சிறிலங்காவின் முப்படைகள், மற்றும் வெளிநாட்டுப் படையினர் என, 2900 படையினர் பங்கேற்ற நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் இறுதி நாளான நேற்று, மட்டக்களப்பு புன்னைக்குடாவில் முப்படைகளும் பங்கேற்ற பாரிய தாக்குதல் பயிற்சி ஒன்று நேற்றுமாலை இடம்பெற்றது.
கடந்த செப்ரெம்பர் 3ஆம் நாள் கொக்கிளாயில் தொடங்கப்பட்ட, நீர்க்காகம் போர்ப் பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில் சிறிலங்கா இராணுவத்தினர் 2500 பேரும், சிறிலங்கா கடற்படையினர் 245 பேரும், சிறிலங்கா விமானப்படையினர் 140 பேரும், வெளிநாட்டுப் படையினர் 53 பேரும் பங்கேற்றனர்.
இந்தப் போர்ப் பயிற்சியின் நிறைவு நாளான நேற்றுமாலை, மட்டக்களப்பு- புன்னைக்குடாவில் அமைக்கப்பட்டிருந்த எதிரிகளின் முகாமை சிறிலங்கா இராணுவக் கொமாண்டோக்கள் தாக்கி அழிக்கும் பாரிய தாக்குதல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பயிற்சியில் சிறிலங்கா கடற்படைப் படகுகள், சிறிலங்கா விமானப்படையின் மிக் போர் விமானங்கள், எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டன.
மூன்று வாரங்களாக கொக்கிளாய் தொடக்கம் அறுகம்பை வரையான கடலோரம் மற்றும் காடுகளில் நடந்த இந்தப் போர்ப் பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
நேற்றைய நிறைவு நாள் நிகழ்வில், ஜப்பான்,சீனா, இந்தியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களும் பங்கேற்றிருந்தனர்.