மதுரை: மதுரை தி.மு.க., பிரமுகர், ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, ‘அட்டாக்’ பாண்டி, நேற்று முன்தினம் இரவு, மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை, சத்யசாய் நகரில் வசித்தவர், ‘பொட்டு’ சுரேஷ், 46; தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின், ‘நிழல்’ போல செயல்பட்டவர். அழகிரிக்கு பாதுகாப்பு அளிக்கும் வட்டத்தில், பிரபல ரவுடி யான கீரைத்துரையைச் சேர்ந்த, ‘அட்டாக்’ பாண்டி சேர்ந்தார்.
பனிப்போர் : நாளடைவில், தி.மு.க., ஆட்சியில், அழகிரி ஆசியுடன், வேளாண் விற்பனை குழு தலைவர் பதவியை பெற்றார்.
அதை பயன்படுத்தி, கட்டப் பஞ்சாயத்து செய்வதில் பாண்டி ஆர்வம் காட்ட, ‘அழகிரியின் பெயர் கெட்டுவிடும்’ என, சுரேஷ் கண்டிக்க, இருவருக்கும், ‘பனிப்போர்’ துவங்கியது.
இதற்கிடையே, மதுரை பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு, மூன்று ஊழியர்கள் இறந்த வழக்கில், பாண்டி பெயரும் சேர, சுரேஷின் கை ஓங்கியது.
சில நாட்களிலேயே, வேளாண் விற்பனை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தன் குடும்ப பகையை காரணமாக வைத்து, அக்கா மகன் திருச்செல்வன் மூலம், தன்னை கொல்ல, சுரேஷ் திட்டமிட்டு வருவதாக பாண்டி சந்தேகப்பட்டார்.
இச்சூழலில், 2013 ஜன., 31ல், வீட்டருகே, ‘பொட்டு’ சுரேஷ்கொல்லப்பட்டார்; இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என, 17 பேர் சேர்க்கப்பட்டனர்.
சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், முதல் குற்றவாளியாக பாண்டி சேர்க்கப்பட்டார்; ஆனால், கொலை நடப்பதற்கு முன், அவர் தலைமறைவானார். போலீசார், மும்பை, ஐதராபாத் என, பல நகரங்களில் தேடியும் சிக்கவில்லை.
‘பொட்டு’ சுரேஷ் கொலை
போலீசார் சபதம் : அவரை பிடித்தே ஆக வேண்டும் என, சபதமிட்ட போலீசார், அவரது மனைவி தயாளுஉள்ளிட்ட குடும்பத்தினரை கைது செய்து, சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
தேடப்படும் குற்றவாளியாக, பாண்டி அறிவிக்கப்பட்டார். அவ்வப்போது, புதுப் புது மொபைல் எண்களில் இருந்து, குடும்பத்திடமும், வழக்கறிஞர்களிடமும் பேசி வந்தார்.
மதுரை போலீசார் மூலம் தேடினால், பாண்டிக்கு தெரிந்துவிடும் என்பதால், ஓ.சி.ஐ.யூ., எனப்படும், சென்னை ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு போலீசாரின் உதவியை நாடினர். இரு மாதங்களாக, பாண்டியின் குடும்பம், நண்பர்கள், கூட்டாளிகளின்
மொபைல் எண்களை கண்காணித்ததில், நண்பர் ஒருவருக்கு, மும்பையில் இருந்து பாண்டி பேசியது தெரியவந்தது.
மொபைல், ‘டவர்’ மூலம், அவர் நவி மும்பை பகுதியில் இருப்பதை, மும்பை போலீசார் வழியாக உறுதி செய்தனர். இதையடுத்து, ஓ.சி.ஐ.யூ., போலீசார், மும்பை சென்று, நேற்று முன்தினம் இரவு, பாண்டியை கைது செய்தனர்.
மனைவி மனு: ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் கைதாகி உள்ள, ‘அட்டாக்’ பாண்டியை ஆஜர்படுத்தக் கோரி, அவரது மனைவி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
பாண்டியின் மனைவி தயாளு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், 2011ல் என் கணவரை, ‘என்கவுன்டரில்’ கொல்ல, போலீசார் முயற்சித்தனர்.
அரசியல் உள்நோக்கில், ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில், என் கணவர் பெயரை சேர்த்துள்ளனர். அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கணவரை, இதுவரை கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை; அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. கணவரை, போலி, ‘என்கவுன்டரில்’ கொல்ல திட்டமிட்டு உள்ளனர்.
கணவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், மதுரை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இம்மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிகிறது.
“
*ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர், பாண்டி, 42.
*இவரது குடும்பம், 30 ஆண்டுகளுக்கு முன், மதுரை கீரைத்துரையில் குடியேறியது. துவக்கத்தில், மாநகராட்சி கழிப்பறைகளை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்தார்.
*இவர் மீது, மதுரை, அவனியாபுரம், கீரைத்துரை, விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை உட்பட, பல காவல் நிலையங்களில், கொலை, மிரட்டல், மோசடி உட்பட, 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன; ஆறு வழக்குகளில், ‘பிடிவாரன்ட்’ உள்ளது.
* கபடி வீரரான பாண்டி, ‘அட்டாக்’ எனக்கூறி, எதிராளியை தோல்வி அடையச் செய்வதில் கில்லாடி; இதனால், பெயருடன், ‘அட்டாக்’ ஒட்டிக்கொண்டது. இதற்கேற்ப, சில ஆண்டு களாக, ‘அட்டாக்’ ரக ஹேர் ஸ்டைலில் வலம் வந்தார்.