நாமக்கல்: என்னுடைய தற்கொலை வீடியோ எனது கையடக்க கணினியில் (டேப்) உள்ளது என்று விஷ்ணுபிரியா எழுதிய மேலும் 2 பக்க கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக விஷ்ணுபிரியாவிடம் அதிகமுறை செல்போனில் தொடர்பு கொண்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் விஷ்ணுபிரியாவின் தோழியும், கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டுமான மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து 9 பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றி இருப்பதாக கூறி, சேலத்தில் போலீசார் அந்த 9 பக்க கடிதத்தையும் ஏற்கனவே வெளியிட்டனர்.
அப்போதே அரசியல் கட்சியினரும், விஷ்ணுபிரியாவின் உறவினர்களும் அந்த கடிதத்தில் மேலும் சில பக்கங்கள் இருப்பதாகவும், அதை போலீசார் வெளியிடவில்லை என்றும் குற்றச்சாட்டை கூறி வந்தனர்.
அதை நிரூபிக்கும் வகையில் விஷ்ணுபிரியா எழுதிய கடிதத்தின் மேலும் 2 பக்கங்கள் நேற்று வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில், ”என்னுடைய தற்கொலை வீடியோ எனது கையடக்க கணினியில் (டேப்லெட்) இருக்கும். அதை பாருங்கள்.
நான் இறந்த பிறகு என் கையடக்க கணினியை மகேஸ் அக்காவிடம் கொடுத்துவிடுங்கள். கீதாஞ்சலிருக்கு ரூ.4 ஆயிரம் கொடுங்கள்.
திவ்யாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவிடுங்கள். பத்திரிக்கையாளர்கள், போலீசாருக்கு எனது வேண்டுகோள், என்னை அமைதியாக சாகவிடுங்கள். எனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம்.
நான் கத்தியால் அறுக்கப்படுவதை வெறுக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பல பிரேத பரிசோதனைகளை பார்த்து உள்ளேன்.
அதனால்தான் எனக்கு அது நடக்கக்கூடாது என விரும்புகிறேன். எனது தற்கொலை தொடர்பாக உங்களுடைய அனைத்துவித சந்தேகங்களும் வீடியோ கேசட்டில் தெளிவாக்கப்படும்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.
மேலும், அந்த கடிதத்தின் கீழ் விஷ்ணுபிரியா என்று கையெழுத்தும் போடப்பட்டு இருந்தது.
மேலும் அந்த கடிதத்தில் அம்மாவுக்கு என்று குறிப்பிட்டு ஏ.டி.எம். கார்டு ரகசிய எண், சிறிய மடிக்கணினி ரகசிய எண், செல்போன் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் அந்த கடிதத்தில் 15-7-15 என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அந்த கடிதத்தை விஷ்ணுபிரியா முன்பே எழுதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஷ்ணுபிரியாவின் அறையில் இருந்து ஏற்கனவே மீட்கப்பட்ட கடிதம், மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
அதன் முடிவுகள் வந்த பிறகே கைப்பற்றப்பட்ட கடிதத்தில் உள்ள கையெழுத்து விஷ்ணுபிரியா எழுதியது தானா? அவரது மடிக்கணினியில் இருந்து விவரங்கள் எதுவும் அழிக்கப்பட்டு உள்ளதா? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தற்போது, விஷ்ணுபிரியா எழுதியதாக மேலும் 2 பக்க கடிதம் வெளியாகி இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.