நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை தியேட்டரில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு என்று அறிவித்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன்.
ஆனால் இந்த சவால் பேயுடன் மகா நட்பாகிவிட்ட தமிழ் ரசிகர்களுக்கு இல்லையாம்… தெலுங்கு ரசிகர்களுக்குத்தானாம். மாயா படம் நேற்று தமிழில் வெளியானது.
இன்று தெலுங்கிலும் ரிலீஸாகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு மயூரி என்று தலைப்பிட்டுள்ளனர்.
தமிழில் ஓரளவு பரபரப்பு கிளப்பியுள்ள இந்தப் படத்துக்கு, தெலுங்கில் அவ்வளவு பப்ளிசிட்டி இல்லை.
எனவே மயூரியை தனியாக தியேட்டரில் பார்க்கும் ரசிகருக்கு ஒரு பெரிய வாய்ப்பைத் தந்துள்ளனர். இப்படத்தை தனியாக, தனது பல்ஸ் மற்றும் ரத்த அழுத்தத்தில் எந்த ஒரு மாற்றமுமின்றி, பயப்படாமல் படம் முழுவதையும் பார்த்து முடிப்பவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்படும்.
அதிலும் இந்த 5 லட்சத்தை நயன்தாரா அவரது கைகளால் வழங்குவார் என தயாரிப்பாளர் சி கல்யாண் அறிவித்துள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா…
படத்திலும் இதே போன்ற ஒரு காட்சி உள்ளது. ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாக தியேட்டரில் பார்க்கும் தைரியசாலிக்கு ரூ 5 லட்சம் பரிசு என ஒரு இயக்குநர் அறிவிக்க, அதை ஏற்று படம் பார்க்கும் ஒரு தயாரிப்பாளர் செத்துப் போவார். ஆனால் நயன்தாரா தைரியமாகப் பார்த்து பரிசை வெல்வார்!