நீ தொட்டால் அதிரும் குளமடி நான்
கல்லெடுத்துத் தட்டிப்பார்
எண் சாண் திரேகமும் ஏழுசுரம்
சுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்-
மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள் பற்றி சொல்லியிருந்தார்கள்.
‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக நினைத்து கொள்வார். முதல் முறை உறவு கொள்ளும்போது அந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும்.
ஆனால், தாங்கிக் கொள்ள வேண்டும்’ என அறிவுரைகள் என்ற பெயரில் பயத்தை அதிகப்படுத்தினார்கள்.
திருமணம் நடந்த அதே நாளில் சாந்தி முகூர்த்தத்தையும் குறித்துவிட்டார்கள் மாலாவின் குடும்பத்தார். ஏற்கனவே இவளது மஞ்சள் நிற அழகில் மயங்கியிருந்த பார்த்திபனுக்கு இந்த விஷயம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
மாலா முதலிரவு அறைக்குள் வந்ததுதான் தாமதம்.
அவளை கட்டிப்பிடித்து படுக்கையில் தள்ளி இயங்க ஆரம்பித்தான். வலி தாள முடியாமல் பார்த்திபனை தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து ஓடினாள் மாலா.
பார்த்திபனுக்கு அவமானமாக இருந்தது. அவன் வெளியே வந்து மாலா ஒத்துழைக்கவில்லை என குடும்பத்தாரிடம் சொல்ல அவர்கள் பெண் வீட்டாரை திட்டப் போய் பெரிய சண்டையாக இந்த சம்பவம் உருவெடுத்தது.
இப்படி முதலிரவு அன்றே பிரச்னை வரக் காரணம் என்ன?
சரியாக பழகாத ஆணையும் பெண்ணையும் ஓர் அறைக்குள் போட்டு கதவை பூட்டுவது போலத்தானே பல முதலிரவுகள் நடைபெறுகின்றன?
யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள்.
விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக் கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள்?
எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்? நன்றாக யோசித்து பாருங்கள்!
பசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம்.
பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என புகழ்பெற்ற பொன்மொழியே உள்ளது. அதனால், செக்ஸை முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது. கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்கித் தவிப்பதில் பயனில்லை.
சினிமாவில், போர்னோ வீடியோக்களில் காட்டப்படும் காமரசக் காட்சிகள் செயற்கையாக எடுக்கப்படுபவைதான்.
அவற்றில் காட்டப்படுவது உண்மையல்ல என்பதை முதலில் உணர்வது அவசியம்.கணவனும் மனைவியும் திருமணத்துக்கு பின் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும்.
மன உறவு சரியாக இருந்தால்தான் உடலுறவு சரியாக அமையும். முதலிரவின் போது கணவன், மனைவியின் எண்ணத்தை புரிந்து நடந்து கொள்வது முக்கியம்.
வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயலக்கூடாது. முதலிரவு என்பது உறவின் தொடக்கமே. அதன் பின்னால் பல இரவுகள் அவர்களுக்கு காத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இதையே காமசூத்ரா நூலில் வாத்ஸ்யாயனர், ‘முதலிரவில் தம்பதி உடனே கட்டிலில் படுக்காமல், நிறைய பேசவும் பல விளையாட்டுகளை ஆடவும் வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு செய்யும் போது இயற்கையாகவே செக்ஸ் ஈடுபாடு வரும். கட்டாயமாக உடலுறவு கொள்ள முயலும் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பும் பயமுமே ஏற்படும்.
மகிழ்ச்சியான மனநிலையில் உறவில் ஈடுபடும் போது, ரிலாக்சாக இருப்பதால் பெண்ணுறுப்பில் போதுமான திரவம் சுரக்கும்.
இதனால் இணக்கத்துடன் உறவு கொள்ள முடியும். வலியோ, எரிச்சலோ பிறப்புறுப்பில் ஏற்படாது.
முதலிரவை பற்றி அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். மன ஒற்றுமையும், பரஸ்பர புரிதலும் இருவருக்கும் சரியான முறையில் இருந்தாலே செக்ஸ் உறவும் அமோகமாக இருக்கும்.
செக்ஸ் பற்றிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தயக்கமும் இருக்கக் கூடாது.
(தயக்கம் களைவோம்!)
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி