ஐரோப்பியச் செய்தியாளர் in சிறப்பு செய்திகள்  சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவுக்கு எதிராக – சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

இந்த தீர்மான வரைவு தொடர்பாக நேற்று ஜெனிவாவில் நடந்த முதலாவது முறைசாரா கலந்துரையாடலில், வழக்கம் போலவே, பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டுபட்ட நிலையில் இருந்தன.

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாகவும், சிறிலங்காவில் அனைத்துலகத் தலையீடுகளுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டதுடன், தீர்மான வரைவு வாசகங்கள் வலுவற்றதாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சர்லாந்து. கனடா, அயர்லாந்து மற்றும் இணை அனுசரணை நாடுகள், தீர்மான வரைவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டன.

கலந்துரையடாலிலின் தொடக்கத்தில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் இராஜதந்திரி, சிறிலங்காவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதன் முழுமையான ஆதரவு கிடைப்பதாகவும் இருந்தால் மாத்திரமே, அமெரிக்க தீர்மானம் பயனுடையதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அனைத்துலக சமூகத்தின் சிறிலங்காவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது முக்கியமானது. உள்நாட்டில் அதனைப் பலவீனப்படுத்தக் கூடாது. என்றும் பாகிஸ்தான் இராஜதந்திரி குறிப்பிட்டார்.

தீர்மான வரைவு விடயத்தில், சிறிலங்காவின் கவலைகளை அனுசரணை நாடுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யப் பிரதிநிதி வலியுறுத்தினார்.

தீர்மான வரைவின் 4ஆவது பந்தி குறித்து, பிரச்சினை எழுப்பிய சீன இராஜதந்திரி, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விசாரணையில் உள்ளடக்குவது, அந்த நாட்டின் நீதித்துறை இறையையை அரிக்கின்ற செயல் என்று குறிப்பிட்டார்.

கியூபாவும், தீர்மான வரைவை எதிர்த்துக் கருத்து வெளியிட்டது. வரைவில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டில் எவ்வாறு மனித உரிமைகளை ஊக்குவிக்கலாம் என்று ஒவ்வொரு நாடும் முடிவு செய்ய வேண்டும் என்றும் கியூப பிரதிநிதி தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதிநிதி, சிறிலங்காவுக்கு சார்பாக உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார்.

தீர்மான வரைவில், வடக்கில் இராணுவமய நீக்கம் செய்தல் என்ற பந்தி தொடர்பாகவும், பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா மக்களும், அரசாங்கமும் தீர்வு ஒன்றைக் கண்டறிய வேண்டும் என்ற பந்தி தொடர்பாகவும், தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதிநிதி கோரினார்.

கலப்பு நீதிமன்றம் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று இந்த செயல்முறைகளை அனைத்துலக மயப்படுத்தும் முயற்சியானது, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாகரிகத்தைக் கொண்ட அவர்களுக்கு, இதற்கான ஆற்றல் இல்லை என்று கூறுவதாக உள்ளது என்றும் அவர் வாதிட்டார்.

சிறிலங்காவின் கரிசனைகளை கருத்தில் கொள்ளப்படாமல் இந்த மொழி நடையில் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை பாகிஸ்தான் எதிர்க்கும் என்றும் அந்த நாட்டின் பிரதிநிதி குறிப்பிட்டார்.

மேலும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொடர்ச்சியான மதிப்பீட்டை இந்த தீர்மானம் பரிந்துரைக்கும் என்றால், அதற்காக வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு குறித்தும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதிநிதி கோரினார்.

அதற்குப் பதிலளித்த ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி கெய்த் ஹாப்பர், வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பாக தமக்குத் தெரியாது என்றும், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் பொறிமுறை நம்பகமானதாக அமைய வேண்டும் என்பதே தீர்மானத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

இங்கு முக்கியமான சொல் நம்பகத்தன்மையாகும். இந்த தீர்மானத்தின் மூலம், இன்னும் அதிகமான நம்பகத்தன்மையுள்ள பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

geneva-us-side-event-2இராணுவமய நீக்கம் குறித்த பாகிஸ்தான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்கப் பிரதிநிதி, அந்தப் பிராந்தியத்தில் இராணுவமயமாக்கல் என்பது, மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முக்கியமான ஒரு காரணியாக இருந்து வருகிறது.

இது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையிலும், உள்நாட்டு அறிக்கைகளிலும் முக்கியமானதொரு கவலையாக பிரதிபலித்துள்ளது என்று விளக்கமளித்தார்.

தீர்மான வரைவின் பல்வேறு பகுதிகள் குறித்த அயர்லாந்து பிரதிநிதி வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார். “தனது பொறுப்புக்கூறல் செயல்முறையில் அனைத்துலக சமூகம் தலையீடு செய்வதாகவோ, தீர்ப்பளிக்க முனைவதாகவோ சிறிலங்கா கருதக் கூடாது.

அயர்லாந்தில் எமது அனுபவத்தின் படி, அனைத்துலக பங்கு உதவியாக இருந்ததைக் கண்டுள்ளோம். குறைமதிப்புக்குட்படுத்துவதை அனைத்துலக பங்களிப்பு குறைக்க உதவும்.

சிறிலங்காவில் நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு வலுவான அனைத்துலகத் தலையீடு அவசியமானது” என்று அவர் தெரிவித்தார்.

எந்தவொரு இடைக்கால நீதிப் பொறிமுறையையும், நம்பகத்தன்மையையும், அனைத்துலக உதவி மற்றும் ஆலோசனை என்பன வலுப்படுத்தும் என்று நோர்வே பிரதிநிதி இங்கு தெரிவித்தார்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு அமைய, சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் செயல்முறையில், வலுவான அனைத்துலக தலையீடு இருக்க வேண்டும்என்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியும் வலியுறுத்தியிருந்தார்.

Share.
Leave A Reply