கனடாவில் உள்ள சாலை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 2 நபர்கள் உயிரிழந்ததுடன் 3 குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோரொண்டோ மாகாணத்தில் உள்ள வாகன் என்ற நகரில் தான் இந்த கொடூரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில் வாகன் நகரில் உள்ள கிப்லிங் சாலையில் 65 வயது நபர் ஒருவர் 9 வயது சிறுமி மற்றும் 3 குழந்தைகளுடன் கார் ஒன்றில் பயணம் செய்துள்ளார்.

கிர்பி என்ற பகுதியை நோக்கி கார் சென்றுக்கொண்டு இருக்கையில் எதிர்புறத்தில் 29 வயதுடைய நபர் ஒருவர் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எதிரே வந்த கார் சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் குழந்தைகள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

கார் மோதிய வேகத்தில் சாலையை விட்டு தூக்கி எறியப்பட்ட அருகில் உள்ள கால்வாய் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

கண் இமைக்கும் நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த விபத்தில் 65 வயதான நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டுருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காததால் 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் எஞ்சிய 3 குழந்தைகள் இன்னும் அபாயக்கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பேசிய ஆண்டி பேட்டண்டன் என்ற பொலிசார், தனது பணி நாட்களில் கண்ட மிக மோசமான விபத்துக்களில் இதுவும் ஒன்று என வேதனை தெரிவித்துள்ளார்.

விபத்திற்கு காரணமாக கருதப்படும் அந்த 29 வயது ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவரை திங்கள் கிழமை(இன்று) நீதிமன்றத்திற்கு முன்பு நிறுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.

Share.
Leave A Reply