உலகின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜேர்மனியின் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் கழிவுவாயு வெளியேற்றச் சோதனை தொடரபான மோசடியினால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதனால் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்ட்டின் வின்டர்கோர்ன் ராஜினாமா செய்துள்ளார்.
விற்பனை அடிப்படையில் உல கின் முதல்நிலை வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்குவது Volkswagen நிறுவனம்.
(ஜேர்மனிய மொழியில் V எழுத்தை ஆங்கில F எழுத்து ஒலியாகத் உச்சரிக்கப்படும். எனவே Volkswagen என்பதை ஃபோக்ஸ்வாகன் என்பதே உச்சரிக்க வேண்டும்.)
இந்நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சில வகை டீஸல் வாகனங்களில் கழிவுவாயு வெளியேற்றம் தொடர்பிலான சோதனையின்போது இச்சோதனை பெறுபேற்றை மோசடியாக மாற்றும் விதமான கருவியொன்றை மேற்படி வாகனங்களில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் இணைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள் ளது.
சோதனை நிலைமைகளின்போது மாத்திரம் வெளியேற்றப்படும் வாயுக்களின் மாசு அளவை குறைத்து காட்டும் வகையில் மோசடியான இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தகவலை கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகள் அம்பலப்படுத்தியதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தமது டீஸல் வாகனங்களில் இந்த சட்டவிரோத கருவியை பொருத்தியதை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
11 மில்லியன் (1.1கோடி) வாகனங் களில் இந்த கருவி பொருத்தப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.