ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 30ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் ஜெனிவா வருகைதந்துள்ளது.
இக்குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் உயர் மட்ட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
இதன்போது இலங்கை இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளனர்.
இது தொடர்பில் ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,
தமிழர் நீதிக்கான கூட்டமைப்பின் குரல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமைந்துள்ள ஜெனிவாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எங்கும் ஓங்கி ஒலிக்கவுள்ளது.
ஜெனிவா அமர்வில் வெளியிடப்படவுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்படவுள்ளது.
ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடரில் உத்தியோகபுர்வமாக வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், ஐ.நா. விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தவேண்டும். அவ்வாறு அமுல் படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சமுகத்தின் ஈடுபாட்டுடன் நடைப்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டிகை கைவிடப்போவதில்லை என்றார்.
ஐ.நா. விசாரணை அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை உள்ளக விசாரணைப் பொறிமுறையுடாக நிறைவேற்ற வேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டில அரசாங்கத்தின் சார்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் உள்ளதோடு அதனை நியாப்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து தமது செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவுள்னது.
இதேவேளை ஜெனீவா வருகை தந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கடிதமொன்றையும் பெற்றுக்கொண்டு வந்ததாக தெரிய வருகின்றது.
இக்கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் எனபதை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜெனீவாவில் உள்ள மனிதவுரிமை பேரவை வளாகத்தில் வைத்து அளித்த செவ்வி…