சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான நேற்றைய விவாதத்தில், இந்தியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் கருத்து எதையும் வெளியிடவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் தமது கருத்துக்களை வெளியிட்டன.
பெரும்பாலான நாடுகள், இந்த விசாரணை அறிக்கையை வரவேற்ற அதேவேளை, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் பாராட்டின.
இந்த விவாதத்தில், இந்தியா மற்றும் சீனப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போதிலும், சிறிலங்கா தொடர்பான கருத்து எதையும் வெளியிடவில்லை.
சிறிலங்கா குறித்த விவாதத்துக்கு முன்னதாக, சோமாலியா தொடர்பான விவாதத்தில் சீனப் பிரதிநிதி உரையாற்றிய போதிலும், சிறிலங்கா குறித்த விவாதத்தில் அவர் மௌனமாக இருந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணையை ஆரம்பிக்க வலியுறுத்தும் தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது, அதனை சீனா கடுமையாக எதிர்த்திருந்தது.
அதுபோலவே, இந்தியாவும் நேற்று கருத்து எதையும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மூலம் விசாரணையை நடத்துவதற்கு இந்தியாவும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை.
அதேவேளை, சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த கியூபாவும் நேற்று பேரவையில் உரையாற்ற சந்தர்ப்பம் கோரவில்லை.
அதேவேளை, சிறிலங்காவுக்கு வலுவான ஆதரவை வழங்கிய ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் நேற்றைய விவாதத்தில் உரையாற்றினர்.
பாகிஸ்தான் பிரதிநிதி உரையாற்றிய போது சிறிலங்கா தீவிரவாதத்தை தோற்கடித்துள்ளதை அனைத்துலக சமூகம் மதிக்க வேண்டும் என்றும், கொடூரங்களை இழைத்துள்ள மேற்குலகம் அதை விமர்சனம் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தினார்