கொட்டகெத்தன பெண்களின் தொடர் படுகொலைகளால் நாடளாவிய ரீதியில் பேசப்படுகின்ற ஒரு பிரதேசம். கடந்த 8 வருடங்களில் 17 பெண்கள் கொடூரமான முறையில் பல்வேறு விதமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 18 ஆவது உயிரும் காவு கொள்ளப்பட்டுள்ளது.
நாதன் பாப்பு. 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய். இரத்தினபுரி கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகெத்தன ஓப்பாத்த தோட்டத்தின் மேற் பிரிவில் வசித்தவர்.
அதே தோட்டத்தில் தபால் விநியோகஸ்தராக இவரது கணவர் வேலை பார்க்க பாப்புவோ தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து குடும்ப வண்டியை ஓட்ட உதவினார்.
பாப்புவின் இரு மகன்மாரும் திருமணமாகி ஒவ்வொரு பிள்ளைகளுக்கு தந்தையாகியிருந்த நிலையில் பாப்புவின் வாழ்வும் சாதாரணமாகவே கழிந்து வந்தது.
இந்நிலையில்தான் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் 1.40 மணியளவில் பாப்பு சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் அவர் கொழுந்து பறிக்கும் தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கஹவத்தை பெண் படுகொலை பீதி மீண்டுமொருமுறை தலைதூக்கியுள்ளது.
பாப்பு வழைமை போன்றே கொழுந்து பறிக்கச் சென்றிருந்ததுடன் வேலையை முடித்து விட்டு வீடு செல்லும் போதே இந்த கொடூரத்துக்கு உள்ளாகியுள்ளார்.
வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சடலமாக பாப்பு இருந்த போது அது தொடர்பில் தோட்ட மக்கள் 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக உடனடியாகவே பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே ஸ்தலத்துக்கு கஹவத்த பொலிஸார் உடனடியாக சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தேயிலை தோட்டத்தில் 100 மீற்றர்களுக்கும் மேல் நீண்டு செல்லும் இரத்தக் கறைகள் காணப்படும் நிலையில் பாப்பு விரட்டி விரட்டி வெட்டப்பட்டிருக்கலாம் அல்லது வேறு இடத்தில் வெட்டிக் கொலை செய்து விட்டு சடலம் காணப்பட்ட இடத்துக்கு தூக்கி கொண்டு வந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக பாப்புவின் சடலத்தில் 5 ஆழமான வெட்டுக் காயங்கள் சட்டவைத்திய அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் அந்த காயங்கள் ஊடாக அதிகளவு இரத்தம் வெளியேறியமையே பாப்பு உயிரிழக்க காரணமாக அமைந்ததாக பிரேத அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.
உண்மையில் பாப்புவின் சடலத்தை பொலிஸார் ஸ்தலத்தில் அவதானித்த போது பல்வேறு ஊடகங்களுக்கு அது தகவலளித்தது.
அவரது உடல் காணப்பட்ட நிலைமையானது பாப்பு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்பியது. எனினும் பிரேத பரிசோதனையில் பாப்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரியவராத நிலையில் சடலத்தின் பாகங்கள் மேலதிக ஆய்வுகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் பொரளை ஜீன்டெக் நிறுவன விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனைவிட பாப்புவின் மரணத்துக்கு பிரதானமாக வித்திட்ட காயம் அவரது தலையில் காணப்பட்ட வெட்டுக்காயமாகும்.
அந்த வெட்டுக் காயமானது மண்டையோட்டையே பாதித்திருந்ததுடன் பாப்புவின் கைகள் மற்றும் தோள்பகுதியில் காணப்பட்ட ஆழமான காயங்கள் கொலையாளியிடம் இருந்து அவர் தப்பிக்க மேற்கொண்ட போராட்டத்தை பறைசாற்றுவதாகவே பொலிஸார் பார்க்கின்றனர்.
மிகக் கொடூரமாக பாப்பு இவ்வாறு கொலை செய்யப்பட்டு நேற்றுடன் நான்கு நாட்கள் கடந்தும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
எனினும் விசாரணைகளில் பல முன்னேற்றங்களை அவதானிக்க முடிகின்றது.
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ், இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த சிறிவர்தன ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரியின் கீழ் விசேட பொலிஸ் குழுக்கள் 20 விசாரணைகளை நடத்துகின்றன.
இந்த விசாரணைகளுக்கென இரத்தினபுரி மாவட்டம் மற்றும் அதனை அண்டிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 15 குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் விசேட கடமைகளுக்காக கொட்டகெத்தன ஓப்பாத்த தோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதற்கு மேலதிகமாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன, புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் விசேட குழுவொன்றும் கொட்டகெத்தனவில் முகாமிட்டுள்ளது.
இதனைவிட விசேட தேடுதல்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 200க்கு மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும் கொட்டகெத்தன பகுதியில் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளனர்.
உண்மையில் இவ்வளவு பிரமாண்டமான நடவடிக்கைகளில் கொட்டகெத்தனவில் இதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுடன் பாப்புவின் படுகொலைக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து கண்டறிவது பிரதான பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அத்துடன் இது வரையில் கொட்டகெத்தன, ஓபாத்த, திம்புலாவல, வராபிட்டிய என அக்கம் பக்க ஊர்களில் உள்ளவர்களையும் உள்ளடக்கி சுமார் 3000 பேரின் வாக்கு மூலங்களை விசாரணை பொலிஸ் குழுக்கள் பெற்றுள்ளன.
அத்துடன் பாப்புவின் சடலம் காணப்பட்ட இடத்திலிருந்தும் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலின் போதும் கொலையாளியை தேடிய வேட்டையை முன்நகர்த்தத் தக்க சில தடயங்களையும் சேகரித்துள்ளனர்.
குறிப்பிட்டு சொல்வதானால் விசேட விசாரணையாளர்களுக்கு பாப்புவுடன் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்த பெண் ஒருவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் அரைகாற்சட்டையணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேயிலை தோட்டம் ஊடாக ஓடியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிட பாப்புவின் சடலம் காணப்பட்ட இடத்துக்கு அருகே கைவிடப்பட்ட ஒரு ஜோடி செருப்பு பொலிஸ் தடயவியல் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
மண்ணிறமான அந்த செருப்பு கொலையாளி அணிந்து வந்ததாக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் ‘ரொனீ” எனப்படும் பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகள் தேடல்கள் இடம்பெற்ற போதும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவை வெற்றியளிக்கவில்லை.
எனினும் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு அமைய பாப்புவை கொலை செய்தவர் பெரும்பாலும் உள்ளூர்க்காரராக இருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கு பொலிஸார் வந்துள்ளனர்.
அதாவது கொட்டகெத்தன உள்ளிட்ட சர்ச்சைக்குரிய அதன் அண்மைய கிராமங்களையும் உள்ளடக்கி 3000 பேரிடம் பெற்ற வாக்குமூலத்துக்கு அமைவாகவே பொலிஸார் இந்த ஊகத்துக்கு வந்துள்ளனர்.
பாப்பு கொலையுண்ட நாள் அதற்கு முன்னைய பின்னைய நாட்களில் கொட்டகெத்தனவுக்குள் யாரும் புதிதாக வந்து குடியிருக்கவோ அவ்வூரிலிருந்து தலைமறைவாகவோ இல்லை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ள நிலையில் கொலையாளி ஊருக்குள் இருக்கும் ஒருவராக இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த காலங்களில் கொட்டகெத்தன மர்மக் கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறி பலர் கைது செய்யப்பட்டனர்.
மேல் நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்றால் சிலர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் சில சம்பவங்கள் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது.
உண்மையில் கொட்டகெத்தன என்பது ஒரு மூடப்பட்ட ஊர். அந்த ஊரில் வாழும் பெரும்பாலானோர் சாதாரண பொருளாதார நிலைமையைக் கொண்டவர்கள்.
கொட்டகெத்தனவுடன் சேர்ந்து மேலும் பல ஊர்கள் அங்கு வியாபித்துள்ளன. வராபிட்டிய, நிலதுர, ஓபாத்த, திம்புல்வல என அவற்றை அடையாளப்படுத்தலாம்.
கடந்த 8 ஆண்டுகளாக இடம்பெறும் மர்மக் கொலைகள் கொட்டகெத்தன மற்றும் அதனுடன் ஒட்டியுள்ள நான்கு கிராமங்களை அண்மித்தே நடந்துள்ளன.
கொட்டகெத்தன முதலாவது பெண் கொலை கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி நடந்தது. அன்று முதல் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலான 4 வருட காலப்பகுதிக்குள் 8 பெண் கொலைகள் இடம்பெற்றன.
2008 ஆம் ஆண்டு இரு கொலைகளும் 2010 ஆம் ஆண்டு இரு கொலைகளும் 2011 ஆம் ஆண்டு 4 கொலைகளும் இவ்வாறு இடம்பெற்றிருந்தன. 2009 ஆம் ஆண்டு எவ்விதமான கொலைகளும் கொட்டகெத்தனவில் பதிவாகவில்லை.
எனினும் 2012 ஆம் ஆண்டு முதல் இக் கொலைகள் புதியவடிவமெடுத்தன. அதாவது இதுவரை தனித்தனியாக இடம்பெற்ற பெண் கொலைகள் 2012 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி நயனா நில்மினி, காவித்யா சத்துரங்கனீ ஆகிய தாயையும் மகளையும் கொன்றதனூடாக இரட்டைக் கொலைகளாக பதிவாகத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி மற்றொரு இரட்டைக் கொலை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதேயாண்டு ஜூலை 18 ஆம் திகதி மற்றொரு இரட்டைக் கொலையும் பதிவானது.
2013, 2014 ஆம் ஆண்டுகளில் அமைதியாக இருந்த கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி தமிழ்ப் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
சந்திராணி சுவர்ணலதா
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி சந்திராணி சுவர்ணலதா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு ஓடையில் வீசப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அதனை அவரது இரண்டாவது மகனே செய்ததாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பிலான வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தான் தற்போது நாதன் பாப்பு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொட்டகெத்தனவில் ஏன் இப்படி தொடர்ச்சியாக முடிவின்றி பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டியது மிக முக்கியமானதாகும்.
ஆரம்பத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனை கும்பலுடன் தொடர்புபடுத்தி இந்த விவகாரம் பேசப்பட்டது.
எனினும் கொட்டகெத்தனவின் பல கொலைகள் தொடர்பில் சந்தேக நபர்கள் பலர் கைதான போதும் பெண் கொலைகள் மட்டும் நின்றபாடில்லை.
இதனால் இப்பெண் கொலைகள் பலவும் ஒரே நபரால் அல்லது குழுவால் மேற்கொள்ளப்படுகிறதா? அப்படியானால் அவர் அல்லது அவர்கள் இன்றும் சுதந்திரமாக திரிகிறார்களா? என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது.
இதற்குரிய பதிலை தர யாரும் முன்வராத போதும் கொட்டதென்ன தொடர்பிலான விசேட விசாரணையொன்றை முன்னெடுத்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன (தற்போது வர்த்தகர் ஒருவரை கடத்திக் கொன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ளார்.) பிரதான சந்தேக நபர் தொடர்பிலான வெளிப் படுத்தல்களை செய்துள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரணை செய்த அதிகாரி என்ற ரீதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சொல்வதை அப்படியே நிராகரித்துவிட முடியாது.
வாஸ் குணவர்த்தனவின் விசாரணை தகவல்களின் படி கொட்டகெத்தனவில் இடம்பெற்ற 14 கொலைகளிலும் ஒரே குழுவே சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
‘இதில் வாஸ் குணவர்த்தன’ பிரதான சந்தேக நபராக ஒருவரை சண்டியரை பெயரிட்டுள்ளார். எனினும் குறித்த நபர் இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்பதுடன் அவர் இப்போது எங்கு எப்படி உள்ளார் என்பதையே அறிய முடியாதுள்ளது.
இந்நிலையில் கொட்டகெத்தனவில் இந்த ஆண்டு மீண்டும் தலைதூக்கியுள்ள பெண் கொலைகள் தொடர்பில் இன்னும் ஆழமான விசாரணைகள் அவசியமாகும்.
அப்போதுதான் தொடரும் கொலைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து கொட்டகெத்தன என்றாலே பெண்களும் ஏற்படும் பயத்தை நீக்க முடியும்.