ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, ‘சூடான உருளைக்கிழங்கு நடவடிக்கை’ (Operation Hot Potato) என்ற இரகசிய சங்கேதப் பெயரில், சிறிலங்கா அரசாங்கத்திடம், இரகசியமாக கையளிக்கப்பட்டது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள்-

சிறிலங்கா படைகளும், தமிழ் கெரில்லாக்களும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்து வந்தனர்.

ஜெனிவாவில் இருந்து மங்கள சமரவீரவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், அதிகாரபூர்வமாக விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கான பிரதி கையளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த அறிக்கையை அதிகாரபூர்வமாக பகிரங்கப்படுத்துவதற்கு முன்னதாக, இதன் உள்ளடக்கங்கள் பற்றிய இரகசியம் கடுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது உடனடிக் கவலையாக உள்ளது என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர், தமது சொந்த கலந்துரையாடல்களில் கூட, இந்த அறிக்கை பற்றிக் குறிப்பிடுவதில்லை என்று இருவரும் இணங்கினர்.

இதையடுத்து.

நீரெழுத்து கடதாசியில் (watermark paper) அச்சிடப்பட்ட, விசாரணை அறிக்கையின் முத்திரையிட்ட பிரதியை, ஜெனிவாவில் இருந்து கொழும்புக்கு பரிமாறும் நடவடிக்கைக்கு சூடான உருளைக்கிழங்கு நடவடிக்கை (Operation Hot Potato) என்று பெயரிடப்பட்டது.

மூல அறிக்கையின் இரண்டு பிரதிகள் மாத்திரம் தன்னிடம் உள்ளதாகவும் ஒன்று தன்னிடம் இருக்கும் என்றும், மற்றையதை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பதாகவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமை ஆணையைாளர் பணியகத்தின் உறுப்பினர் ஒருவர், இந்த அறிக்கையுடன் கொழும்பு புறப்பட்டார்.

அடுத்த நாள், சூடான உருளைக் கிழங்கு கொழும்பு வரவுள்ளதாக, செப்ரெம்பர் 10ஆம் நாள் வியாழக்கிழமை, மங்கள சமரவீர தகவல் ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.

செப்ரெம்பர் 11ஆம் நாள், வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில், டுபாயில் இருந்து வந்த, EK 650 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில், அந்த தூதுவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவசரம் காரணமாக, அவர் கொழும்புக்குப் பயணம் செய்து, 261 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் முத்திரையிடப்பட்ட பொதியை கையளிக்க நேரம் கொடுக்கப்படவில்லை.

மங்கள சமரவீர தனது பணியகத்தில் இருந்து அதிகாரி ஒருவரை, அறிக்கையைப் பெற்று வருவதற்காக அனுப்பியிருந்தார்.

அவர் அறிக்கையுடன் நேராக வெளிவிவகார அமைச்சுக்குச் செல்ல, மங்கள சமரவீரு அங்கு காத்துக் கொண்டிருந்தார்.

தமது அதிகாரி வந்தடைந்ததும், முத்திரையிடப்பட்ட அந்தப் பொதியை மங்கள சமரவீர உடைத்து திறந்தார். அறிக்கையின் மூன்றாவது பகுதியில் இருந்த, சிறிலங்கா தொடர்பான விசாரணையின் பிரதான கண்டறிவுகள் குறித்த பகுதியை வாசித்தார்.

அப்போது, வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா, வெளிவிவகார அமைச்சில் ஐ.நா விவகாரங்களுக்கான பணிப்பாளர் மகேஷினி கொலன்னே, ஜெனிவாவுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஆகியோரும் அங்கிருந்தனர்.

ரவிநாத் ஆரியசிங்க ஒரு நாள் முன்னதாகவே, கலந்துரையாடல்களுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பரிந்துரைகளைப் படித்துப் பார்த்து விட்டு., நாம் எதிர்பார்க்கப்பட்டது போல இது சூடாக இல்லை, இது சூடான உருளைக்கிழங்கு இல்லை. அறிக்கை பேரச்சம் ஊட்டுவதாகவோ, எந்தப் பெயர்களையும் உள்ளடக்கியதாகவோ இல்லை” என்று மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

இதையடுத்து. வெள்ளிக்கிழமை மதியம், சிறிலங்கா அதிபர் தலைமையில், உயர்மட்டக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.

அதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, நீதுி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அங்கு ஐ.நா விசாரணை அறிக்கையின் முக்கிய விடயங்கள் குறித்து மங்கள சமரவீர விளக்கமளித்தார்.

அன்றிரவே, மங்கள சமரவீர, விஜேதாச ராஜபக்ச ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவாவுக்குப் புறப்பட்டார்.

அங்கு அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அதற்கு முதல் நாளே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அமெரிக்காவில் இருந்து திரும்பியிருந்தார்.

ஜெனிவாவில் மங்கள் சமரவீர, அமெரிக்காவின் ஐ்.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி கெய்த் ஹாப்பரையும் சந்தித்தார்.

Share.
Leave A Reply