பாலஸ்தீன கொடிக்கு முத்தமிடும் மஹ்முட் அப்பாஸ்

இஸ்ரேல் என்பது ஒரு தேசம்.

பாலஸ்தீன் என்பது வெறும் ஒரு கனவு. அப்படித்தான் நேற்றுவரையில் இருந்தது. ஆனால் அந்த கனவுக்கு ஐ.நா.சபை இப்போது அங்கீகாரம் கொடுத்துவிட்டது.

யாசிர் அரபாத் கண்ட கனவு… இதோ நனவாகிவிட்டது.

எல்லா பாலைவனங்களிலும் எப்போதாவது ஒருநாள் மழை பொழியத்தான் செய்யும் என்று அங்கே ஒரு பழமொழியிருக்கிறது.

தனிநாடு எனும் மழை பாலஸ்தீன பாலைவனத்தில் பெய்யுமா என்று எதிர்பார்த்திருந்த பாலஸ்தீனர்களுக்கு மழை பெய்யக்கூடிய காலநிலை உருவாகியிருக்கிறது.

article-doc-4w7fb-6bwnA0xKC-HSK1-389_634x435ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்தின் கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. இதுதான் அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

ஆனால் இதுமாத்திரம் வைத்துக்கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் அடைந்துவிட்டதாக கருத இயலாது.

ஆனால், தனி நாட்டுக்கான அங்கீகாரத்தை இது அங்கீகரித்திருக்கிறது என்று சொல்லலாம்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடமிருந்து பாது காத்துக்கொள்ளவும், தனிநாடு என்ற சர்வதேச தகுதிக்காகவும் நெடுங்காலமாக போராடிவந்த பாலஸ்தீன நாட்டின் கொடியை ஐக்கிய நாடுகள் சபையில் இதரநாட்டுக் கொடிகளுடன் கடந்த புதன்கிழமை செப்டெம்பர் 30 ஆம் திகதி ஏற்றி வைக்கப்பட்டது.

article-doc-4w7fb-6bwn9NAzEHSK2-382_634x492

பாலஸ்தீன அத்தாரிட்டியின் ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் பாலஸ்தீனக் கொடியை முத்தமிட்டுக் கொடுத்தார். அதன்பிறகு கொடியேற்றிவைக்கப்பட்டது.

இது பாலஸ்தீனத்திற்கு முதல் வெற்றி.

அத்தோடு தனிநாடு என்ற அந்தஸ்துடன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமாக விளங்கும் வத்திக்கான் நகரத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.

1964ஆம் ஆண்டு முதல் ஐ.நா.சபையின் கண்காணிப்பு நாடாக அங்கம் வகித்து வருகின்றது. இவ்விரு நாடுகளும்.

2012ஆம் ஆண்டு முதல் இதே தகுதியின்கீழ் அங்கம் வகித்துவரும் பாலஸ்தீனமும், வத்திக்கானும் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் இதர நாட்டின் கொடிகளைப் போல் எங்கள் நாட்டின் கொடிகளும் ஏற்றிவைக்கப்பட அனுமதி அளிக்க வேண்டும் என ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்தன.

Ban Ki-Moon; Mahmoud Abbasஉறுப்பு நாடுகளாக இல்லாத இவ்விரு நாடுகளின் கொடிகளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் ஏற்றிவைப்பது தொடர்பான இந்த தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐ.நா. உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகள் வாக்களித்தன.

பாலஸ்தீனம் மற்றும் வத்திக்கான் கொடிகளை ஏற்றுவதற்கு இந்தியா உட்பட 119 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.

இஸ்ரேல், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 8 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 45 நாடுகள் நடுநிலை வகிப்பதாக கூறி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, இந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் எழுபதாவது பொதுச்சபை கூட்டம் நடைபெறும்போது நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் உலக நாடுகளின் கொடிகள் அணிவரிசையில் பாலஸ்தீனம் மற்றும் வத்திக்கான் கொடிகள் பறக்கவிடப்படும் என்று அறிவித்தது.

இதோ பட்டொளி வீச பாலஸ்தீனத்தினதும் வத்திக்கானினதும் கொடிகள் ஐ.நா.சபையில் பறக்கின்றன.

இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையிலான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர கொடியேற்றுவது மாற்றுத் தீர்வாக அமையாது.

அது இருநாட்டுக்கும் தெரியும். ஏன் உலகுக்கே அது தெரியும்.

காரணம் இந்தப் பிரச்சினை இன்று நேற்றல்ல நூற்றாண்டுகளாக இருந்துவரும் ஒரு பிரச்சினை. ஆனால் கொடியேற்றுவது நம்பிக்கைக்குரிய வலுவான சமிக்ஞை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

என்றோ பிறக்கும்… எப்படியும் அங்கீகாரம் கிடைக்கும் என்று கனவு கண்ட. பிறக்காத தேசத்தின் தேசத் தந்தையாகப் பார்க்கப்பட்ட யாசிர் அரபாத்தின் முயற்சிக்கு உயிர் கிடைத்திருக்கிறது என்பதை சொல்லிவிட்டு வெறுமனே கடந்து செல்ல முடியாது.

arafat-remains-390x285ஏனென்றால்…

பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக யாசிர் அரபாத் எடுத்த முயற்சிகள், பட்ட சிரமங்கள், செய்துகொண்ட சமரசங்கள், விட்டுக்கொடுத்த சம்பவங்கள், கெஞ்சிக் கூத்தாடிய தருணங்கள், வெகுண்டெழுந்து தோள்தட்டிய உணர்ச்சி மயமான காட்சிகள் எல்லாம், கணக்கில் அடங்கா.

ஆனால் நமக்குத் தெரிந்த தேசத்தந்தை என்று சொற் பதத்துடன் அரபாத்தை அணுக முடியாது.

இந்திய தேசத்தின் தந்தை காந்தி. சரி…

தென்னாபிரிக்காவின் தேசதந்தை நெல்சன் மண்டேலே. அதுவும் சரி…

கியூபாவை மீட்டெடுத்த தலைவன் பிடல் கஸ்ட்ரோ… ம்ம்ம்.

ஆனால் அரபாத் இதற்குள் அடங்க மாட்டார். பிறக்காத தேசத்திற்கு… எப்போதாவது ஒருநாள் பிறக்கும் என்ற நம்பிக்கையின் தந்தைதான் யாசிர் அரபாத்.

ஆம்… பாலஸ்தீனர்களின் அப்போதையே நம்பிக்கையே அரபாத்தான்.

அரபாத் மட்டும் அன்று இல்லையென்றால். பாலஸ்தீனம் என்று கொடியேற்ற ஒரு நாடே இருந்திருக்காது.

அரபாத் போல் ஒரு தலைவன் இன்னும் பாலஸ்தீனத்திற்கு கிடைக்கவில்லை. சமாதானம் என்றால் பூமுகம், சண்டை என்றால் போர்க்குணம் என்ற கருத்தை ஒத்தவர் அவர்.

ஒரு பக்கம், அமைதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். மறுபக்கம், இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்.

மண்டேலா கூட ஆரம்பத்தில் ஆயுதப் போராளியாக இருந்து பிறகு ஆயுதத்தை தூக்கியெறிந்துவிட்டு அமைதிப் போராட்டத்தில் குதித்தார். அதற்குப் பிறகு ஆயுதம் ஏந்தவேயில்லை.

ஆனால் அரபாத் இறுதிவரை ஆயுதத்தை கீழே போடவே இல்லை. ஆனால் அமைதிக்கான பேச்சுவார்த்தையையும் அவர் நிறுத்தவில்லை.

அதனால்தான் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசுகூட கொடுக்கப்பட்டது.

இவர் இரண்டு விதமான போராட்டத்தையும் கையாள்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும் என்றபோதும், தொடர்ந்து அவர் தமது போராளி இயக்க ஆதரவு நிலை குறித்து, மறுப்புத் தெரிவித்து வந்தது, பொருந்தாமலேயே இருந்துவந்தது.

அவர் வெளிப்படையாகவே, இஸ்ரேலுக்கு எதிரான நேரடி யுத்தத்தைத் தலைமைதாங்கி நடத்தலாமே என்றுதான் அரபுலகம் கேட்டது.

அதற்கு அரபாத் அமைதியாகவே இருந்துவிட்டார்.

ஒருவேளை அமைதிப் பேச்சுக்கள் மூலம் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்குமானால், அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த அமைதிக்கான காரணமாக இருந்திருக்கலாம்.

நல்லது நடக்க வேண்டும் என்பதுதான், அவரது நோக்கம் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கான வழி இதுதான் என்று தெளிவாக, தீர்மானமாக அவரால் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.

Palestinian flag raised at UN for first timeஎது எப்படியோ அரபாத்தின் கனவு பலித்துவிட்டது.

பாலஸ்தீனத்தின் கண்ணீர் வழிந்துவிட்டது.

– எஸ்.ஜே.பிரசாத் –

Share.
Leave A Reply