பல மாதங்களாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் வந்துவிட்டது.
அதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கையானது எவரும் எதிர்பார்க்காத வகையில் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த அறிக்கையில் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் எனவும் இல்லை உள்ளக விசாரணை பொறிமுறையே பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்பட்டு வந்தது.
ஆனால் அந்த அனைத்து விடயங்களையும் புறந்தள்ளிவிட்டு சிறப்பு கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
அதாவது சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் ஆகியோர் இடம்பெறும் வகையில் இந்த விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தற்போது முக்கிய பரிந்துரைகள் சிலவற்றை பார்ப்போம்.
இலங்கையானது பொறுப்புக்கூறலை அடையவேண்டும். அது உள்நாட்டு பொறிமுறை விசாரணையை விட அப்பால் சென்றதாக இருக்கவேண்டும்.
விசாரணைப் பொறிமுறைக்காக கால அட்டவணையுடன் உயர்மட்ட நிறைவேற்றுக்குழுவொன்றை இலங்கை நியமிக்கவேண்டும்.
இலங்கையின் நிலைமையைப் பார்வையிடுவதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டும்.
உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இதய சுத்தியுடனான ஆலோசனைகளைப் பெறவேண்டும்.
உண்மை, நீதி, மீள் உருவாக்கம், இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசேட ஆணையாளர்களை இலங்கைக்கு வரவழைக்கவேண்டும்.
இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களினதும் தனியாரினதும் காணிகளை மீள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதுடன் சிவில் செயற்பாடுகளிலிருந்து இராணுவத்தை அகற்றவும், நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மத்திய தரவு நிலையம் ஒன்றை நிறுவவேண்டும். உறவினர்கள் தமது தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள இதனை முன்னெடுக்கவேண்டும்.
இவ்வாறு முக்கியமான பல்வேறு பரிந்துரைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே இலங்கை குறித்த விசாரணை அறிக்கை எவ்வாறு அமையும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றைய தினம் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது.
அத்துடன் இந்த அறிக்கை கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரகசியமான முறையில் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட பதிலின் பின்னரேயே கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்தவகையில் இந்த அறிக்கை உருவான விதம் குறித்து சற்று ஆராய்வது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததும் 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தந்தார்.
அப்போது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணை நடத்தப்படும் என்று இணக்கப்பாடு எட்டப்பட்டு கூட்டறிக்கையும் விடுக்கப்பட்டது.
அது மட்டுமன்றி கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சர்வதேசம் கால அவகாசமும் உதவியும் வழங்கவேண்டும் என கோரி பிரேரணை ஒன்றை கொண்டு வந்தது.
அந்த பிரேரணை வெற்றியும் பெற்றது. அதில் உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்படும் என்ற விதத்தில் முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்விதமான உள்ளக பொறிமுறையும் முன்னெடுக்கப்படாத நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளினால் இலங்கைக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
அந்த பிரேரணையில் இலங்கை நம்பகரமான சுயாதீன உள்ளக விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அந்த பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வந்தன.
அதிலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகரமான உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டும் என கோரப்பட்டிருந்தது. அந்த பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.
இக்காலப்பகுதியில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடாக இருந்த இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்து வந்திருந்தது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் இலங்கையானது உள்ளக பொறிமுறை விசாரணை கட்டமைப்பை முன்னெடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றுமொரு பிரேரணையை கொண்டு வந்தது. அந்த பிரேரணையில் இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுத்து பொறுப்புக்கூறலை நிலைநாட்டாததன் காரணமாக போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
பிரேரணைக்கு அமைவாக வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் முன்னெடுத்தது.
அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை செயற்பாடுகள் செயற்பாட்டு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன.
இதற்காக 12 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபுணர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிபுணர் குழுவில், சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
விசாரணை நடத்தப்படும் காலப்பகுதியாக நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதி அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் அலுவலகத்தின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அப்போதைய அரசாங்கம் இந்த ஐ.நா. அலுவலக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என்றும் விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறியது.
இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் ஜெனிவாவில் இருந்தவாறு இலங்கை குறித்த விசாரணையை முன்னெடுத்தது. கடந்த ஜனவரி மாதமாகும்போது ஜெனிவா மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும் இலங்கையின் கடந்த ஆறுமாத கால நல்லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்போடப்பட்டது.
ஆனால் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் 30 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் மிக முக்கியமான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்படுமா அல்லது அந்த பரிந்துரைகள் நீர்த்துப்போகச்செய்யப்படுமா என்ற கேள்விகளே தற்போது பொதுவாக எழுப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளது. இந்த பிரேரணைக்கு மனித உரிமை பேரவையின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த பிரேரணையின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் வலுவிழக்கச் செய்யப்படுமா என்பது ஆராயப்படவேண்டிய விடயமாகும்.
காரணம் தமிழ் பேசும் மக்கள் வரவேற்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை அமையப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய விசாரணை பொறிமுறை அமைக்கப்படவேண்டும் என்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால் அரசாங்கமானது உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்படும் என்றும் ஆனால் அது சர்வதேச நீதிபதிகளை கொண்டு இருக்குமா? இல்லையா என்பது ஜனவரி மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என்றும் கூறுகின்றது.
அவ்வாறு பார்க்கும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் பரிந்துரை அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்படுகின்றது.
எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற மக்களுக்கு அநீதி ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.
குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழ்வாதார பிரச்சினை என்பதே பாரிய விவகாரமாக உள்ளது.
பல குடும்பங்கள் இன்னும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருகின்றன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலக அறிக்கையில் இழப்பீடு வழங்குதல் தொடர்பான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் நீதிவழங்கப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன. எனவே இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு புதிய அரசாங்கம் விரைவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.