கடந்தகாலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குத்துக்கரணங்களை வைத்து எம்மை எடைபோடாதீர்கள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என்று அனைத்துலகஅ சமூகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரை முழுமையாக தரப்படுகிறது.
“ஐ.நா மனித உரிமை பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடரில் வெளியிடப்படவிருந்த சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கையை பிற்போட்டமைக்காக ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஐ.நா மனித உரிமை பேரவையால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட இந்த காலஅவகாசமானது மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக காணப்பட்டது.
மனித உரிமை பேரவை, மனித உரிமை ஆணையாளர் பணியகம், அனைத்துலக சமூகத்துடன் எமது ஈடுபாட்டை புதுப்பித்துக் கொள்ளவும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை அடைவதற்கும் ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் இது தேவைப்படும்.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றதன் காரணமாக கருத்தொருமைவாத தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் முடிந்தது.
சம்பிரதாயபூர்வமான எதிரிகளாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் கொள்கை, மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 17 ஆம் நாள் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக நவீன தலைவர்கள் நாடாளுமன்றத்தில் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
உலக பண்புகளான சமத்துவம், நீதி, சுதந்திரம், என்பனவும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் அரசியல் தீர்வும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எட்டாவது நாடாளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு முன் ஆரம்பித்து வைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேன தென்னாபிரிக்காவின் மோதலின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்ததையும் நினைவுகூர்ந்தார்.
அதேபோன்று போருக்குப் பின்னரான சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைப்பதும் இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வருவதும் அவசியமானது. குறிப்பாக நாட்டின் முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளவும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் இது உதவும்.
புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக மூன்றாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நியமிக்கப்பட்டதும். 44 ஆவது பிரதம நீதியரசர் நியமனமும் சிறிலங்காவில் எந்தவொருவரினதும் உரிமையை இனம், மற்றும் மதத்தினால் தடுக்க முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததும் உரிய கொள்கைகளைக் கொண்டு செயற்படாதன் காரணமாக நல்லிணக்கம் எம்மை விட்டு நழுவிச்சென்றது.
ஆனால் எமது புதிய தேசிய அரசாங்கம் நல்லிணக்கத்தை புதிய அணுகுமுறையிலும் முக்கியத்துவம் மிக்க முன்னுரிமையின் அடிப்படையிலும் முன்னெடுக்கிறது.
ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்துலகத்திற்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன என்பதற்காகவன்றி நாட்டின் மக்களுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் சிறிலங்கா அரசாங்கம் எப்போதும் பொறுப்புக்கூறுவதாக இருக்கும்.
நல்லிணக்கம் என்பது நீண்டகாலம் எடுக்கக்கூடிய ஒரு செயற்பாடு என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். இந்த விடயத்தில் பலர் பொறுமை இழந்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.
அவர்களின் பொறுமையின்மையை நாம் புரிந்து கொள்கின்றோம். அவர்கள் அவ்வாறு கருதவதற்கு உரிமையும் உள்ளது. ஆனால் இந்த செயற்பாடு மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.
எமது நாடு சுதந்திரத்தின் பின்னர் பல தடவைகள் விழுந்துள்ளது . மீண்டுமொருமுறை தோல்வியடைவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
உண்மையைக் கண்டறிதல் நீதி, அர்த்தமுள்ள மறுசீரமைப்பு, அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் கவலைகளை ஆராய்தல் என்பன நல்லிணக்க செயற்பாட்டில் உள்ளடங்குகின்றன என்பதை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கிறது.
அதிபருக்கும் பிரதமருக்கும் மக்களினால் வழங்கப்பட்ட ஆணைக்கமைய அரசாங்கம் ஏற்கனவே அரசியல் தீர்வை நோக்கிய சில பேச்சுகளை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சட்டத்தை ஆட்சிப்படுத்துவதிலும் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்துவதிலும் பொறுப்புக்கூறுவது என்பது மிகவும் அவசியமானதாகும்.
அத்துடன் நீதி, மற்றும் நிர்வாகத்துறை மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சிப்படுத்தலில் இவை மிகவும் முக்கியமானவையாகும்.
அதுமட்டுமன்றி மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், மற்றும் ஊழல்வாதிகள் சட்டத்தில் இருந்து தப்பிப்பதை தடுக்கவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
இது தொடர்பான பாடங்களை நாங்கள் ஏனைய நாடுகளிலிருந்து மட்டுமன்றி எமது நாட்டின் வரலாற்றில் இருந்தும் கற்றுக்கொள்கின்றோம். அந்த வகையில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள சுயாதீன, நம்பகரமான உள்ளக விசாரணை பொறிமுறையில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
உண்மையைக் கண்டறிதல்:
1.தென்னாபிரிக்காவின் முக்கிய அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பிரகாரம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்படும்.
இதில் மதத்தலைவர்கள், மற்றும் ஆணையாளர்களைக் கொண்ட ஒரு பேரவை உருவாக்கப்படும். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் குற்றமிழைத்தவர்கள் தெரியாத நிலைமை காணப்படின் இந்த ஆணைக்குழு ஊடாக உண்மை கண்டறியப்படும்.
என்ன நடந்தது என்பது தொடர்பாகவும், எவ்வாறு அதனை சரிப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு ஆராயும்.
2. காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக ஒரு பணியகம் அமைக்கப்படும். அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணர்களின் ஆலோசனையுடன் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கமை இந்த அலுவலகம் அமைக்கப்படும்.
நீதிக்கான உரிமை விடயத்தில் நீதித்துறை பொறிமுறையுடன் சிறப்பு ஆலோசகர் குழுவொன்று அமைக்கப்படும்.
இது பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பதை தடுப்பதற்காகவும் செயற்படும்.
இவ்வாறு அமைக்கப்படும் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் பரிந்துரைகளையும் உண்மையைக் கண்டறிதல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் கற்றறிந்த பாடங்களும், நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுல்படுத்துவதற்கு மறுசீரமைப்பு பணியகம் ஒன்று உருவாக்கப்படும்.
அதுமட்டுமன்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைகளைத் தூண்டும் பேச்சுக்களை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வைக் காண முடியும் என நம்புகின்றோம். இதற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை ஒன்று உருவாக்கப்படும்.
இந்த பொறிமுறை, மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் அனைத்து துறைசார் நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்கள்,ஆகியோரின் உதவியுடனும் மற்றும் அனைத்துலக சமூகத்தின் நிதி உதவி, பொருள் உதவி , தொழிலுட்ப உதவியுடனும் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உரிமையுடனும் உருவாக்கப்படும்.
அதுமட்டுமன்றி சிறிலங்காவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் உடலகம, மற்றும் பரணகம அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்படும்.
வர்த்தக செயற்பாடுகளிலிருந்து சிறிலங்கா இராணுவத்தின் ஈடுபாட்டை நிறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதுமட்டுமன்றி சிறிலங்காவுக்கு ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களை அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கிவிட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் ஒன்றை அனைத்துலக தரத்திற்கு அமைய கொண்டு வருவது தொடர்பிலும் ஆராயப்படும்.
சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் மீளாய்வு செய்யப்பட்டு இந்த வருடம் அமுல்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் செயற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பது சிறிலங்காவுக்கு அவசியமான ஒன்றாக காணப்பட்டது. இன்று நாட்டைக் கட்டியெழுப்பவும், சமாதானத்தை கட்டியெழுப்பவும் எமக்கு மிகவும் சிறந்த சுதந்திரம் கிடைத்துள்ளது.
எமது இராணுவத்தினர் கடந்த காலங்களில் ஒழுக்கமாகவும், தொழிற்சார் ரீதியாகவும் செயற்பட்டமை தொடர்பில் பாராட்டப்பட்டுள்ளனர்.
எனினும் ஒரு சில பதவிகளின் பொறுப்புக்களின் முறைமை காரணமாக இராணுவத்தினரின் நன்மதிப்பு பாதிக்கப்பட்டது. அதனால் அனைத்து தரப்பினரிலும் பொறுப்புக்கூறல் தொடர்பான அவநம்பிக்கை காணப்பட்டது.
எவ்வாறெனினும் பொறுப்புக்கூறலில் சந்தேகம் கொண்டுள்ள அனைவருக்கும் ஒரு விடயத்தை கூறுகின்றேன். எக்காரணம் கொண்டும் யாரும் பயப்பட வேண்டாம் என நான் கூற விரும்புகின்றேன்.
நாம் மேற்கொள்ளும் இந்த செயற்பாடு பக்கச்சார்பற்ற ரீதியில் இருக்கும் என்பதில் உங்கள் நம்பிக்கையை நீடித்துக் கொள்ளுங்கள், மேலும் எங்களுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது இராணுவத்தின் நம்பகத் தன்மையை மீண்டும் நாங்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்போம். எமது இன்றைய அரசாங்கம் கடந்த கால தவறுகளை அங்கீகரிக்கிறது.
எமது நிறுவனங்களின் வீழ்ச்சியையும் நாம் அனைவரும் அறிந்திருந்தோம். எமது அரசாங்கம் அனைத்து குடிமக்களின் நலன் தொடர்பிலும் அர்ப்பணிப்புடன் இருக்கும். கலந்துரையாடல்களுக்கு திறந்த மனதுடனேயே இருக்கின்றோம்.
சிறிலங்காவில் மீண்டும் நீதி நிலைநாட்டப்படாது என சிலர் கூறுகின்றனர். சிறிலங்காவில் மீண்டும் சமத்துவம் அங்கீகரிக்கப்படாது என சிலர் கூறுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு விடயத்தை கூறுகின்றோம்.
அதாவது ஜனவரி 8 ஆம்நாள் மக்கள் என்ன சாதனையை நிலைநாட்டினர் என பாருங்கள். உலகம் சிறிலங்காவின் எதிர்பார்ப்பை ஒரு கட்டத்தில் இழந்தது.
எனினும் சில நாடுகள் எம்மீது நம்பிக்கை வைத்தன. அந்த செயற்பாடு மீண்டும் ஆகஸ்ட் 17 ஆம் நாள் உறுதிப்படுத்தப்பட்டது.இரண்டு தரப்புக்களிலும் இனவாதிகள் நிராகரிக்கப்பட்டனர்.
கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் குத்துக்கரணங்களையும், வைத்துக்கொண்டு எம்மை மதிப்பிட வேண்டாம். நாங்கள் புதிய உருவாக்கத்தை மேற்கொள்ளவும், எங்களது எதிர்காலத்தை நம்பிக்கைகளினாலும், அபிலாஷைகளினாலும், உருவாக்கவும் எமக்கு இடமளியுங்கள்.
நாம் கனவுகளைக் கண்டு பயப்படவில்லை. பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை நடத்துவதற்கு நாம் பயப்படுவதற்கு வழிசமைக்க வேண்டாம். நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.
சிறிலங்கா குடிமக்களிடம் இருந்தும் அனைத்துலக சமூகத்திடமிருந்தும், பொறுமையையும், புரிந்துணர்வையும் எதிர்பார்க்கின்றோம்.
சிலருக்குத் தேவையான வகையில் இந்தப் பயணம் மிகவும் வேகமாக இல்லாமல் இருக்கலாம். சில விடயங்களைப் பொறுத்தவரை நாங்கள் தூர பயணித்திருக்கின்றோம்.
எனினும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார்கள்.
உங்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். எம்மீது நம்பிக்கை வைத்து எம்முடன் இணைந்து செயற்படுங்கள், புதிய சிறிலங்காவைக் கட்டியெழுப்புவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கையை மேற்கொள்ள எமக்கு உதவுங்கள்.” என்று குறிப்பிட்டார்.