ஆரணி: ஆரணி அடுத்த ரகுநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி வள்ளி. இவர்கள் 2 பேரும் அங்குள்ள பஞ்சு மில் தொழிலாளிகள். இவர்களுக்கு மீரா (வயது 18) என்ற மகள் இருந்தார்.
மீரா சமீபத்தில் பிளஸ்–2 முடித்தார். எனவே அவரது பெற்றோர் கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
அப்போது மீராவுக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே காதல் இருந்தது. மீராவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மீராவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே மீராவை திருவண்ணாமலையில் உள்ள மீராவின் சித்தி மீனாட்சி வீட்டில் கொண்டு விட்டனர்.
அங்கு மீரா இருந்தார். சமீபத்தில் ஆரணியில் மீரா படித்த பள்ளியில் அவருக்கு விலையில்லா மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மீரா கலந்து கொண்டு மடிகணினி பெற்றார். அதை தனது பெற்றோரிடம் கொடுத்து விட்டு மீண்டும் தனது சித்தி வீட்டுக்கு மீரா சென்றார்.
சித்தி வீட்டில் இருந்த மீரா தனது காதலுக்கு சம்மதம் கிடைக்காததால் சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் மீராவின் பெற்றோர் கதறி துடித்தபடி திருவண்ணாமலைக்கு சென்றனர். அங்கு மீராவின் உடலை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டனர்.
தற்கொலை செய்த மீராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து மீராவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீராவின் உடல் அவரது சொந்த ஊரான ரகுநாதபுரத்துக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. அப்போது மீராவின் தாய் வள்ளியும் உடன் வந்தார்.
பின்னர் மீராவின் உடல் ஊர் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது மகளின் உடலை பார்த்து பார்த்து வள்ளி அழுதபடி மிகவும் சோகத்தில் இருந்தார்.
இதனால் அவரது உடல் மிகவும் சோர்வடைந்தாக தெரிகிறது. இதனால் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக அக்ராபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சிகிச்சை பெற்று பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அதன் பின்னரும் மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டபடி இருந்தார். திடீரென அவர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கு நின்ற உறவினர்களும், ஊர் மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். வள்ளியை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
ஒரே நேரத்தில் மனைவியையும், மகளையும் பறிகொடுத்த மதியழகன் அவர்களது உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மகளின் பிணத்தின் அருகே தாயும் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மீரா, வள்ளி ஆகிய 2 பேரின் பிணத்தையும் அருகருகே வைத்து ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதுவரை மீராவை நினைத்து கண்ணீர் விட்ட உறவினர்கள் வள்ளியை நினைத்தும் கண்ணீர் விட்டு அழுதனர். மீரா, வள்ளி ஆகியோரின் இறுதி சடங்கு நடந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே இன்று பரபரப்பாக பேசப்பட்டது.