நியூயார்க்: அமெரிக்காவின் லூசியானா பகுதி நதியில் மீண்டும் வெளியே தலை காட்டியுள்ளது பிங்க் நிற டால்பின். உலகத்திலேயே பிங்க் நிறத்தில் இந்த ஒரு டால்பின் மட்டுமே உள்ளதாக நம்பப்படுகிறது.
இது இப்போது கர்ப்பமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ளது கால்காசியு பாரீஸ்.

இங்குள்ள நதி ஒன்றில் கடந்த 2007ம் ஆண்டு பிங்க் நிறத்தில் டால்பின் ஒன்று வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டது. மற்ற டால்பின்களில் இருந்து நிறத்தில் வேறுபட்டு இருந்த இந்த பிங்க் டால்பினுக்கு ‘பிங்கி’ எனப் பெயரிடப் பட்டது.

உலகத்திலேயே பிங்க் நிறத்தில் இந்த ஒரு டால்பின் மட்டுமே வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. அவ்வப்போது தனது தாய் டால்பினுடன் நீருக்கு வெளியே தலை காட்டிச் செல்லும் இந்த பிங்கி.
இந்நிலையில், தற்போது மீண்டும் பிங்கியின் தரிசனம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக முதன்முறையாக பிங்கியை படமெடுத்து வெளி உலகத்திற்கு காட்டிய கால்காசியு சார்ட்டர் சர்வீஸ் கேப்டன் எரிக் ரூ கூறுகையில், “கோடைகாலத்தில் பிங்கி அடிக்கடி நீருக்கு வெளியில் வந்து விளையாடுவதை நான் பார்த்துள்ளேன்.
முன்பெல்லாம் பிங்கி அது தன் தாயாருடன் நீரில் விளையாடும். ஆனால், சமீபகாலமாக அது தனியாகவும், மற்ற டால்பின்களுடனும் சேர்ந்து நீரில் விளையாடுவதைக் காண முடிகிறது.
மிகவும் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் பிங்கி காணப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், பிங்கியின் இந்த உற்சாகத்திற்குக் காரணம் அது கர்ப்பமாக இருக்கும் என எரிக் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பிங்கி கர்ப்பமாக இருப்பது உறுதியானால், அதன் குட்டி என்ன கலரில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

Share.
Leave A Reply