முன்னாள் சிரேஷ்ட சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­க­ரவின் இறுதி பிரேத பரி­சோ­தனை அறிக்­கையும், நீதி­மன்ற உத்தரவுக்கு அமைய சமர்ப்­பிக்­கப்­பட்ட வஸீமின் கார் விபத்­துக்கு உள்­ளா­னதா என்ற டொயாடோ லங்க நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையும் வழங்­கி­யுள்­ளது என்­பதில் சந்­தேக மில்லை.

ஆனந்த சம­ர­சே­க­ரவின் இறுதி பிரேத அறிக்­கையில், வஸீம் தாஜுதீன் எவ­ரி­னாலோ கடு­மை­யாக தாக்கப்பட்டுள்­ள­மையும் அதன்­பின்னர் அவர் குற்­று­யி­ராக இருந்த நிலையில் தீயிற்கு இரை­யா­கி­யுள்­ளமை தொடர்­பிலும் கூறப்­பட்­டுள்­ளது.

கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி ஒருவர் அவ­ய­வங்கள் செய­லி­ழந்த நிலையில் கார் ஒன்றை ஓட்டி வந்து மதிலில் மோதி விபத்­துக்­குள்­ளானார் என்­பதை யாரும் ஊகிக்க முடி­யாது.

அப்­ப­டி­யாயின் வஸீம் கடு­மை­யாக தாக்­கப்­பட்டு நினை­வி­ழந்­ததன் பின்னர் பிறி­தொ­ரு­வரால் அவ­ரது காரில் ஏற்றிக்­கொண்டு  நார­ஹேன்­பிட்டி பகு­திக்கு கொண்­டு­வந்து விபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும் என்ற சந்தே­கங்­க­ளுக்கு ஆனந்த சம­ர­சே­க­ரவின் பிரேத அறிக்­கை­யிலும் பதில் உள்­ளது.

அதே போன்­றுதன் டொயாடோ லங்கா நிறு­வ­னத்தின் அறிக்கை. இந்த அறிக்­கை­யா­னது கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நீதி­மன்றம் விடுத்த உத்­த­ர­வுக்கு அமைய தயார் செய்­யப்­பட்­ட­தாகும்.

மோட்டார் திணைக்­கள ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் தொழில் நுட்பம் தொடர்­பி­லான உதவி ஆணை­யாளர் ஜே.எஸ்.ஜய­வீர, உதவி அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர், புல­னாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் விக்ர­ம­சே­கர, பொலிஸ் பரி­சோ­தகர் பிரசாத் சில்வா, அஜித் பேதுரு ஆரச்சி, கொழும்பு தெற்கு பொலிஸ் தட­ய­வியல் பிரிவு, டொயடோ லங்கா தனியார் நிறு­வ­னத்தின் பொது முகா­மை­யாளர் ஆகி­யோ­ருக்கு நீதிமன்று இட்ட கட்­ட­ளையின் பிர­கா­ரமே இந்த அறிக்கை தயா­ரானது.

நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் தற்­போதும் வைக்­கப்­பட்­டுள்ள வஸீமின் எரிந்த கார், அது மோதி­ய­தாக கூறப்­படும் சாலிகா மைதான மதில் பகுதி ஆகி­ய­வற்றை சென்று ஆராய்ந்­து­விட்டே இந்த அறிக்கை தயார் செய்­யப்­பட்­டது.

10 கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வித­மாக தயார் செய்­யப்­பட்­டுள்ள இந்த அறிக்­கையும் வஸீமின் கார் உண்மையில் விபத்­துக்கு முகம் கொடுத்­ததா? அல்­லது எவ­ரேனும் ஒரு­வரால் தீவைத்து எரிக்­கப்­பட்­டதா என தீவிர விசா­ர­ணை­செய்­யப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­கின்­ற­தா­கவே அமைந்­துள்­ளது.

இவற்றை விட புல­னாய்வுப் பிரிவு இந்த விவ­கா­ரத்தில் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ராக கருதும் வஸீமின் மிக நெருங்­கிய ஒரு­வ­ருக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் குறித்தும் பிரத்­தி­யே­க­மாக அவ­தானம் செலுத்தியுள்­ளது.

கார் ஒன்றில் வந்­துள்ள அடை­யாளம் தெரி­யாத ஒரு கும்பல் குறித்த நபர் தொடர்பில் சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் தகவல் சேக­ரித்­துள்ள நிலையில், அது தொடர்பில் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் குறித்த சாட்­சி­யா­ள­ரினால் முறைப்­பாடும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இவை­ய­னைத்தும் வஸீம் விவ­கா­ரத்தில் ஏதோ ஒரு அசம்­பா­விதம் நடந்­துள்­ளது என்­பதை மென்மேலும் உறுதி செய்யும் காரணிகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இந் நிலையில் தாஜுதீனின் மரண விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ், இந்த விவகாரத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த சூட்சும விசாரணைகளைப் போன்றே, நேரடி மற்றும் விஞ்ஞான ரீதியிலான தடயங்களையும் சாட்சியங்களையும் வைத்து வஸீமின் மர்ம மரணத்துக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தற்போது சந்தேக நபர்களை கைது செய்யும் தூரத்திலேயே உள்ளன.

மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வஸீமின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட புதிய பிரேத பரிசோதனைகள் அடுத்த மாதம் 22 ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்போ அதனைத் தொடர்ந்தோ தாஜுதீன் விவகாரத்தில் சந்தேக நபர்கள் கைதாவர் என எதிர்பார்க்கலாம்.

-எம்.எப்.எம்.பஸீர்-

Share.
Leave A Reply