ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16 ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றினூடாகக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக இலங்கைக்கு சார்பாக தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் உள்ளது என்பதையும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்திய மத்திய அரசுக்கு உள்ளது என்பதையும் தெளிவாகத் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசக் குற்றங்கள் புரிந்தவர்கள் தொடர்பில் இலங்கையிலேயே விசாரணை மேற்கொள்வது என்பது நீதியை பரிகசிப்பது போன்ற செயல் எனவும் தாம் ஏற்கனவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்டு, கடந்த முதலாம் திகதி ஜக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக அமையாது எனவும் தமிழக முதலர்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.