சுமார் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணமான பெண் ஒருவர் யாழ்ப்பாண ரவுடிகளின் தாக்குதலில் கணவனை இழந்து அநியாயமாக விதவை ஆகி உள்ளார்.
அரியாலை மேற்கை சேர்ந்தவரும், யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியையுமான தர்ஷினி – வயது 41 என்பவருக்கும் மலையகத்தை பூர்வீகமாக கொண்டவரும், தனியார் கல்லூரி ஆசிரியருமான எம். மணிவண்ணன் – வயது 45 என்பவருக்கும் இப்பரிதாபம் நேர்ந்து உள்ளது.
இரு வீட்டாரையும் பொறுத்த வரை இத்திருமணம் மிகப் பெரிய அபிலாஷையாக இருந்து வந்த நிலையில் புதிய வாழ்க்கையை இவர்கள் யாழ்ப்பாண நகர மையப் பகுதியில் ஆரம்பித்தனர்.
சம்பவ தினம் இரவு இவர்கள் தேநீர் அருந்த 10. 30 மணி அளவில் வீட்டோடு அண்டிய கடைக்கு வந்திருந்தனர்.
ஆயினும் இக்கடையில் இருந்த ரவுடிகள் மூவர் இத்தம்பதியை ஆபாச வார்த்தைகளால் நக்கல் அடிக்க இவர்களை மணிவண்ணன் எதிர்த்துப் பேசினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் வீடு வரை பின் தொடர்ந்து வந்து இருவரையும் நன்றாக நையப் புடைத்தனர்.
மணிவண்ணனுக்கு கையில் உடைவு. தலையில் பயங்கரமான காயம். மனைவிக்கும் காயங்கள்.
மணிவண்ணனையும், தர்ஷினியையும் தகவல் அறிந்து வந்த தர்ஷினியின் சகோதரன் வைத்தியசாலையில் சேர்ப்பித்து இருக்கின்றார்.
மணிவண்ணன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் கொடுக்காமல் இன்று காலை இறந்து போனார்.