உலகப் புகழ் பெற்ற ஈரானிய சினிமா இயக்குநரான மஜித் மஜிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், வெளிவந்துள்ளத் திரைப்படம் ‘முஹம்மதாகிய இறைத்தூதர்.

’(Muhammad: Messenger of God) இறைவனின் நேரடித் தூதராகப் போற்றப்படும் முஹம்மது நபியின் (ஸல்) வாழ்கை வரலாற்றை இந்த படம் சித்தரிக்கிறது.

இஸ்லாமிய மதத்தின் எந்தக் கோட்பாட்டையும் மீறாமல் திரையில் கொண்டு வரவேண்டுமென்று இயக்குனர் மஜிதி முழுகவனம் செலுத்தி வந்தார்.

முகமது நபியின் முகத்தைக் காணொளிக் காட்சியாகவோ, வரைபொருளாகவோ சித்திரிக்கக் கூடாதென்பது, இஸ்லாமியக் கோட்பாடுகளுள் முக்கியமானது.

இதனால் முகமது நபியின் பார்வையிலேயே கதை நகருவதாக படத்தில் காட்டப்பட்டது.

POV எனப்படும் பாயிண்ட் ஆஃப் வ்யூ கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது இந்த படத்தின் தொழில்நுட்பம். முழுக்க முழுக்க முகமது நபியின் வரலாற்றைச் சொல்லும் முயற்சியாகவே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

எனினும் இந்த திரைப்படத்தை எதிர்த்து பல இஸ்லாமிய அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு அமைப்பான ரஸா அகாடமி படத்தை இயக்கிய மஜித் மஜிதி இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளனர்.

mess2மஜித் மஜிதி

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சையீத் நூரி கூறுகையில் ” இந்த திரைப்படத்தின் பெயரை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம்.

இந்த படத்தை பார்த்து விட்டு பிடிக்காதவர்கள் எதிர்மறை கருத்துக்கள் தெரிவித்தால் அது முகமது நபியின் புகழுக்குக் களங்கம் கற்பிப்பது போல அமைந்து விடும். புனிதமானவர்களின் பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள் அதற்காக சம்பளம் வாங்கியுள்ளனர்.

மேலும், அவர்கள் நிஜ வாழ்வில் எத்தகைய நெறிகளைக் கடைபிடிக்கிறார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளாமல் முகமது நபி போன்ற சான்றோர்களின் பாத்திரத்தில் நடிக்க வைத்ததை இஸ்லாமியர்களால் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.

இதனால் இந்த படத்தை எடுத்த மஜிதிக்கும், ஏ.ஆர். ர,ஹ்மான் ஆகியோருக்கு ஃபத்வா கொடுக்கிறோம்.

அதன்படி அவர்கள் இருவரும் புனிதப்படுத்தும் ‘கலீமா’ உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். தங்கள் திருமணத்தை மீண்டும் நடத்தி முறைப்படிப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் அனைவரும் தவறிழைத்திருக்கிறார்கள்  ஆகவே நிச்சயம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இந்த தவறை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் எந்தச் சலுகைகளும் கொடுக்க முடியாது. எந்த சமயத்தைச் சார்ந்தவர் இதனை செய்திருந்தாலும் எங்கள் நடவடிக்கை ஒன்றுதான்” என்றார்.

mess(1)மார்ஸியே வஃபாமெஹர்

‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’, ‘கலர் ஆஃப் பாரடைஸ்’ என உலகத் தரத்திலான அலாதியான திரைப்படங்களை இயக்கியதற்காக கொண்டாடுப்படுபவர் இயக்குனர் மஜித் மஜிதி என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை வென்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, சினிமா கலைஞர்களின் மீது இஸ்லாமிய மதம் பல்வேறு கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றது’ என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டத் திரைப்படமான ‘மை டெஹ்ரான் ஃபார் சேல்’ என்ற படத்தில் நடித்ததற்காக ஈரானிய நடிகையான மார்ஸியே வஃபாமெஹருக்கு 90 கசையடிகள் தண்டனையாகக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply