சீனாவின் சட்டத்துறைக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி விவாதப்பொருளாகியிருக்கிறது
பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து நீங்கள் ஒரே ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நிர்பந்திக்கப்பட்டால் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்? தாயாரையா? காதலியையா?.
சீனாவில் கேட்கப்படும் சிக்கலான கேள்வி இது. சீனாவின் தேசிய சட்டத் தேர்வில் இந்த ஆண்டு இந்த கேள்வி கேட்கப்பட்டது.
எதிர்கால வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுகான தேர்வில் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே சீனாவில் சட்டத்துறையில் பணிபுரிய முடியும்.
இந்த கேள்விக்கான “சரியான” விடையையும் சீன சட்டத்துறை பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.
பரீட்சை எழுதியவர்கள் அனைவரும் தமது தாயாரைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர்கள் என்று அந்த விடையில் சொல்லப்பட்டிருந்தது.
பெற்றோருக்கான கடமைக்கு பதிலாக காதலுக்கு முன்னுரிமை கொடுப்பது “செயற்படாத குற்றத்துக்கு” சமம் என்று சீனாவின் சட்டத்துறை வெளியிட்ட “சரியான விடை”யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சீனாவின் இணைய பயன்பாட்டாளர்களுக்கு இந்த விடை அவ்வளவு சரியானதாகப் படவில்லை.
தாய்க்கான மகனின் கடமையே முதன்மையானது என்கிறது சீன சட்டத்துறை
“ஒருவரின் பெற்றோரை பாதுகாக்க வேண்டிய கடமையை ஆபத்தில் இருக்கும் மற்றவர்களை காப்பாற்றும் செயலோடு ஒப்பிடுவது கேலிக்குரியது”, என்று இணைய பாவனையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
“சட்டப்படி மகன் தனது தாயைக் காப்பாற்றவேண்டும்”, என்று விளக்கிய மற்றொருவர், “ஆனால் மற்றவர்களும் ஆபத்தில் இருக்கும்போது அந்த மகன் தனது தாயை மட்டும் காப்பாற்றவேண்டும் என்று அந்த சட்டம் சொல்லவில்லை”, என்றும் கருத்து தெரிவித்தார்.
வேறு பலர் இப்படி பற்றி எரியும் கட்டிடத்தை எதிர்கொள்ளும் சூழல் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று மற்றவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு வந்த பதில்களில் பெரும்பாலானவை தாய்ப்பாசத்தை ஆதரிப்பனவாக இருந்தன.
“இளம்பெண்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரே ஒரு அம்மா தான் இருக்கிறார்”, என்று ஒரு இளைஞர் முடிவெடுத்து அறிவித்திருந்தார்.
“நான் கண்டிப்பாக என் அம்மாவைத் தான் முதலில் காப்பாற்றுவேன்”, என்றார் மற்றொருவர். “சட்டக் காரணங்கள் தவிர, என் அம்மா தான் என்னை வளர்த்து ஆளாக்கினார்.
மேலும் என்னுடைய காதலிக்கு இளம் வயது. எனவே அவர் தானகவே அந்த தீப்பிடித்த கட்டிடத்திலிருந்து தப்புவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே இருக்கின்றன”, என்றும் அவர் தனது முடிவுக்கு விளக்கம் கொடுத்தார்.
காதலியை விட தாயே முக்கியம் என்பது சீன இளைஞர்கள் பலரின் பதிலாக இருக்கிறது
ஆனால் பாருங்கள், இவரது இந்த விளக்கம் குறித்து இவரது பெண் சிநேகிதி என்ன கருதுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை.
ஆனால் இந்த கேள்வி அடிப்படையிலேயே கோளாறான ஒன்று, பாலின பாகுபாடு நிறைந்தது என்பது குறித்து சீனாவின் இணைய வெளியில் யாருமே கேள்வி எழுப்பவில்லை.
சீனாவின் எதிர்கால வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கான தேர்வில் இப்படி ஒரு கேள்வி கேட்டால் என்ன? தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கியிருக்கும் தனது தந்தை மற்றும் தனது சிநேகிதன் ஆகிய இருவரில் ஒரு பெண் யாரை முதலில் காப்பாற்ற வேண்டும்?
(பிபிசி செய்திச் சேவையைச் சேர்ந்த சிலியா ஹட்டன் பீஜிங்கில் இருந்து எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்)
இந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி