சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் ரகுபதி.
இவர், அருகிலுள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.ஸி வேதியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
தலைவாசல் கல்லூரியிலிருந்து டவுன் பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும்போது வழியிலுள்ள நத்தக்கரை கிராமத்தை சேர்ந்த ப்ளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நேற்று காலை 8 மணியளவில் மாணவர் ரகுபதி நத்தக்கரை கிராமத்திலுள்ள மாணவியின் வீட்டிற்கு சென்று அவரின் கையை பிடித்து இழுத்து, முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார்.
மாணவி சத்தம் போட்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கல்லூரி மாணவர் ரகுபதியை கட்டி வைத்து உதைத்துள்ளனர்.
பின்னர் தகவலறிந்து அங்கு வந்த தலைவாசல் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் மாணவர் ரகுபதியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.
அப்போது காவல் நிலையத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த ரகுபதி உறவினர்கள், புகார் கொடுக்கவந்த மாணவியின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கியதில் மாணவி உறவினர்கள் திலீப், சண்முகம், பாலு உள்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி காலை 10.30 மணியளவில் சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாணவியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். சேலம் டி.ஐ.ஜி வித்யாகுல்கர்னி, எஸ்.பி சுப்புலட்சுமி ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்லூரி மாணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது தனித்தனி வழக்கு போடுவதாக கூறியதால் மதியம் 2.30 மணியளவில், அனைவரும் கலைந்து சென்றனர்.
அதன்பின், மாணவர் ரகுபதி மீது தலைவாசல் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் குழந்தைகள் பாலியல் மற்றும் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.
மாணவனும், மாணவியும் இருவேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.