நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட 10 பேரின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் கணக்கில் காட்டாத ரூ. 100 கோடி சொத்துகள் சிக்கியது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்களது வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரூ.2 கோடி ரொக்கம் ஆகியவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வருமான வரித்துறை மூலம் தெரிய வந்த தகவல்கள்… பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த “புலி’ திரைப்படத்துக்கு முறையாக வருமான வரி செலுத்தப்படவில்லை என வருமான வரித் துறைக்கு புகார்கள் வந்தன.
அதே போல நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, ‘புலி’ பட இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வக்குமார், சிபு தமீன்ஸ், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அன்புச்செழியன், நிதி நிறுவன உரிமையாளர் ரமேஷ், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட 10 பேர் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித் துறைக்கு புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் 35 இடங்களில் ஒரே நேரத்தில் புதன்கிழமை காலை திடீர் சோதனையைத் தொடங்கினர்.
இதில் புகார் கூறப்பட்ட அனைவரது வீடுகள், அலுவலகங்கள், ஓய்வு இல்லங்கள் ஆகியவற்றில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனை தமிழகம், கேரளம், தெலங்கானா என 3 மாநிலங்களில் 35 இடங்களில் 400 வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய ரெய்டு இதுதான். புதன்கிழமை காலை தொடங்கிய சோதனை வியாழக்கிழமை இரவையும் தாண்டி நீடித்தது. கணக்கில் காட்டாத ரூ.100 கோடி சொத்துகள்…
இந்தச் சோதனையில் நடைபெற்ற 10 பேரின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கணக்கில் வராத ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல 10 பேர் வீடுகளிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் 10 பேரும் கணக்கில் காட்டாமல் ரூ.100 கோடி சொத்துகளை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் பணப் பரிவர்த்தனையை உறுதி செய்துள்ள வருமான வரித் துறை அதிகாரிகள், அதற்கு வருமான வரியாக ரூ.30 கோடி விதித்திருப்பதாகவும், அதற்கு அபராதக் கட்டணம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்தச் சோதனையில் ஒவ்வொருவர் வீட்டிலும், அலுவலகத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கம் பற்றிய தகவல்களை தெரிவிக்க வருமான வரித் துறையினர் மறுத்துவிட்டனர்.

Share.
Leave A Reply