சுயாதீன தொலைக்காட்சிக்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் முள்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஆறு பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தனது விளம்பரங்களை விளம்பரப்படுத்தி சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு 115 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதுடன், ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரத்தை விளம்பரப்படுத்தாமல் இருப்பதற்காக 87 இலட்சம் ரூபாவை மீளச் செலுத்தி சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன, பொது முகாமையாளர் அருண மூர்த்தி விஜேசிங்க, பிரதி முகாமையாளர் உபுல் ரஞ்சித் ஆகியோரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15 – 16 மற்றும் 29 – 30 ஆகிய தினங்களிலேயே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள 800 முறைப்பாடுகளில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் இரண்டாவது முறைப்பாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோரை விசாரித்ததில் நாமே சிறந்தவர்கள்:மக்ஸ்வெல்
02-10-2015
காணாமல் போனவர்களை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் முன்வைத்த விமர்சனங்களுக்கு, ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம பதில் வழங்கியுள்ளார்.
காணாமல் போனவர்களைப் பற்றிய பணியை ஆற்றுவதற்கு, தனது ஆணைக்குழுவை விடச் சிறந்தவர்கள் வேறு யாரும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான விசாரணை அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்து உரையாற்றிய ஹுஸைன், ‘முன்னைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, அதனது நம்பகத்தன்மை, பயன்தருநிலை போன்றவை பற்றிய கேள்விகளுக்கு மத்தியிலும் தனது பணியைத் தொடர்ந்து வருகின்றது.
இந்த ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டுமெனவும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஆலோசனையோடு உருவாக்கப்படும் நம்பகத்தன்மையும் சுயாதீனமானதுமான நிறுவனமொன்றுக்கு, ஆணைக்குழுவிடம் காணப்படுகின்ற விடயங்கள் மாற்றப்பட வேண்டுமெனவும் நாம் எண்ணுகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், பதிலளித்துள்ள பரணகம, ‘எங்களுடைய செயற்பாட்டில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடனேயே காணப்படுகின்றோம்.
மக்கள் வாக்குமூலங்களை வழங்கும் போது, இராணுவப் படைகளோ அல்லது பொலிஸ் அதிகாரிகளோ அந்த அறைகளுள் காணப்பட்டதில்லை’ எனத் தெரிவித்த அவர், வடக்கு – கிழக்கிலிருந்து 16,000 பேர் உள்ளடங்கலாக 19,000 பேரினது வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
விசாரணைகள் குறித்த அழைப்பு விடுக்கும் போது, அதற்கான வரவேற்பு அதிகமாகக் காணப்பட்டதாகக் குறிப்பிடும் அவர், ஓர் அமர்வுக்கு 300 பேரை அழைத்தால், 1,000 பேர் பங்குபெற வந்திருப்பர் எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, அவர்களில் ஒருவர் கூட திருப்பியனுப்பப்பட்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ‘அமர்வுகள் பிந்திய நேரங்களில், மக்கள் தங்களுடைய கிராமங்களுக்குச் செல்வதற்காகப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது’ என, அவர் மேலும் தெரிவித்தார்.
‘முறைப்பாட்டாளர்களது முறைப்பாடுகள் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற, புலனாய்வு செய்யும் அணியினரை அவர்களது வீடுகளுக்கு அனுப்பினோம்.
அவர்களுடைய முறைப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு எழுதியனுப்பினோம். புனர்வாழ்வு விடயம் தொடர்பாகவும் நாங்கள் கேட்டறிந்ததோடு, அதிகாரிகளது பதில்கள் தாமதமானவையாகவோ அல்லது முறையானவையாகவோ இல்லாதவிடுத்து, அதற்கு நடவடிக்கை எடுத்தோம்’ என அவர் குறிப்பிட்டார்.
‘இதை விட நாம் என்ன செய்ய முடியும்? எம்மை விடச் சிறந்த பணியை, வேறு எவரும் செய்ய முடியும். எங்களுடைய பணியின் பாரியளவிலான தன்மை குறித்து மக்கள் உணர வேண்டும். முடிவுகளைக் காண்பிப்பதற்கு, காலமெடுக்கும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.