யாழ்ப்பாணம், நல்லூர் மாநகர சபைக்கு நல்லூர் திருவிழாவின் மூலம் 1 கோடியே 49 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் திருவிழாக்காலச் செயற்பாடுகள் இம்முறை மிக சிறப்பாகவும் ஒழுங்கு முறையாகவும் நடைபெற்றிருக்கின்றது.
கடந்த வருடத்தை காட்டிலும் இம்முறை 13லட்சம் அதிகமாகி 1கோடியே 49லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கின்றது.
இத்திருவிழாவில் இம்முறை 348 கடைகள் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் 237 கடைகளே வழங்கப்பட்டிருந்தன. கச்சான் கடைகளுக்கு ஆகக்குறைந்த தொகை 10 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை 45 ஆயிரம் ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இனிப்புக் கடைக்கு ஆகக்குறைந்த தொகை 28 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இதர கடைகளுக்கு ஆகக் குறைந்த தொகையாக 12 ஆயிரத்து 500 ரூபாவும் ஆகக் கூடிய தொகையாக 75 ஆயிரம் ரூபாவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தும் முகமாக 13 கடைகள் இலவசமாக வழங்கப்பட்டிருந்தன.
அவற்றில் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ்ப்பட்டவர்கள் மற்றும் அரச திணைக்களங்கள், கூட்டுஸ்தாபனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இம்முறை வியாபாரிகளின் முழு ஒத்துழைப்புடனும் மிகவும் சிறப்பான முறையில் நல்லூர் உற்சவகால செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்காகவா வாள் ஏந்தினான்: இந்தச் சங்கிலி மன்னன்?
15-09-2015
நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையில் கொக்கோ-கோலா சோடாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் விசனமடையச் செய்துள்ளது.
தமிழ் மக்களின் வீரத்தை வெளிப்படுத்திய சங்கிலி மன்னன் கையில் ஏந்தியிருக்கின்ற வாளில் கொக்கோ-கோலாவின் இந்த விளம்பரச் சின்னம் மாட்டப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கு வருகின்ற மக்களுக்கு தமது குளிர்பானம் தொடர்பில் விளம்பரம் செய்வதற்காக கொக்கோ-கோலா நிறுவனத்தின் பணியாளர்கள் இந்த விளம்பர சின்னத்தை மாட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
தமிழ் மன்னனைக் கொச்சைப்படுத்திய இந்தக் கம்பனியின் செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள மக்கள் இந்த விளம்பர சின்னத்தை அகற்றுவதற்கு யாழ்.மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.