சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விபரித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர்,
குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைகளே முன்னெடுக்கப்படும். அதில் அனைத்துலகத் தலையீடுகள் இருக்காது.
ஊடகங்கள் தான் கலப்பு நீதிமன்றம் என்கின்றன. ஆனால், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது.
இதுபற்றி ஜெனிவாவில் கலந்துரையாடப்படுகிறது. அதுபற்றி கதைக்க நான் விரும்பவில்லை.
ஆனால் சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன் அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.
இந்த தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளினதும் ஆதரவை அமெரிக்கா பெற வேண்டும்.
இதுபற்றி அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடன் நானும், வெளிவிவகார அமைசச்சர் மங்கள சமரவீரவும் கலந்துரையாடியிருக்கிறோம்.
சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவு வழங்கும் என்று நம்புகிறோம்.
இந்தியாவுடனும் இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐ.நா விசாரணை அறிககை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்…
பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் அனைவரும் இணங்கக் கூடிய தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதே எமது கொள்கையாகும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை மீண்டும் செய்வதற்கு நாம் தயாரில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட பல நாடுகளு டன் இணைந்து இலங்கைக்கு இசைவான இணக்கப்பாடான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பிரச்சினைக்கு தீர்வுகாண உள்ளக விசாரணை பொறிமுறையே ஒரே தீர்வாகும். அதனை நாங்கள் முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் விசேட உரையொன்றை நிகழ்த்தும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்;
அண்மையில் நான் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டதோடு பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினேன்.
இதன்போது ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அதேபோன்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் எமக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். அந்நாடுகள் எமக்கு ஆதரவு வழங்கத் தயாராகவே உள்ளன.
அதேபோன்று இதற்கு முன்பதாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் எமக்கு எதிரான பிரேரணை கொண்டு வந்தபோது எமக்கு ஆதரவு வழங்கிய நாடுகளும் தமது ஆதரவை இம்முறையும் எமக்கு வழங்கும்.
இவ்விடயம் தொடர்பான விரிவான விபரங்களை இத்தருணத்தில் நான் வெளியிடமாட்டேன்.
இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தியே எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது அமெரிக்காவின் பிரேரணை என்னவென்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அத்தோடு இதனோடிணைந்த ஏனைய அறிக்கைகளையும் கவனத்திலெடுத்து சபாநாயகருடன் கலந்தாலோசித்து இவ்விடயம் தொடர்பாக விவாதமொன்றை நடத்த முடியும்.
எம்மிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அனைத்தையும் வெளிப்படைத் தன்மையாகவே முன்னெடுப்போம். பாராளுமன்றத்திற்கும் அனைத்தையும் தெரிவிப்போம்.
தமிழ் மொழி புறக்கணிப்பு, உயர் கல்வி வாய்ப்புக்கள் வரையறுக்கப்பட்டதன் காரணமாகவே தமிழர் பிரச்சினை உருவானது.
பயங்கரவாதத்தின் ஆரம்பமும் 1983 இனவாதக் கலவரமும் போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்களால் விடுதலைப் புலிகள் அமைப்பு வியாபித்தது.
1977 இல் பாராளுமன்றத்தில் எம்மோடிருந்த ஜனாதிபதி பிரேமதாஸ உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் பல தலைவர்கள் மற்றும் வட மாகாணத்தின் ஐ.தே.க அமைப்பாளர்கள் என பலர் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சீ.வி. குணரத்ன கொல்லப்பட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா , சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் புலிகளின் தாக்குதலிலிருந்து உயிரை பாதுகாத்துக் கொண்டனர்.
இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அது மட்டுமல்லாது புலிகளால் தமிழ் தலைவர்களும் கொலை செய்யப்பட்டனர். தமிழ்த் தலைவர் பரம்பரையே அழிக்கப்பட்டது.
இதன் பிரதிபலன்களை இன்று நாம் காண்கிறோம். அரசியல் தீர்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதால் தமிழ் மக்கள் வரையறுக்கப்பட்ட தீர்வை பெற்றுக் கொள்வதும் தடுக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பு கொழும்புக்கு எதிராக மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திற்கு எதிராகவும் செயற்பட்டது. எனவே இவ்வாறானதொரு யுகம் மீள ஏற்பட நாம் இடமளிக்கமாட்டோம்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளை மீண்டும் செய்வதற்கு நாம் தயாரில்லை.
அனைத்து தரப்பினருட னும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டைக் கண்டு பிரச்சினையை தீர்ப்பதே எமது நோக்கமாகும்.
அதை விடுத்து இனவாதம் மதவாதத்தை தூண்டி விட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.
இப் பிரச்சினையை எமது எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல நாம் தயாரில்லை.
இப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் அனைத்து தரப்பினரும் இணங்கக் கூடிய தீர்வை பெற்றுக் கொள்வதே எமது நோக்கமாகும்.
இது தான் எமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் சிறப்பான பரிசாகும்.
அனைத்து மக்களும் எந்த விதமான நெருக்கடியும் இல்லாமல் வசிப்பதற்கான நாட்டை உருவாக்குவது எமது கடப்பாடாகும்.
எந்தவொரு இனக் குழுமத்திற்கும் அநீதி ஏற்படாத விதத்திலான சமூகமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை வந்தார்.
அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதன் போது பல உறுதிமொழிகளை வழங்கினார்.
அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தபோது அது தொடர்பில் நிலையான தீர்வுகளை மேற்கொள்வதாக விடுத்து கடந்த ஆட்சியாளர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக உதலாகம பரணகம ஆணைக்குழுக்களை நியமித்தனர்.
இறுதியில் சர்வதேச சமூகத்திற்கு மட்டுமல்ல, நாட்டுக்குள்ளிருந்த தரப்பினருக்கு எவ்விதமான திருப்தியளிக்கும் பிரதிபலன்கள் கிடைக்கவில்லை.
மஹிந்த ராஜபக் ஷவின் அரசினால் சர்வதேச விசாரணைக்கு நாடு தள்ளப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி உருவானது.
இதன் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்படவிருந்த ஐ.நா. அறிக்கை புதிய ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செப்டெம்பர் வரை ஐ.நா. பிற்போடப்பட்டது.
இக்கால அவகாசத்திற்குள் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. சுயாதீன குழுக்கள் நியமிக்கப்பட்டு ஜனநாயக நிறுவனங்கள் பலப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தற்போதைய தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசாக அனைத்து மக்களுக்கும் சரியானதை செய்வதை கொள்கையாக கொண்டு செயற்படும்.
சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு மட்டும் இது மேற்கொள்ளப்படவில்லை.
அனைத்து மக்களுக்கும் அனைத்து இனக் குழுமங்களுக்கும் நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பது எமது நோக்கமாகும்.
பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாத வண்ணமும் அதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் நீண்டகாலமாக துன்பத்தில் வாழும் மக்களுக்கு நிலையான சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதும் எமது இலக்காகும்.இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
உண்மையை கண்டறிதல், நியாயத்தை நிறைவேற்றுதல் மீண்டும் மோதல்கள் ஏற்படுவதை தவிர்த்தல் உட்பட பூரணத்துவமான மீள் கட்டியெழுப்புதல் என்பன நல்லிணக்கத்திற்குள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
அது போன்று கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்பகரமான நடவடிக்கைகள் மீண்டும் ஏற்படுவதை தடுத்தல் வேண்டும். நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியது அவசியமாகும்.
தீர்வை பெற்றுக் கொடுக்கும் விதத்திலான அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டும்.
ஜனாதிபதியாக எமது அரசாங்கமும் பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடு மூலம் இதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கப்பாட்டிற்காக அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.
சுதந்திரமான தேசிய நீதிமன்றப் பொறிமுறை ஊடாக பொறுப்புக் கூறல் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கினார்.
சட்டத்தின் இறையாண்மை மற்றும் அனைத்து இனக் குழுமங்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான ‘பொறுப்புக் கூறல்”என்பது அத்தியாவசியமான அடிப்படைக் காரணியாகும்.
இந்த வேலைத் திட்டத்திற்கு நீதித்துறை மற்றும் நிர்வாக ரீதியிலான சீர்திருத்தம் அவசியமானதாகும்.
நீண்டகால வன்முறைகள் மற்றும் பயங்கரவாதத்தால் எமது நாட்டின் பொறுப்புக் கூறல் மரணித்துக் கொண்டிருந்தது.
இக்கலாசாரத்திற்குள் சட்டத்தின் இறையாண்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் நல்லாட்சியையும் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பது அவசியமானதாகும்.
மனித உரிமை மீறலுக்கு மட்டுமல்ல; ஊழல் மோசடி உட்பட பல்வேறுபட்ட குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெறாது தப்பித்துக் கொள்வதை தடுப்பது சட்டத்தின் இறையாண்மையை மீள நிலை நிறுத்துவது. மற்றும் பொறுப்புக் கூறலுக்கான விடயங்கள் அத்தியாவசியமானவையாகும்.
அது மட்டுமல்லாது எமது நாட்டின் நீண்டகால அபிவிருத்தி மற்றும் எதிர்கால சந்ததியினரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி மக்கள் மத்தியில் சமாதானத்தின் உணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
தென்னாபிரிக்காவின் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய உண்மை, நேர்மை, தேசிய மீளிணக்கம் மற்றும் கடந்த காலத்தில் இடம்பெற்ற பிழைகள் மீள ஏற்படாமல் இருப்பதற்கான ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.
இதில் அனைத்து மதத் தலைவர்கள் அடங்கிய கருணைச் சபை மற்றும் ஆணையாளர்கள் இணைந்த வியூகத்துடனான அமைப்பு உருவாக்கப்படும். இச் சபை ஊடாக அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உண்மையை கண்டறிந்து தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் விசேடத்துவ ஆலோசனைகள் மற்றும் நிபுணத்துவத்தை பெற்றுக் கொண்டு சர்வதேச ரீதியிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைக்கு ஏற்ப குடும்பங்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிபடுத்தும் அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட அலுவலகமொன்று பாராளுமன்றம் ஊடாக நிறுவப்படும்.
நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்காக விசேட சட்டத்தரணிகள் அடங்கிய அரசியலமைப்பு ரீதியான குழு அமைக்கப்படும்.
நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஏனைய குழுக்கள் மூலம் சேதங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் மேற்கொண்ட ஆணைக்குழு ஒத்துழைப்பை வழங்கும். பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக பரந்தளவிலான பொறிமுறை ஏற்படுத்தப்படும்.
இவையனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தேசிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட பொறிமுறையுடனே இடம்பெறும். எந்தவொரு சர்வதேச நிறுவனத்தினதோ அல்லது நபரினதோ பொறிமுறையாக அமையாது என்றார்.