“கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறியாமலே கண்களிலிருந்து கண்ணீரை பெருக்கெடுக்கச் செய்தது. அனைவருமே அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள்.”- பத்து வயது பாலகனின் படுகொலை குறித்து சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம்
“அன்று 25 ஆம் திகதி ரவிந்து பாடசாலைக்கு செல்லவில்லை. ” அம்மா, அப்பா இன்றைக்கு எங்கள் வகுப்பு ஆசிரியர் வர மாட்டார். பாடசாலைக்குச் சென்றாலும் பாடங்கள் படிப்பிக்க மாட்டாங்க.
நான் இன்றைக்கு வீட்டில் இருக்கின்றேன் ” என்று தனது பெற்றோருக்கு எடுத்துக் கூறி அன்றைய தினம் வீட்டிலிருப்பதற்கான அனுமதியைப் பெற்றான் ரவிந்து.
பெற்றோரும் தமது செல்ல மகனின் விருப்பத்துக்கு குறுக்காக இருக்கவில்லை. “ சரி, சரி மகன் குழப்படி பண்ணாமல் இருக்கனும்” என்று ரவிந்துவின் தாய் அறிவுரை வழங்கினாள்.
எனவே அன்று ரவிந்துவின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. துள்ளிக் குதித்து சென்று காலை வேளையிலேயே தொலைக்காட்சிப் பெட்டியை இயங்கச் செய்து கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தான்.
இதனிடையே ரவிந்துவின் அக்கா தனது தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றாள். இதனையடுத்து ரவிந்துவின் மூத்த சகோதரன் சுகவீனமுற்று இருப்பதால், தாயும் மூத்த சகோதரனும் வைத்தியசாலையை நோக்கி புறப்பட்டுச் சென்றார்கள்.
எனவே, ரவிந்துவும் அவனது தந்தையுமே அன்று வீட்டில் இருந்தார்கள். தந்தையும் சிறிது நேரத்தில் “மகன் நான் இன்னும் கோழிகளுக்குத் தீனி வைக்கவில்லை வைத்துவிட்டு வருகின்றேன்.
நீங்கள் எங்கேயும் போகாமல் வீட்டில் இருங்கள் நான் வருகின்றேன். ” என்று கூறி வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருந்த கோழிப் பண்ணையை நோக்கிச் சென்றார்.
எனினும், அதன்பின் சிறிது நேரத்தில் கோழிப் பண்ணையில் தனது வேலைகளை முடித்துவிட்டு தந்தை வீட்டுக்கு வந்த போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த ரவிந்துவைக் காணவில்லை.
“ மகன்… மகன்.. ரவிந்து எங்கே இருக்கின்றாய் ? ” என்று பெயர் சொல்லி அழைத்தவாறு வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேட ஆரம்பித்தார். எனினும், எங்கு தேடியும் ரவிந்து இருக்கவில்லை.
இதனால் குழப்பமடைந்த தந்தை வீட்டின் சுற்றுப்புற பிரதேசத்தில் மகனைத் தேட விழைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்து பலத்த குரலில் “ரவிந்து, ரவிந்து” என்று பெயர் சொல்லி அழைத்தவாறே தேடிச் சென்றார்.
இதன்போது சத்தம் கேட்டு அயலவர்கள் பலரும் ரவிந்துவின் தந்தையுடன் கைகோர்த்தனர். இருப்பினும், ரவிந்து தொடர்பாக எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து அயலவர்களில் ஒருவர் ” உங்களுடைய மகன் அடிக்கடி பெரேராவின் வீட்டுக்கு போய் வருவான் தானே. அங்கு ஏதும் சென்றானோ தெரியவில்லை. வாருங்கள் அங்கு சென்று பார்ப்போம்” என்று கூறினார்.
பெரேரா ரவிந்துவின் சித்தப்பாவின் கல் குவாரியில் வேலை செய்யும் தொழிலாளி. எனவே ரவிந்துவின் சித்தப்பா அவன் தங்குவதற்கென்று ஓர் அறையுடன் கூடிய சிறிய வீட்டையும் ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.
எனவே, ரவிந்துவும் அடிக்கடி அங்கு சென்று விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் தான் அவன் அங்கு சென்றிருப்பானோ என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது ஆகவே ரவிந்துவின் வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்திலிருந்த பெரேராவின் தங்குமிடத்தை நோக்கிப் படையெடுத்தார்கள்.
அவர்கள் அங்கு செல்லும் போது அந்த சிறிய வீட்டின் முன் கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததுடன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதன் சுற்றுப்பிரதேசத்தில் சனநடமாட்டம் இருக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறியாமலே கண்களிலிருந்து கண்ணீரை பெருக்கெடுக்கச் செய்தது.
அனைவருமே அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள். அந்த சிறிய பாலகன் ரவிந்து கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் குருதி வௌ்ளத்தில் சடலமாய்க் கிடந்தான்.
எனவே, இது தொடர்பாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவே அத்துருகிரிய பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
அத்துருகிரிய கப்புறுகொட பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றான். என்றவாறே அந்த தகவல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து அத்துருகிரிய பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினர் குறித்த பிரதேசத்தை நோக்கிச் சென்றனர். பொலிஸார் அங்கு செல்லும் போது சிறுவனின் சடலத்தை சுற்றி அயலவர்கள் குழுமியிருந்ததுடன், அந்த சிறிய வீட்டில் தங்கியிருந்த பெரேராவும் தலைமறைவாகியிருந்தான்.
இதன்போது, இது தொடர்பாக ரவிந்துவின் தந்தையிடம் பொலிஸார் வாக்குமூலமொன்றையும் பதிவு செய்தனர்.
“சேர்! பெரேரா எனது தம்பியின் கல் குவாரியில் சுமார் ஒரு வருடத்துக்கு முதல் வேலைக்கு சேர்ந்தான். அவனை நாங்கள் இங்கு வேலைக்கு சேர்ப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை.
அதுமட்டுமின்றி அவன் இங்கு வேலைக்கு வந்த போது கூட தம்பி அவன் தொடர்பாக எதுவுமே விசாரித்துப் பார்க்கவில்லை. குறைந்தது அவனிடமிருந்து தேசிய அடையாள அட்டையைக் கூடப் பெற்றுக்கொள்ளவில்லை.
அதற்கு காரணம் கல் உடைப்பதில் பெரேரா திறமைசாலியாகவிருந்தான். தம்பி அவன் தங்குவதற்கு வீடொன்றையும் கொடுத்தான். அதற்கு வாடகையென்று எதுவுமே அவனிடத்தில் அறவிடவுமில்லை.
பெரேரா எனது இளைய மகன் ரவிந்துவுடன் மிக நெருக்கமாகப் பழகுவான். ரவிந்துவும் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டான். மாமா மாமா…. என்று இங்கேயே ஓடி வந்து விடுவான்.
அதனால் வந்த விளைவு தான் சேர் இது. என்று கண்ணீருடன் ரவிந்துவின் தந்தை தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். எனவே, ரவிந்துவின் கொலை, பெரேரா தலைமறைவாகியுள்ளமை என்பன பொலிஸாருக்கு பெரேரா தான் இந்த கொலையைப் புரிந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை உண்டு பண்ணியது.
அதன்படி முதலில் அவன் பணிபுரிந்த கல் குவாரிக்கு சென்றனர். எனினும் அவன் அங்கு இருக்கவில்லை. இதனையடுத்து பெரேராவை கண்டுபிடிப்பதற்கு பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியும் பெறப்பட்டது.
அதன்பின்னர் அவன் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு மாதிரி உருவப்படத்தையும் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
அவ்வாறு பெற்றுக் கொண்டதின் மூலம் அவன் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சமூக விரோத குற்றச்செயல்களின் ஈடுபடும் பிரதான குற்றவாளிகள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்களில் ஒருவன் என்பது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, பெரேரா 20 வருடங்களுக்கு முன் 23 வயதுடைய இளைஞன் ஒருவனின் கை, கால்களைத் துண்டித்து படுகொலை செய்தமை தொடர்பில் 4 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து பிணையில் வெளியில் வந்தவன் என்பதும் தெரியவந்தது.
எனவே, இச்சிறுவனின் கொலையுடன் நேரடியாக பெரேராவுக்கு தொடர்பிருக்க வேண்டும் என்று பொலிஸார் உறுதியாக நம்பினார்கள்.
இதனையடுத்து இரகசிய தொலைபேசி இலக்கமொன்றின் ஊடாக பெரேரா பியகம பிரதேசத்தில் இருக்கின்றான் என்று தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே சம்பவம் நடைபெற்ற தினத்துக்கு மறுநாள் காலை பியகம பிரதேசத்தில் வைத்து பெரேராவை பொலிஸார் கைது செய்தனர்.
அதன்பின் சந்தேக நபரான பெரேராவிடம் பொலிஸார் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளில் மூலம் அவனை பற்றிய பல விடயங்கள் வெளிவர ஆரம்பித்தன.
கொத்தலாவல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெரேரா பல வருடங்களுக்கு முன் கல் குவாரியில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் அவனது பாலியல் உறுப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளை பெற்றும் வந்திருக்கின்றான்.
இதனால் பெரேராவுக்கு திருமணம் என்பது வெறும் கனவாகவே போய்விட்டது. இக்காலப் பகுதியில் தான் 23 வயதான இளைஞன் ஒருவனைப் படுகொலை செய்த குற்றத்துக்காக 4 வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து பிணையில் வெளியில் வந்திருக்கின்றான்.
இதனால் குடும்ப உறுப்பினர்களும் பெரேராவை குடும்பத்தை விட்டு ஒதுக்கியே வைத்துள்ளனர். இந்நிலையில் தான் ரவிந்துவின் சித்தப்பாவின் கல் குவாரிக்கு வேலைக்கு வந்துள்ளான்.
அங்கு கைநிறைய சம்பளம், தங்குவதற்கான இடம் என்று எந்தக் குறையும் பெரேராவுக்கு இருக்கவில்லை. மிகவும் சுமுகமான முறையிலேயே பெரேரா வேலைகளை செய்து வந்துள்ளான்.
அதுவும் பெரேராவுக்கும் சிறுவன் ரவிந்துவுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான ஒரு உறவு காணப்பட்டது. ரவிந்துவுக்கு இனிப்பு பண்டங்களை வாங்குவதற்கு பணம் கொடுப்பது, சாப்பாடு வாங்கிக்கொடுப்பது என்று ரவிந்து மீது பெரேரா பிரியமுடனே இருந்தான்.
எனினும், இவையெல்லாமே ரவிந்துவின் தந்தையின் மீது இருந்து வந்த விரோதத்தினால் மாற ஆரம்பித்தது.
இது தொடர்பாக பெரேரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தெரிவித்த வாக்குமூலத்தில்
“இந்தச் சிறுவன் ரவிந்துவை எனக்கு மிகவும் பிடிக்கும். எனினும், எனக்கு அவனுடைய அப்பாவைப் பிடிக்கவில்லை.
அதற்குக் காரணம் ரவிந்துவின் அப்பா எப்படியாவது நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து என்னைத் துரத்த வேண்டும் என்பதில் குறியாகவிருந்தார். ஆகவே அவனை பழிவாங்க வேண்டும் என்று எண்ணினேன்.
எனினும், அவனைக் கொலை செய்வதை விட அவனுடைய செல்ல மகனை கொலை செய்வதே அவனுக்கு அதிகளவான வேதனை தரும் என்று நான் எண்ணியதால் ரவிந்துவை கொலை செய்யத் திட்டமிட்டேன்.
அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். என்றாவது அந்தக் குழந்தையை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோளாகவிருந்தது. நாளும் வந்தது.
அன்று 25 ஆம் திகதி காலையிலேயே சிறுவன் என்னைத் தேடி வந்தான். ‘ மாமா… மாமா.. காசு இருந்தால் தாருங்கள் சொக்லெட் வாங்குவோம்” என்று கேட்டான்.
அந்த சந்தர்ப்பத்தை நான் சரியாக பயன்படுத்திக்கொண்டேன். அறையிலிருக்கும் பையில் பணம் இருக்கின்றது போய் எடுத்து வா என்று அறையினுள்ளே அவனை அனுப்பினேன்.
அதன்பின் நான் ரவிந்துவின் பின் னால் சத்தமில்லாமல் அறையினுள் சென்று கத்தியால் தாக்க ஆரம்பித்தேன். கை, கால் இரண்டையும் உடலிலிருந்து வேறாக்கினேன். தலையிலும் பலமாக தாக்கினேன்.
சிறிது நேரத்தில் அவன் துடிதுடித்து இறந்து போனான். பின் நான் உட்புறமாக கதவை தாழிட்டு துணிவகைகளையும் எடுத்துக்கொண்டு பின்புற வாசல் வழியாக வெளியில் வந்தேன்.
பின் நான் வழமையாக குளிக்கும் இடத்துக்கு சென்று குளித்து ஆடையையும் மாற்றிக்கொண்டு, கத்தியையும் நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு கல் குவாரியிலுள்ள கற்பாறையினுள் கத்தியை ஒளித்து விட்டு முச்சக்கர வண்டியில் ஏறி அத்துருகிரிய பிரதான சந்தியை வந்தடைந்தேன்.
முச்சக்கர வண்டி சாரதிக்கு நான் பணம் கொடுக்கவும் இல்லை. பிறகு தருகின்றேன் என்று வந்துவிட்டேன். அதற்குபிறகு 170 இலக்க பஸ்ஸில் ஏறி ராஜகிரியவுக்கு வந்தேன்.
அங்கு நான் வழமையாக குடு புகைக்கும் இடத்துக்கு சென்று குடு பக்கெட் ஒன்றினை வாங்கி புகைத்தேன். என்னுடைய ஆணுறுப்பு பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்று யாருக்குமே தெரியாது.
இருப்பினும் என்னால் மற்றவர்களைப் போல் பாலியல் இன்பம் காண முடியவில்லையே என்ற வருத்தம் என்னுள் இருக்கின்றது.
கல் குவாரியில் பணிபுரியும் ஆண்கள் அவர்களுடைய பாலியல் சம்பந்தமான சுவராசியமான அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். என்னையும் சில சமயங்களில் கேலி செய்வார்கள்.
எனக்கு அப்போதெல்லாம் பெரும் கவலையாகவிருக்கும். எனினும், நான் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன். என்னுடைய குடும்பத்தவர்கள் அனைவரும் கொத்தலாவலவில் இருக்கின்றார்கள்.
இருப்பினும், அவர்கள் அனைவருமே என்னை இன்று வெறுக்கின்றார்கள். ஆகவே, தான் ரவிந்துவை கொலை செய்ததன் பின் எங்கு செல்வது என்று தெரியவில்லை.
ஒரு வழியாய் தப்பி பியகமவுக்கு வந்தேன். இதன்போதே பொலிஸாரிடம் கையும் களவுமாக அகப்பட்டேன்.”என்று பெரேரா தனது வாக்குமூலத்தில் தெரிவித்தான்.
அதன்பின் அத்துருகிரிய பொலிஸார் சந்தேக நபரான பெரேரா பயன்படுத்திய கத்தியை மறைத்து வைத்த இடத்தைப் பார்வையிடுவதற்காக குறித்த கல் குவாரிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்போதே பெரேரா கால் தவறி வீழ்ந்ததில் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.
எனவே, விரோதம், கோபம், அறியாமை என்பனவே இத்தகைய கோர சம்பவங்களுக்கு காரணங்களாக அமைகின்றன. மேலும், பணியிடங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்கள் தொடர்பாக எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் இத்தகைய கோர சம்பவங்களைத் தவிர்க்கலாம்.
-வசந்தா அருள்-