சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் அங்கு வேறு சில தீவிரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
அதில் இமாம் புகார் ஜமாத் அமைப்பும் ஒன்று. அது அல்கொய்தாவின் கிளை அமைப்பாகும். அது சிரியாவில் உள்ள 2 கிராமங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த முடிவு செய்தது.
அதற்காக தங்கள் அமைப்பில் உள்ள அல் தையர் என்ற உஸ்பெகிஸ்தான் நாட்டு இளைஞரை தேர்ந்தெடுத்தனர். தாக்குதல் நடத்தவதற்கு முன்பு அவருக்கு பிரியா விடை அளிக்கப்பட்டது.
அப்போது தற்கொலை படை தீவிரவாதி ஜாபர் அல் தையர் பயத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அந்த காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. அவரை மூத்த தீவிரவாதிகள் கட்டிப்பிடித்து ஆசீர்வாதம் செய்கின்றனர்.
பின்னர் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட பீரங்கியில் அமர்ந்த அவர் திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அப்போது அவரிடம் ஒருவர் தாக்குதல் நடத்த தயங்க கூடாது. பயமாக இருந்தால் கடவுளை நினைத்துக் கொள் என்கிறார்.
அதற்கு, ‘‘நான் மரணத்துக்காக பயப்படவில்லை. எனது முயற்சிகள் தோல்வி அடைந்து விடுமோ என அஞ்சுகிறேன்’’ என அவர் தெரிவிக்கிறார். இருந்தாலும் அவரது கண்ணில் மரண பயம் தெரிகிறது. அது வீடியோவில் பதிவாகியுள்ளது.
பின்னர் வெடிகுண்டுகளுடன் புறப்பட்டு செல்லும் அந்த பீரங்கி சிறிது தூரத்தில் வெடித்து சிதறுகிறது. இக்காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.