சுன்னாகத்தில் மீண்டும் ஆவாக் குழு! பலர் பார்த்திருக்க இரு இளைஞர்களுக்கு சரமாரி வாள்வெட்டு

சுன்னாகம் நகரில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டப் பகல் வேளையில் ஆவாக் குழுவெனத் தங்களை இனங்காட்டிக் கொண்ட 9 பேர் கொண்ட குழுவினர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு இளைஞர்களைச் சரமாரியாக வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வாள் வெட்டுக்கு இலக்கான இரு இளைஞர்களும் சுன்னாகம் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணி புரிந்து வருகின்றனர்.

நேற்றைய தினமும் குறித்த இளைஞர்கள் வழமை போன்று வர்த்தக நிலையத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது 3 மோட்டார்ச் சைக்கிள்களில் 9 பேர் வந்திறங்கினர்.

சுன்னாகம் நகரப்பகுதியில் பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள கண்ணதாசன் பன்சி ஹவுஸ் மற்றும் அருகாமையில் உள்ள சித்தி விநாயகர் பன்சி ஹவுஸ் ஆகிய கடைகளில் நின்ற மாணவர்களான கண்ணதாசன் கோகுலதாசன் (வயது 18) மற்றும் பத்மசீலன் விதுசன் (வயது 18) என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பலர் பார்த்திருக்க சினிமாக் காட்சிகளில் இடம்பெறும் வாள் வெட்டுக் காட்சி போல இரு இளைஞர்களையும் சரமாரியாக வாளால் வெட்டினர் .

பின்னர் தாங்கள் ‘ஆவாக் குழுவைச்’ சேர்ந்தவர்கள் எனக் கூறி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

குறித்த வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இரு இளைஞர்களும் அம்புலன்ஸ் மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுத் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். பட்டப் பகலில் சுன்னாகம் நகரில் இடம்பெற்ற குறித்த வாள்வெட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply