ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை (23) ஜெனீவாவுக்கு பயணமானார்.
வடமாகாண சபையில் விடுமுறை பெற்றுக்கொண்டு, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் அனுமதியுடன் இவர் ஜெனீவாவுக்கு சென்றுள்ளார்.
‘இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்’ மற்றும் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனஅழிப்பு’ என்று, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டு வடமாகாண முதலமைச்சரால் கையொப்பமிடப்பட்ட இரண்டு பிரேரணைகளில் பிரதிகளையும், அனந்தி எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த பிரதிகளை, ஐ.நா உறுப்பு நாடுகளிடம் கையளிப்பதற்காகவே அவர் எடுத்தச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனும் கவிந்திரன் கோடீஸ்வரனும் இன்று இரவு ஜெனீவாவுக்கு பயணமாகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தான் ஜெனீவா செல்வதாக கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனந்தி ஜெனிவாவுக்கு வந்து எதை சாதிக்கமுடியும்??
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டுமானால், மனிதவுரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளால் மட்டுமே இப் பிரேரணையில் மாற்றங்கள் கொண்டுவரமுடியும்.
அதுவும்., அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ நினைத்தால் சிலவேளை இப் பிரேரணை வரைவில் மாற்றத்தை கொண்டுவரலாம்.
அல்லது இப் பிரேரணையை முன்வைத்த அமெரிக்கா அல்லது இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை இப் பிரேரணை வரைவில் மாற்றங்களை கொண்டுவரலாம். (இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்காவுடன் அதற்காகான பேச்சுவார்த்தைகளை தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.)
அதற்காகதான் இப்பொழுது ஜெனிவாவில் அமெரிக்கா இவ் பிரேரணையை முன்வைத்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா தயாரித்துள்ள வரைவுத் தீர்மானத்தையே நிறைவேற்ற முடியாமல் உள்ளது..
நிலமை இப்படியிருக்க “அனந்தி, செல்வம் அடைக்கலநாதன்” போன்றவர்கள் ஜெனிவா வந்து என்ன செய்யமுடியும்?
சும்மா சுற்றுலாப் பயணமாக ஜெனிவாவுக்கு வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
இரண்டாவது தீர்மான வரைவை இன்று பேரவையில் சமர்ப்பிக்கிறது
அமெரிக்கா தயாரித்துள்ள இரண்டாவது வரைவுத் தீர்மானம் குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், இன்று அந்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு ஊக்கமளித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் தீர்மான வரைவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு தொடர்பாக, கடந்த திங்கள், மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முறைசாரா கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் போது சிறிலங்காவும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளும், தீர்மான வரைவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.
இரண்டாவது முறைசாரா கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிலங்கா பிரதிநிதி, தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள 26 செயற்பாட்டு பந்திகளில், 14 பந்திகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன், தீர்மான வரைவில் மேலும் பல பகுதிகளை திருத்தம் செய்யவும், மொழி நடையில் மாற்றம் செய்யவும் சிறிலங்கா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்தநிலையில், சிறிலங்கா கேட்டுக் கொண்ட சில மாற்றங்களை உள்ளடக்கியதாக இரண்டாவது திருத்தப்பட்ட வரைவைத் தயாரிப்பது குறித்த பேச்சுக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது.
சிறிலங்காவும், தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகளும், இந்த வரைவு வாசகங்கள் தொடர்பாக இணக்கம் கண்டால், இரண்டாவது வரைவு குறித்த பேச்சுக்கள் நிறைவடைவதுடன், இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வுக்கான தீர்மான வரைவுகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில், சிறிலங்காவுடன் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்திலும், இரண்டாவது வரைவு இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த தீர்மான வரைவு தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மற்றொரு முறைசாரா கலந்துரையாடலுக்கும் அமெரிக்கா ஒழுங்கு செய்துள்ளது.
இதன் பின்னர், பேரவையில் இறுதியான தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.