“விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியென்பது சிலர் கூறுவது போன்று வெறுமனே மகிந்தவின் வெற்றியோ அல்லது கோத்தபாயவின் வெற்றியோ அல்ல, மாறாக அது பலம்பொருந்திய நாடுகளின் ஆதரவில் இலங்கை இராணுவம் பெற்றுக்கொண்ட வெற்றி.” – ‘யதீந்திரா’

………………………………………………..

இலங்கை அனுபவம் : புவிசார் அரசியல் போட்டியை கையாளுவதற்கான ஒரு அமெரிக்க படிப்பினையா?

jho-1

இலங்கை அரசியலை வெறுமனே சிங்கள மேலாதிக்கமாகவும் அதற்கு எதிரான தமிழர் போராட்டமாகவும் சுருக்கிப் பார்த்தால், இலங்கையின் அரசியல் நிலைமைகள் எந்தளவு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் உடையது என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் போகும்.

இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் விடயங்களை சர்வதேச உறவுகளின் பின்புலத்தில் விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரத்தம் சிந்தலின்றி, அதிகார சக்திகள் எவ்வாறு தங்களின் நலன்களை வெற்றிகொள்ள முடியும் என்பதற்கான ஒரு சிறந்த படிப்பினையாக இலங்கை விளங்குகின்றது.

இது பற்றி பார்பதற்கு முன்னர், புவிசார் அரசியல் என்றால் என்ன என்பதை பற்றியும் சிறு குறிப்பொன்றை பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகின்றேன்.

அரசியலை வெறும் இனமான உணர்வாகவும், கட்சியரசியலாகவும் சுருக்கிப் பார்ப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் ஆர்வலர்களுக்கு, “புவிசார் அரசியல்” என்னும் சொற்பதங்கள் மிகவும் அந்நியமான ஒன்றாகவே இருக்கும்.

புவிசார் அரசியல் என்று தமிழில் குறிப்பிடும் சொற்கள் ஆங்கிலத்தில் ஒரு சொல் கொண்டே நோக்கப்படும்- அதாவது ஜியோபொலிட்டிக்ஸ் (Geopolitics).

நாடுகளின் அமைவிடங்களின் முக்கியத்துவம், எவ்வாறு சர்வதேச உறவுகளில் முரண்பாட்டையும், பதட்டங்களையும், மோதல்களையும் தோற்றுவிக்கின்றது என்பதையே பொதுவாக புவிசார் அரசியல் (Geopolitics) என்று அழைக்கப்படுகின்றது.

இந்த வகையில்தான் இலங்கையின் அமைவிடம், தெற்காசியாவின் அதிகாரமான (Regional Power) இந்தியாவின் உடனடி அயல்நாடாக இலங்கை இருப்பது, ஆசியாவின் அதிகாரமாக சீனா எழுச்சியடைந்து வருவது, அந்த அடிப்படையில் சீனா இலங்கையிலும் வலுவாக காலூன்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமை, இப்படியான பல காரணங்களின் விளைவாகவே இலங்கையின் உள்ளக அரசியலானது, அதிகார சக்திகளின் கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது.

இலங்கை காலனித்துவத்திலிருந்து விடுபட்ட பின்னர் நிகழ்ந்த முதலாவது வெளியாரின் நேரடி தலையீடாக, இந்தியாவின் தலையீடு அமைகிறது.

இந்தத் தலையீடு என்பது அன்றைய உலக ஒழுங்கின் கீழ் நிகழ்ந்துகொண்டிருந்த புவிசார் அரசியல் முரண்பாடுகளின் விளைவாகவே நிகழ்ந்தது.

அன்று, கொள்கை ரீதியாக சோவியத் முகாமுடன் இணைந்திருந்த இந்தியா, அதனுடைய பிராந்திய அதிகாரத் தகுதிநிலையை, அப்போதைய சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் உதாசீனம் செய்ததன் விளைவாக, இலங்கைக்கு ஒரு பாடத்தை புகட்ட நினைத்தது.

indiragandhi-1அற்றிருந்த இந்திய பிரதமர் இந்திராகாந்தி உலகளவில் மிகவும் செல்வாக்கான தலைவராகவும், அதே வேளை துணிச்சலான தலைவராகவும் இருந்தார்.

ஆறு கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் இந்தியா, இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் பாராமுகமாக இருக்க முடியாது என்னும் ஒரு வாதத்தை கையிலெடுத்து, ஜே.ஆரின் குரல்வளையை நசிக்க முற்பட்டார் இந்திரா.

இதன் விளைவாக அன்றிருந்த மிதவாத அணியான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஆயுத விடுதலை அமைப்புக்கள் அனைத்தையும் இந்தியா தத்தெடுத்துக் கொண்டது.

அவ்வாறு அன்று தத்தெடுக்கப்பட்டவர்களில் எஞ்சியிருப்பவர்கள்தான் இன்று ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றனர்.

14437133941அன்றிருந்த புவிசார் அரசியல் போட்டியில், இந்தியா அமெரிக்காவிற்கு எதிர்நிலையில் இருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் அன்றைய இலங்கையின் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அமெரிக்க சார்பு, இந்திராகாந்தியை சினம்கொள்ளச் செய்தது.

இதன் விளைவாக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த விடயங்களும் தமிழ் அரசியல் ஆர்வலர்களுக்கு தெரிந்ததே!

இது தொடர்பில் எனது முன்னைய பத்திகள் பலவற்றில் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். அவற்றை மீண்டும் இங்கு குறிப்பிட வேண்டிய தேவையில்லை என்றே எண்ணுகிறேன்.

அன்றிருந்த புவிசார் அரசியல் முரண்பாடுகளில் இலங்கை எவ்வாறு சிக்கிக் கொண்டது என்பதையும் அதன் விளைவாக பிராந்திய சக்தியான இந்தியாவை, இலங்கை பகைத்துக் கொண்டது என்பதையும் சுட்டிக் காட்டும் நோக்கிலேயே சில விடயங்களை பதிவுசெய்திருக்கின்றேன்.

இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் புவிசார் அரசியல் முரண்பாடுகளின் விளைவாக நிகழ்ந்த முதலாவது வெளியாரின் தலையீடாகவே மேற்படி இந்திய தலையீடு நிகழ்ந்தது.

2009இல் மூன்று தசாப்தங்களாக தெற்காசிய இராணுவ வலுச் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியளவிற்கு, பலமான நிலையில் இருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை புதியதொரு புவிசார் அரசியல் போட்டிக்கான களமாக மாறியது.

Mahinda-Gota“விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியென்பது சிலர் கூறுவது போன்று வெறுமனே மகிந்தவின் வெற்றியோ அல்லது கோத்தபாயவின் வெற்றியோ அல்ல, மாறாக அது பலம்பொருந்திய நாடுகளின் ஆதரவில் இலங்கை இராணுவம் பெற்றுக்கொண்ட வெற்றி.”

2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது, தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பெருமளவிற்கு இந்தியாவிற்கு எதிரான பார்வையே மேலோங்கியிருந்தது.

புலம்பெயர் தமிழ் அரசியல் அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்தவர்களின் நலன்கள் மேற்குலகுடன் பின்னிப்பிணைந்திருந்ததால், அவர்கள் இந்தியாவை விமர்சிப்பதன் ஊடாக தங்களின் தமிழ்த் தேசிய தகுதிநிலையை நிரூபிக்க முற்பட்டனர்.

ஆனால் இதுவரை வெளிவந்த எந்தவொரு அங்கீகாரமுள்ள ஆவணங்களிலும் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் இறுதி யுத்தத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினால் (Permanent People’s Tribunal) 2010இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற தமிழ் மக்களின் கொலைகளுக்கு, அமெரிக்காவும் பிரித்தானியாவும் பொறுப்புக்கூற வேண்டுமென்று அழுத்திக் கூறப்பட்டிருக்கிறது.

அமெரிக்க மற்றும் பிரித்தானிய அழுத்தங்களின் காரணமாகவே 27 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜரோப்பிய ஒன்றியம் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு சர்வதேச பயங்கரவாத இயக்கமாக தடை செய்தது.

மேற்படி ஜரோப்பிய ஒன்றியத்தின் தடையானது மகிந்த ராஜபக்சவின் யுத்தத்திற்கு உத்வேகமளித்தது. சிறிலங்கா இராணுவம், வன்னி நிலப்பரப்பின் மீது, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை கூட பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்கியது.

எனவே இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற அழிவுகளில் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் பங்குண்டு, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியா பற்றி பேசுவதில் அலாதிப்பிரியம் காண்பிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் என்போர், இந்த விடயங்களை பற்றி வாய்திறப்பதில்லை.

நான் இந்த விடயங்களை இந்த இடத்தில் குறிப்பிடுவதுகூட, அமெரிக்க எதிர் மனோபாவத்தின் விளைவாக அல்ல.

ஏனெனில் தமிழர்கள் அமெரிக்காவை எதிர்த்து நிற்பதாலும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. மாறாக, விடயங்களை விளங்கிக் கொள்வதற்கான ஒரு உசாத்துணையாகவே இவ்வாறான தகவல்களை பதிவு செய்திருக்கிறேன்.

ஒரு கேள்வி எழலாம், அவ்வாறாயின் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு இல்லையா? – இருந்தது, அது எப்டியானது என்றால், விடுதலைப் புலிகளை காப்பாற்ற இந்தியா விரும்பியிருக்கவில்லை ஏனெனில், இந்தியாவும் விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு தொடர்ந்தும் இருப்பதை விரும்பவில்லை.

இது தொடர்பில் பேசுவோர் அன்றைய சூழலில் காங்கிரசுக்கு பதிலாக பி.ஜே.பி அரசாங்கம் இருந்திருந்தால் அவர்கள், விடுதலைப் புலிகள் தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டை கடைப்பிடித்திருப்பார்கள் என்று சொல்வதுண்டு.

என்னைப் பொறுத்தவரையில் அப்படி நான் கருதவில்லை. பி.ஜே.பி இருந்திருந்தாலும் நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. ஏனெனில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் அனுமதிப்பதில்லை என்பது ஒரு உலகளாவிய முடிவாக மாறியிருந்தது.

ms-armitage-1ஜனாதிபதியுடன்  ரிச்சர்ட் ஆமிரேட்ஜ்
2010இல் நோர்வேயின் சமாதான பங்களிப்பு தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆமிரேட்ஜ், விடுதலைப் புலிகள் அமைப்பானது, உலக பயங்கரவாதத்தின் வகைமாதிரியாக இருந்தது, அமெரிக்காவை பொறுத்தவரையில் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்று குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன்கெரி, யுத்தம் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் எங்களுக்கு முன்னைய அரசாங்கத்துடன் உடன்பாடின்மைகள் இருப்பினும் கூட, கொலைகார பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளும் அவர்களால் விதைக்கப்பட்ட அச்சமும் பூண்டோடு அழிக்கப்பட வேண்டுமென்பதில் தாங்கள் (அமெரிக்கா) தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாக குறிப்பிட்டிருந்தார்”.

இவை அனைத்தையும் திரட்டி சிந்தித்தால், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழிப்பதில், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகின் பங்களிப்பு என்ன என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமங்கள் இருக்காது.

மேற்குலகின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை இலங்கைத் தீவிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதியதொரு பிரச்சினை உருவெடுத்தது. இந்த பிரச்சினையின் விளைவுதான் தற்போது நாங்கள் எதிர்கொண்டிருக்கும் புதிய அரசியல் சூழ்நிலை.

மேற்குலகின் பலமான ஆதரவுடன் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டபோதும், அந்த வெற்றியின் பின்னர் மேற்குலகுடன் ஒத்தோடும் ஒருவராக மகிந்த செயற்பட்டிருக்கவில்லை.

யுத்தத்தின் போது மகிந்த அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சில வாக்குறுதிகளை வழங்கியதாகவும் ஆனால் அதனை வெற்றியின் பின்னர் காற்றில் பறக்கவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதன் உண்மைத் தன்மை பற்றி நானறியேன்.

indexஆனால் யுத்த வெற்றியின் பின்னர், இலங்கைத் தீவை சீனாவின் கொல்லைப்புறமாக மாற்றும் வகையிலேயே மகிந்த ராஜபக்சவினது செயற்பாடுகள் அமைந்திருந்தன. இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு சவாலாக மாறியது.

இந்த இடத்தில் நாம் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவை நல்கிய அமெரிக்காவே பின்னர், யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தது. இலங்கையின் மீதான பொறுப்புக்கூறல் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்ததுடன், அதற்கான உலகளாவிய அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியது.

இந்த அடிப்படையில்தான் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.

யுத்தத்தை தடுத்து நிறுத்தியும் தமிழ் மக்களின் உயிர்களை பாதுகாத்திருக்க முடியும், ஆனால் அதனை அமெரிக்கா செய்யவில்லை.

மாறாக, யுத்தத்தின் விளைவுகளை முன்வைத்து மகிந்த அரசாங்கத்தின் மீது மென் அழுத்தங்களை பிரயோகித்தது.

மகிந்தவின் மீதான மென் அழுத்தங்கள், அவர் மேலும் சீனாவை நோக்கிப் பயணிப்பதற்கே வழிவகுத்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் இவ்வாண்டு மகிந்த ராஜபக்ச, எவரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னால் அமெரிக்காவின் திரைமறைவு செயற்பாடுகள் இருந்திருக்கிறது என்பதை ஊகிப்பதும் கடினமான ஒன்றல்ல.

சீனாவின் முழுமையான செல்வாக்கிற்குள் இலங்கை விழுமாக இருந்தால், ஆசியா நோக்கிய அமெரிக்க முன்னெடுப்புக்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்த விடயத்தை கருத்தில் கொண்டுதான் அமெரிக்கா அதனது மென் அதிகாரத்தை பிரயோகித்தது, இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை மேற்கு நோக்கி வளைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

அமெரிக்கத் தலையீட்டின் விளைவாகவே இன்று ஒரு தேசிய அரசாங்கம் இலங்கையில் உருவாக்கியிருக்கிறது. 32 வருடங்களுக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்களில் இந்த புதிய நிலைமைகள் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை தற்போதைக்கு கூற முடியாது. ஆனால் சீனாவின் செல்வாக்கு வளையத்திற்குள் இலங்கை முற்றிலுமாக விழுவதை தடுக்கும் வகையிலேயே ஒவ்வொரு நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இனியும் மேற்கொள்ளப்படும்.

சீனா ஆசியாவில் ஒரு மேலாதிக்க அதிகாரமாக (Regional hegemony) எழுச்சியடைந்து வருவதை தடுத்து நிறுத்துவதன் ஊடாகவே, அமெரிக்காவின் செல்வாக்கை இப்பிராந்தியத்தில் பேணிப் பாதுகாக்க முடியும்.

சீனாவின் எழுச்சிக்குள் தெற்காசிய நாடுகள் விழுவதை தடுத்து நிறுத்த வேண்டியது இந்தியாவினதும் தேவை. இந்த பொது ஆட்டத்திற்கான ஆடுகளத்தில் இலங்கையும் ஒரு அங்கமாகியிருக்கிறது.

சீனாவை கட்டுப்படுத்துதல் என்னும் நோக்கில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் இலக்கு ஒரு நேர் கோட்டிலேயே சந்திக்கின்றது.

இந்த அடிப்படையில்தான், ஆட்சி மாற்றம் ஒன்றின் ஊடாக, இலங்கையை சீனா நோக்கி நகர்த்த முற்பட்ட தெற்கின் சக்திகள் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர்.

இதிலுள்ள அரசியல் படிப்பினை முக்கியமானது. பல்கட்சி ஜனநாயக முறைமையை மிகவும் கச்சிதமாக கையாளுவதன் ஊடாகவும், அமெரிக்க நலன்களுக்கு எதிரான உள்ளுர் சக்திகளை முடக்க முடியும் என்னும் படிப்பினை, இலங்கை அனுபவத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றிருக்கிறது.

ஆனால் நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் புவிசார் அரசியல் முரண்பாடுகளினால் வெளியார் தலையீடு செய்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழர் பிரச்சினையை மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும்.

இந்தியாவும் சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிராக எழுச்சியுற்று வந்த தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை தனது புவிசார் அரசியல் முரண்பாடுகளுடன் பிணைத்து, அன்றைய இலங்கையை கையாண்டது.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் விளைவுகளை வைத்து அமெரிக்கா இன்றைய இலங்கையை கையாளுகின்றது.

இவ்வாறு பலம்பொருந்திய சக்திகள் தங்களின் புவிசார் அரசியல் முரண்பாடுகளுக்காக இலங்கையை கையாளும் சூழலில்தான், தமிழர் தரப்பு தங்களின் (தமிழரின்) நலனை முன்னிறுத்தி இன்றைய சூழலை கையாள வேண்டியிருக்கிறது.

– ‘யதீந்திரா’

Share.
Leave A Reply