மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை, கமல்ஹாசன் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையம் வந்துள்ளார். கமல்ஹாசனை வரவேற்க அவரது ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் கமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து சிவகார்த்தியன் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது, ஸ்ருதிஹாசனை தரக்குறைவாக பேசியதாக கூறி சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
இதில் ஓட்டம் பிடித்த சிவகார்த்திகேயனை, கமல் ரசிகர்கள் விரட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிவகார்த்திகேயனை பாதுகாப்புக்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கம், இது போன்ற செயல்களை கமல் ரசிகர்கள் தயவு செய்து செய்யாதீர்கள்.
அது நம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஏற்படும் அவமானமாகும். இந்த செயல்களை எங்கள் புதுமை நாயகன் கமல்ஹாசன் அமைதி நற்பணி இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.