கிளிநொச்சி கல்மடுநகரில் அமைந்துள்ள மாகாண மூலிகை கிராமத்தில் சித்த மருத்துவ மாநாடும்,கண்காட்சியும் 2015 நிகழ்வு இன்று வட மாகாண முதலமைச்சர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமாகாண சித்த மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்த மருத்துவ கண்காட்சியும் மாநாடும் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் அமைந்துள்ள சித்த மருத்துவ மூலிகை தோட்ட வளாகத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் சித்த மருத்துவ முறைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் ஆகியன தொடர்பில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் கண்காட்சியில் விளக்கமளிக்கப்பட்டு வருகின்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, சித்த மருத்துவ முறைகள் தற்போது மக்களால் பயன்படுத்தப்படுவதில்லை எனவும், மேலைத்தேய மருத்துவ முறைமைகளையே பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டதுடன் வடமாகாண சபை சித்த மருத்துவ முறைமைகளை கட்டியெழுப்பும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கண்காட்சி ஆரம்ப விழாவில் யாழ் இந்திய தூதுவர் நடராஜன், மாகாண சுகாதர அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தவநாதன், பசுபதிபிள்ளை மற்றும் மருத்துவர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டஇந் நிகழ்வில் சித்த மருத்துவம் தொடர்பான கண்காட்சியும், மூலிகைகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மருத்துவ செயற்பாடுகள் பற்றிய செயல்முறை விளக்கங்களும் மேற் கொள்ளப்பட்டது.